கள்ளக்குறிச்சி சம்பவத்தைத் தொடர்ந்து இப்படியா?

கள்ளக்குறிச்சி பள்ளியில் மாணவியின் உயிரிழப்பைத் தொடர்ந்து அந்தப் பள்ளியில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையும், சேதங்களும் மற்ற பள்ளி நடத்துகிறவர்களுக்கு ஒரு பாடம்.

நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். நீதிமன்றம் ‘திட்டமிட்ட கலவரம்’ என்று கண்டித்திருக்கிறது.

சமூக வலைத் தளங்களில் எழுதித் தூண்டிவிட்டதாகச் சிலர் கைதாகியிருக்கிறார்கள்.

சி.பி.சி.ஐ.டி விசாரணை நடந்து வருகிறது. நீதிமன்ற விசாரணையும் நடக்கிறது. பள்ளி நிர்வாகம் சார்பில் சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

விசாரணை முடிவில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மரணத்திற்குப் பின்னிருக்கிற மர்மங்கள் விலகலாம்.

மாணவிகளின் உயிரிழப்புகள் அதிர்ச்சி தரக்கூடியவை என்றாலும், பள்ளி மாணவிகள் தற்கொலைக்கு முயற்சிப்பதும் இன்னொரு புறத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

நேற்று சேலம் மேச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிக்கு வந்த பிளஸ் டூ மாணவி ஒருவர் பள்ளி வளாகத்திலேயே பகல் நேரத்தில் பள்ளியின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்திருக்கிறார். படுகாயம் அடைந்த அவருக்குக் கால் முறிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் தன்னுடைய காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்ததால், தற்கொலை முடிவுக்கு வந்ததாக அந்த மாணவி சொல்லியிருக்கிறார்.

நேற்றைய தினமே இன்னொரு சம்பவம். ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் தனது பெற்றோர் படிப்பு தொடர்பாகக் கண்டித்ததால் மனமுடைந்த ப்ளஸ் ஒன் படிக்கும் ஒரு மாணவி வீட்டிலேயே விஷத்தைக் குடித்துவிட்டுப் பள்ளிக்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது.

பள்ளிக்கு வந்து தான் விஷம் குடித்திருப்பதாகச் சொல்ல, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்திருக்கிறார்.

இவை இரண்டும் ஒரே நாளில் நிகழ்ந்த நிகழ்வுகள்.

மாணவிகளுக்குப் பள்ளியில் ஏனிந்த உயிரிழப்புகள் நடக்கின்றன? அல்லது பள்ளியில் படிக்கும் மாணவிகள் அதே பள்ளி வளாகத்திலேயே ஏன் இம்மாதிரியான முடிவுக்கு வருகிறார்கள் என்பதெல்லாம் உளவியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஆய்வு செய்யப்பட வேண்டிய விஷயங்கள்.

இந்த விஷயங்கள் ஆராயப்பட்டு, ஒதுங்கியிருக்கும் மனநிலை கொண்ட மாணவிகளைத் துவக்கத்திலேயே கண்டறிந்து உளவியல் சிகிச்சை அளிப்பதன் மூலமே இம்மாதிரியான உயிரிழப்புகளையும், உயிரைப் போக்கும் முயற்சிகளையும் தடுக்க முடியும்.

ஏனென்றால் ஒரு பள்ளியில் நடக்கும் ஓர் உயிரிழப்பு சக மாணவிகளையும் எந்தெந்த விதத்தில் எல்லாம் பாதிக்கிறது என்பதையும் அனுபவபூர்வமாக உணர்ந்து கொள்ள முடியும்.

– லியோ

*

You might also like