பல்வேறு நாடுகளில் நாளுக்கு நாள் குரங்கு அம்மை பரவல் அதிகரிக்கும் நிலையில், அந்நோய் பாதிப்பை சர்வதேச சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
இந்தியாவில் முதன் முதலான ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது.
அதன் பின்னர் வெளிநாடுகளில் இருந்து வந்த மேலும் இருவருக்கு அந்நோய் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இதன் காரணமாக, நாட்டில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் அனைத்து சர்வதேச பயணிகளுக்கு சுகாதார பரிசோதனையை உறுதி செய்யுமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், நாட்டில் நான்காவது நபராக டெல்லியில் ஒருவருக்கு பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தெலங்கானாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.