சதம் வாய்ப்பை தவறவிட்ட தவான்: இந்தியா திரில் வெற்றி!

நேற்று நடைபெற்ற இந்தியா வெஸ்ட் இண்டீஸ் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தத் தொடரை இந்தியாவில் உள்ள இந்த டிவி சேனலும் ஒளிபரப்ப உரிமைகளை வாங்க முன்வரவில்லை.

பேன்கோட் எனப்படும் செயலி மூலம் பார்த்துக் கொள்ளலாம் என்று நேற்று செய்திகள் வெளியாகின.

இந்திய அணியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளித்துவிட்டு, இளம் வீரர்களைக் கொண்டு இந்திய அணி எடுத்திருக்கும் புது முயற்சியை காண ஆவலாக இருந்த கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை நேரலையாக காண முடியாமல் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர்.

ஷிகர் தவான் – சப்மன் கில் அபாரம்

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் நிக்கோலஸ் பூரன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும் சுப்மன் கில்லும் களமிறங்கினர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் தான் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது தவறு என்று நினைக்கும் வகையில் முதல் 10 ஓவர்களில் தவானும் கில்லும் 73 ரன்கள் விளாசினார்.

இந்தியா 117 ரன்கள் குவித்திருந்த போது, 53 பந்துகளில் 64 ரன்கள் குவித்திருந்த சுப்மன் கில் ரன் அவுட் ஆகி இந்தியா தனது முதல் விக்கெட்டை பறி கொடுத்தது.

ஸ்ரேயஸ் ஐயர் கம் பேக்

மறுமுனையில் அதிரடி காட்டிக்கொண்டிருந்த கேப்டன் ஷிகர் தவானுடன் ஸ்ரேயஸ் ஐயர் இணைந்து அணிக்கு சிறந்த பார்ட்னர்ஷிப்பை கொடுத்தனர்.

கடந்த சில நாட்களாகவே தனது ஃபார்மை இழந்து தடுமாறிக்கொண்டிருந்த ஸ்ரேயஸ் ஐயர் இந்த ஆட்டத்தின் மூலம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்தியனின் கேப்டன் ஷிகர் தவான் 99 பந்துகளில் 97 ரன்கள் குவித்திருந்த போது மோட்டி வீசிய பந்தில் புரூக்ஸிடம் கேட்ச் கொடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.

ஷிகர் தவான் தனது விக்கெட்டை பறிகொடுத்த சில நேரத்தில் ஸ்ரேயஸ் ஐயரும் 57 பந்துகளில் 54 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இந்தியாவின் முதல் மூன்று பேட்ச் பெண்கள் தங்களது சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி 230 ரன்கள் குவித்தனர்.

அதுவரை அதிரடி காட்டிக் கொண்டிருந்த இந்திய அணி பிறகுதான் சரிவை சந்திக்க ஆரம்பித்தது.

சூரியகுமார் யாதவ் 13 ரன்களிலும், சஞ்சு சாம்சன் 12 ரன்களிலும் நடையை கட்ட, தீபக் ஹூடா சற்று நிதானமாக ஆடி 27 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 308 ரன்கள் குவித்தது.

308 என்பது ஒரு நல்ல ஸ்கோர் ஆக இருந்தாலும் இந்திய அணி தொடக்கத்தில் காட்டிய அதிரடிக்கு இன்னும் அதிகமாகவே அடித்திருக்கலாம் என்றுதான் தோன்றியது.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள் விக்கெட்டுகளை உடனடியாக பறி கொடுக்காமல் சற்று நின்று ஆடியிருந்தால் ஒரு இமாலய ஸ்கோரை இந்திய அணி வெற்றி இருக்கும்.

இருப்பினும் சுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர் ஆகிய இருவரும் கம் பேக் கொடுப்பது போல தனது சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தியது இந்திய அணிக்கு பக்க பலமாக அமைந்தது.

309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் 7 ரன்களில் சிராஜ் வீசிய பந்தில் ஆட்டம் இழந்தார்.

வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மிக மோசமாக தோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த போட்டியில் வெற்றி அடைய வேண்டும் என்ற முனைப்பு ஒரு புறம் இருந்தாலும், 50 ஓவர்களையும் விக்கெட்டுகளை இழக்காமல் முழுமையாக விளையாட வேண்டும் என்ற முனைப்பும் அவர்களது ஆட்டத்தில் தெரிந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக மேயர்ஸ் 75 ரன்களும் பிராண்டன் கிங் 54 ரன்களும் குவித்து ஆட்டம் இழந்தனர்.

புரூக்ஸ் 46 ரன்களில் ஆட்டமிழந்து, அரை சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி நினைத்ததை போலவே 50 ஓவர்களையும் முழுமையாக விளையாடியது. ஆனால் இலக்கை விட வெறும் மூன்று ரன்கள் குறைவாக எடுத்ததால் இந்திய அணி வெற்றி பெற்றது.

வெறும் 3 ரன்களில் தோல்வி

கடைசி 15 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக போராடியது, ஆனால் 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வி அடைந்தது.

எப்படியாவது இந்த ஆட்டத்தை வென்று விட வேண்டும் என்ற முனைப்பில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களுக்கு வெறும் 3 ரன்களில் தோற்றது பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

இந்திய அணி சார்பில் சிராஜ், தாகூர், சஹால் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது. தனது அதிரடி ஆட்டத்தால் 97 ரன்கள் குவித்த இந்திய கேப்டன் ஷிகர் தவான் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

என்னதான் இந்திய அணியில் பல முன்னாடி வீரர்களுக்கு ஓய்வழிக்கப்பட்டிருந்தாலும் இந்த இளம் வீரர்கள் கொண்ட அணி மிகச் சிறப்பாகவே நேற்று விளையாடியது.

இத்தொடரின் அடுத்த ஒருநாள் போட்டி நாளை மாலை 7 மணிக்கு நடைபெற இருக்கிறது.

இரண்டாவது போட்டியையாவது ஏதாவது ஒரு டிவி சேனல் இந்தியாவில் ஒளிபரப்புமா என்ற ஏக்கம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

– இளவரசன்

You might also like