வயதில் மூத்தவர் பாட்டியா? பேத்தியா?

மொழி அரசியல் / சு. வெங்கடேசன் எம்.பி

கால் நீட்டி உட்கார்ந்து பழங்கதைகளை பேசுகிற பழமை அல்ல, நாம் பேச விரும்புவது நாம் நம்முடைய மரபைப் பற்றி பேசுகிறோம். பழமை என்பது கடந்த காலத்தின் தேங்கிய குட்டையைப் போன்றது.

அதற்கு உயிர் ஆற்றல் கிடையாது. மரபு என்பது உயிராற்றல் கொண்டது. புதிய சிந்தனைகளோடு வினை புரியும் ஆற்றல் கொண்டது. நாம் நம்முடைய மரபின் முற்போக்கு தன்மையை பற்றி பேசுகிறோம்.

நம் மொழியில் எல்லாம் இருக்கிறது என்று ஒருபோதும் சொல்லாதீர்கள், சொல்லுபவர்களை மொழிக்கு நன்மை செய்பவராக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

எல்லாம் இருக்கும் மொழி என்று எந்த மொழியும் இல்லை. எல்லாவற்றுக்கும் தகுதியானதாக என் மொழியை ஆக்க வேண்டும் என்ற திறனும் வேட்கையும் இருக்கிறவர்களுடைய மொழி காலம் முழுவதும் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

கால ஓட்டத்துக்கு ஈடுகொடுக்கும் வல்லமையைப் பெறுகிறது. 

நாம் மீண்டும் மீண்டும் மொழி அரசியலைப் பற்றி பேசுகிறோமா? என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் என்னிடம் கேட்கிறார்.

இது முக்கியமான கேள்விதான். பல நேரம் இந்த கேள்வியை கண்ணாடிக்கு முன்னால் நின்று நாம் கேட்டுக் கொள்கிறோம். “ஏன் இந்த இடத்திற்கு நம்மை தள்ளினார்கள்?” என்று.

நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள். “உலகத்தின் மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி சமஸ்கிருதம்” என்று ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் குறைந்தது இரு அமைச்சர்களாவது எங்களுக்கு வகுப்பெடுக்கிறார்கள்.

நாங்கள் தொடர்ந்து இந்தக் கேள்வியை எதிர்கொண்ட படியே இருக்கிறோம். எனவே இந்த கேள்விக்கு தொடர்ந்து பதில் சொல்கிறோம்.

சமஸ்கிருதத்தின் முதல் கல்வெட்டு கிடைத்தது கிபி 300 ல். தமிழில் முதல் கல்வெட்டு கிடைத்தது அதற்கு 600 வருடத்திற்கு முன்னால். பாட்டி தான் வயதில் மூத்தவள் என்று நான் சொல்கிறேன். பேத்தி தான் மூத்த ஆள் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

நான் சொல்வது அறிவியல். நான் சொல்றது ஆறாவது அறிவு. 70 வயது ஆன என் பாட்டி தான் மூத்தவள் என்று நான் சொன்னால் இல்லை இல்லை 12 வயதான பேத்தி தான் மூத்தவள் என்று அவர்கள் சொல்லும் பொழுது நான் இதனை மொழி பிரச்சனையாக மட்டும் பார்க்கவில்லை, அறியாமை சம்பந்தப்பட்ட பிரச்சினையாகவும் பார்க்கிறேன்.

இப்பொழுது நடைபெற்று வருவது வரலாற்றினை பிணையாக வைத்து நடக்கிற கருத்தியல் மோதல். இதில் தடையங்களை அழிப்பதுவும்.

போலி தடயங்களை உருவாக்குவதும் எதிரிகள் செய்யும் முக்கிய பணியாக உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்க ஆபரணம் கிடைத்தது.

இது மிக முக்கியமான கண்டுபிடிப்பு. அந்த அகழாய்வினை செய்தது தமிழக தொல்லியல் துறை அல்ல, ஒன்றிய அரசினுடைய தொல்லியல் துறை.

ஆனால் அகழாய்வுன் மூலம் 3000 ஆண்டுகள் பழமையான தங்க ஆபரணம் கிடைத்ததற்கு பிறகு கடந்த ஒரு வாரமாக ஒன்றிய அரசின் தொல்லியல் துறையின் இணையதளத்தினைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

என்றைக்காவது இந்த செய்தி வருகிறதா என்று. எந்த செய்தியும் இப்பொழுது வரை வெளியிட அவர்கள் தயாராக இல்லை. வெளியிடமாட்டார்கள் என்று எங்களுக்கு தெரியும்.

அதுவே வட இந்தியாவில் நடைபெற்ற அகழாய்வில் இத்தகைய பொருள் கிடைத்திருந்தால், சீதையின் வளையம், திரெளவ்பதியின் காதணி என்று எத்தனை கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கும். என்பதை நாங்கள் அறிவோம்.

ஆனால் தமிழகத்தின் தடயங்கள் என்றால் கண்டுகொள்ளாமல் கைவிடும் வேலையை இந்த அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

2016 ஆம் ஆண்டு மதுரைக்குப் பக்கத்தில் வைகை கரை கிராமம் ஒன்றில் ஒரு மாலை நேரத்தில் பெரிய புயல் காற்றோடு மலை அடித்தது.

அந்த ஊர் தேனூர். சங்க இலக்கியத்திலே தேனூர் பற்றிய குறிப்பு இருக்கிறது. அந்த ஊர் நடுவில இருந்த பெரிய மரம் கீழே விழுந்தது.

அந்த மரத்தின் உடைய வேர் பகுதிக்குள் மண்ணோடு சேர்ந்து சில குட்டி பானைகள் இருந்தது. அதனை எடுத்து வந்து சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அப்படி உருட்டி விளையாடிக் கொண்டிருந்த பொழுது சிறிது நேரத்தில் பானை உடைந்து விரல் அளவு நீட்டமான தங்க கட்டிகள் ஏழெட்டு கட்டிகள் இருந்தது.

உடனே அதனை ஆளாளுக்கு எடுத்துச் சென்றார்கள். அதன்பிறகு காவல்துறை வந்து ஏழு கட்டிகளை பறிமுதல் செய்து உள்ளே வைத்தது.

இரண்டு வருடத்திற்கு பிறகு தொல்லியல் துறை ஆய்வு செய்த பொழுது அந்த ஏழு தங்கக் கட்டிகளிலும் தமிழ் பிராமி, தமிழியில் எழுதப்பட்ட எழுத்துக்கள் இருந்தது.

ஏழு தங்க கட்டிகளிலும் ஒரே பெயர் எழுதப்பட்டிருந்தது. பிராமி வடிவ எழுத்து என்றால் 2300 வருஷத்துக்கு முன்பு எழுதப்பட்ட எழுத்து என்று பொருள்.

அந்தப் பெயர் “ஏகோதிக் கோதை”. கோதை என்ற பெண்ணின் பெயர் ஏழு தங்கக் கட்டிகளிலும் இருந்தது.

2000 வருஷத்துக்கு முன்னால் தங்கத்தால் செய்யப்பட்ட தெய்வச் சிலை இன்றைக்கு வரை நமக்கு கிடைக்கவில்லை. தங்கத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள் இதுவரை கிடைக்கவில்லை.

மொகஞ்சதாரோ காலத்தில் தங்கம் கண்டறியப்படவில்லை. உலகத்திலேயே தங்கத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரே மொழி தமிழ் மொழி என்பது மிக முக்கியமானது.

“சங்கத் தமிழ் மட்டுமல்ல, தங்க தமிழ்” என்று உரக்க முழங்குவோம்.

இங்கே இந்த உண்மையை பேசுவது மிக முக்கியமானது. இது பழமை அல்ல இது மரபு. ஒரு எதிர்வினையை சந்தித்து வந்து கொண்டே இருக்கிறது. அது எல்லா வகையிலும் நாம் நிரூபிக்க முடியும்

ஒரு முக்கிய செய்தியை இங்கே சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். வைஷ்ணவ மதம் இந்தியா முழுவதும் இருக்கிற மதம். வைதீக மதங்களில் மிக முக்கியமானது. ஆனால் தமிழ்நாட்டு வைணவத்தில் மட்டும் ஒரு மரபு இருக்கிறது.

என்னவென்றால் பெருமாளுக்கு முன்னால் தமிழ் பாசுரங்கள் பாடப்படனும் பெருமாளுக்கு பின்னால் சமஸ்கிருத ஸ்லோகங்கள் சொல்லணும்.

இந்தியாவில் எந்த நிலத்திலாவது வைதீகத்தில் சமஸ்கிருதத்தை இறைவனுக்கு பின்னாலும், சொந்த தாய் மொழியை முன்னாலும் வைத்த மரபு இந்திய துணை கண்டத்தில் வேறு எங்கேயும் கிடையாது.

இன்றைக்கு வரை இந்த மரபு தமிழகத்தில் தொடர்கிறது. ஏன் தெரியுமா? தமிழகத்தில் தான் மதம் என்ற நிறுவனம் கால்கொள்வதற்கு முன்பே மொழி என்கிற கட்டமைப்பு வலிமையாக நிலை நின்றுவிட்டது.

எனவே இங்கே எந்த மதம் வந்தாலும் மொழிக்கு உரிமை கொண்டாடுகிற வேலையை முதலில் செய்தார்கள்.

மிக முக்கியமான செய்தி இது. இங்கே வைதீகமாக இருக்கலாம் அல்லது வேறு மதங்களாக இருக்கலாம் எதுவென்றாலும் இந்த போட்டியை சந்தித்து சந்தித்து தான் உருவாகி இருக்கிறது.

இங்கே நண்பர்கள் குறிப்பிட்டதை போல மங்காத தமிழ் என்பதை அறிவியல் பூர்வமாக நாம் நிலை நிறுத்துகிறோம்.

சமீபமாக வெளிவந்திருக்கிற மயிலாடும்பாறை அகழாய்வு முடிவுகள் ஆனாலும் சரி, பொருநை நதிக்கரை சிவகளையிலே வந்திருக்கிற அகழாய்வு முடிவுகள் ஆனாலும் சரி தமிழ் இலக்கியம் காட்டும் வாழ்வின் பரிமாணங்களையும், வரலாற்று ஆழத்தையும் உலகுக்கு உணர்த்துகிறது.

அதே நேரம் தமிழ் மொழியின் வளமையும், அதன் தொடர்ச்சியையும் வியக்கத்தகும் முறையில் இருப்பதை நான் பார்க்க முடிகிறது.

தமிழகத்திலே கிடைத்துள்ள மிகப்பழமையான கல்வெட்டு புள்ளிமான் கோம்பையிலே இருக்கிற கல்வெட்டு‌.

அது அசோகன் பிராமி எழுத்துக்கு முன்பு எழுதப்பட்ட தமிழ் பிராமி எழுத்து என்று பல தொல்லியல் அறிஞர்கள் கூறுவதை நீங்கள் பார்க்கலாம்.

அந்த கல்வெட்டு ஒரு மாடு பிடிக்கிற சண்டையில் இறந்து போன அந்துவன் என்ற ஒரு வீரனுடைய நினைவாக அந்த கிராமத்து மக்கள் எழுதியுள்ள ஒரு கல்வெட்டு. அந்த கல்வெட்டிலே இருக்கிற ஒரு சொல் “கால்கோள்” என்ற ஒரு சொல்.

ஒரு திருமணம் நடந்தால் கால்கோள் நடுவது ஒரு மாநாடு நடந்தால் கால்கோள் விழா நடுவது இன்றக்கு வரைக்கும் புழக்கத்தில் இருக்கிற சொல். இந்த சொல்லுக்கு ஒரு பெரும் இலக்கணத்தை எழுதியிருக்கிறார் தொல்காப்பியர்.

இந்த சொல் தான் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிற இந்தியாவிலேயே மிகப் பழமையான பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அந்துவன் கல்வெட்டு.

அந்த கல்வெட்டில் இருக்கிற “கால்கோள்” என்ற சொல் சுமார் 2500 ஆண்டுகள் தொடர்ந்து மக்களிடம் இருந்து வருகிறது.

இன்றைக்கு என் பேரன் வரை கடத்தப்பட்டு மங்காமல் வந்து கொண்டே இருக்கிறது.

மங்காத தமிழ் என்பது நமது பழமையின் குரல் அல்ல நம்முடைய மரபின் குரல் அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம்

ஆட்சி அதிகாரத்தினுடைய எல்லை பரப்பளவு சார்ந்து மொழி அரசியலின் ஆளுமை நிலைபெறுகிறது.

நமது உரிமையை பெறுவதற்கு ஆட்சியையும் அதிகாரத்தையும் பயன்படுத்துவது தான் மிக முக்கியமான கலை என்று நான் நினைக்கின்றேன்.

உதாரணம் சொல்கிறேன் சில ஆண்டுகளுக்கு முன்பு பண மதிப்பிழப்பு இந்தியாவில் நடந்தது.

500 ரூபாய் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எல்லாம் செல்லாததாக ஆக்கப்பட்டு புதிதாக 500 ரூபாய் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடித்து விநியோகிக்கப்பட்டது.

பண மதிப்பிழப்பு ஏற்பட்டதனால் அரசியல் விளைவுகள் பொருளாதார விளைவுகள் முழுமையாக பேசப்பட்டது, பேசப்பட்டு கொண்டிருக்கிறது.

ஆனால் அதற்குள் நிகழ்ந்த மிகப்பெரிய உரிமை பறிப்பு என்ன தெரியுமா? அதுவரை அனைத்து ரூபாய் நோட்டு தாள்களிலும் உலகம் ஏற்றுக் கொண்ட எல்லா இடங்களிலும் புழக்கத்தில் இருக்கிற எண்கள் தான் எழுதப்பட்டது.

பண மதிப்பிழப்பிற்கு பிறகு அச்சடிக்கப்பட்ட அனைத்து 500 ரூபாய் 2000 ரூபாய் நோட்டுகளிலும் தேவ நாகரிக வடிவிலான எண்கள் பொறிக்கப்பட்டிருக்கிறது

ரூபாய் நோட்டுகளில் இருக்கும் எண்களை மாற்ற வேண்டும் என்றால் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று அரசியல் சாசன சட்டம் இருக்கிறது.

ஆனால் சத்தமே இல்லாமல் யாருடைய இசைவையும் பெறாமல் தேவநாகரிக எண்கள் அச்சடிக்கப்பட்டு நாடு முழுவதும் கொடுக்கப்பட்டுவிட்டது.

மக்கள் புழங்குகின்ற மொழிக்கும், அதிகாரத்தின் குறியீட்டுக்கான மொழிக்கும் இடையிலே நடக்கிற போராட்டம். இது மிக முக்கியமானது.

மற்ற இடங்களில் சமஸ்கிருதம் அங்கு இருக்கும் மொழிகளோடு கலந்து இருக்கிறது அல்லது இசைவாய் இருக்கிறது அல்லது அதற்கு ஏற்றபடி வளைந்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் தமிழ் மொழி அப்படியல்ல. வடமொழிக்கு இரையாகாமல் தனித்திருந்து இயங்கும் மொழி.

2000 ஆண்டுகளாக எனது வேரிலிருந்து உறிஞ்சுகிற நீரில் எனது பழம் பழுக்குமே தவிர நீ ஒட்டி வைக்கின்ற உன்னுடைய பழம் பூக்காது காய்க்காது என்பதை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிற நிலம் இந்த நிலம்.

நாம் மொழியின் சமத்துவம் பற்றி பேசுகிறோம், மொழிகளின் உரிமையை பேசுகிறோம், என் உரிமையை நசுக்குகிற உன் குரலுக்கு எதிரான போர் குரலை பேசுகிறோம் அது என் உரிமையின் குரல்.

எந்த ஒரு மொழியையும் தாழ்த்துகிற குரல் நம்முடைய குரல் அல்ல, எல்லாருக்கும் அவரவர் தாய்மொழி உயர்வானது.

சமஸ்கிருதத்தில் இல்லாத இலக்கியமா? அஸ்வகோஷேயில் ஆரம்பித்து எவ்வளவு உயர்வான இலக்கியங்கள் அவை எல்லாம் நாங்கள் மதிக்கிறோம், ஆனால் அதுவே அதிகாரத்தின் குரலாக ஒலியால் அதனை முழுமையாக எதிர்கொள்வோம்.

சமத்துவத்தை சீர் குலைக்கிற எது ஒன்றையும் ஏற்றுக் கொள்ள மறுப்பது தான் நம்முடைய மரபு. அந்த மரபினுடைய வடிவமே என்னுடைய மொழி எனக்கு கொடுக்கிற அரசியல் என்று நான் நினைக்கிறேன்.

இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கும் பொழுது மொழி சார்ந்து நடந்த மிகப்பெரிய விவாதமும், அது அன்றைக்கு எழுப்பிய கேள்விகள் எல்லாம் இன்றைக்கு நாம் எப்படி சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை பார்க்கிறவர்களுக்கு தெரியும்.

கடந்த தலைமுறை நடத்திய போராட்டத்தை விட மிகப்பெரிய போராட்டத்தை இந்த தலைமுறை நடத்த வேண்டிய இடத்தில் இருக்கிறது என்பதுதான் சமீபத்திய நிகழ்வுகள்.

நிச்சயம் புதிய தலைமுறைக்கான மொழியாக, வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் வினைபுரிகிற ஆற்றல் மிக்க மொழியாக தமிழ் மொழியை தகவமைக்கிற வேலையை அனைத்து நிறுவனங்களும் செய்ய வேண்டும்.

அதனை உலகம் முழுவதும் இருக்கிற தமிழர்கள் இன்றைக்கு உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுது இந்த நிகழ்வுக்கு முந்தைய நிகழ்வு கூட அமெரிக்க கல்வி கழகம் எவ்வளவு பள்ளிகளை இங்கே உருவாக்கி அடுத்த தலைமுறைக்கான அமெரிக்க தமிழை அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள் என்று நான் நினைக்கின்றேன் நிச்சயமாக தமிழ் மொழிக்கு அந்த ஆற்றல் இருக்கிறது அதை செய்ய வேண்டும்

அடுத்த தலைமுறைக்கான அனைத்து தளங்களிலும் வினை புரிகிற தமிழாக மாற்றுகிற வேலையை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். செய்வோம்.

நன்றி: சு.வெங்கடேசன் எம்.பி. பதிவு

You might also like