விராட் கோலிக்கு ஓய்வு: உரத்து ஒலிக்கும் எச்சரிக்கை மணி!

மீண்டும் ஒரு தொடரில் விராட் கோலியின் மட்டை மவுனம் சாதித்திருக்கிறது. கோலியின் சறுக்கல்கள் அதிர்ச்சி தரும் நிலையைக் கடந்து இயல்பானதாக ஆகிக் கொண்டிருக்கிறது.

கிரிக்கெட் உலகின் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கரைச் சில அம்சங்களிலேனும் விஞ்சக்கூடியவர் எனக் கணிக்கப்ப்ட்ட கோலி, இன்னும் சில மாதங்களில் நடக்கவிருக்கும் டி-20 உலகக் கோப்பைப் போட்டியில் இடம்பெறுவாரா என்பதே கேள்விக்குறியாகியிருக்கிறது.

ஆனால், அவரை அணி நிர்வாகம் எப்படி அணுகுகிறது என்பதில் இன்னமும் தெளிவு பிறக்கவில்லை.

ஜூலை 22ஆம் தேதி தொடங்கவிருக்கும் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில், இந்திய அணியில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஜூலை 9ஆம் தேதி தொடங்கிய இந்தியா – இங்கிலாந்து இடையிலான டி20 தொடரின் முதல் போட்டியில் விராட் கோலியினால் விளையாட முடியவில்லை.

மீதமிருந்த இரண்டு டி20 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி மொத்தமாக 12 ரன்கள் மட்டுமே குவித்திருந்தார்.

கிரிக்கெட் உலகத்தில் தற்போது விராட் கோலி பெரும் பேசுபொருளாக உள்ளார். கடந்த பல மாதங்களாகவே மோசமான ஃபார்மில் இருக்கும் விராட் கோலி, கடந்த ஐபிஎல் 2022ஆம் ஆண்டின் தொடரிலிருந்து ஒரு போட்டியில்கூட 50 ரன்களைக் கடக்கவில்லை.

இந்நிலையில் இந்திய அணியின் தேர்வு குழு வருகிற இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 5 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விராட் கோலிக்கு ஓய்வளிக்க முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இது கிரிக்கெட் உலகத்தில் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

விராட் கோலி தொடர்ந்து மோசமான ஃபார்லில் இருந்தாலும், அவரை மீண்டும் மீண்டும் இந்திய அணியில் சேர்த்துக்கொண்டிருப்பது குறித்துப் பல கிரிக்கெட் நிபுணர்கள் அதிருப்தி தெரிவித்துவருகிறார்கள்.

கிரிக்கெட் உலகத்தின் அடுத்த சச்சின் டெண்டுல்கர் என்ற பெயர் எடுத்த விராட் கோலி கடந்த பல மாதங்களாகவே எல்லா ஆட்டங்களிலும் சொதப்பலாகவே விளையாடி வருகிறார்.

தொடர்ந்து ரன் மழை பொழிந்ததோடு மட்டுமன்றிச் சதங்களையும் அடித்துத் தள்ளிக்கொண்டிருந்த அவர் எந்தப் போட்டியிலும் சதம் அடித்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன.

அண்மைக் காலத்தில் அவருடைய தடுமாற்றம் அதிகமாகவே தெரிகிறது. இருப்பினும் அவருக்கு இந்திய அணியில் மீண்டும் மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன.

ஓய்வா, நீக்கமா?

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கோலிக்கு ஓய்வு அளிக்கும் தேர்வுக் குழுவின் முடிவு, பல நிபுணர்களையும், மூத்த கிரிக்கெட் வீரர்களைகளையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் சரந்தீப் சிங் இந்த முடிவால் கடும் கோபத்தில் உள்ளதாகத் தெரிகிறது.

ஐபிஎல் 2022 சீசனுக்கு முன்பு கோலி, தென்னாப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து தொடரில் கலந்துகொள்ளாமல் ஓய்வெடுத்தது மட்டுமல்லாமல் இங்கிலாந்து சுற்றுப் பயணத்திலும் ஒருநாள், டி20 தொடக்கப் போட்டிகளையும் தவறவிட்டார் என்று சரன் தீப் சிங் குறிப்பிட்டார்.

இதுகுறித்துச் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில், “ஓய்வு என்றால் என்னவென்று எனக்குப் புரியவில்லை.

தொடர்ந்து சதம் அடித்து அசத்திக் கொண்டிருக்கும் வீரர் ஓய்வெடுக்கிறார் என்றால் என்ன காரணமாக இருக்கும் என்று புரிந்து கொள்ளலாம்.

தொடர்ந்து சொதப்பிக் கொண்டிருக்கும் ஒரு வீரருக்கு ஓய்வளிப்பது என்பது குழப்பமாக இருக்கிறது.

தனது முழு விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தித் தொடர்ந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களுக்கு மட்டும் தான் ஓய்வெடுப்பதற்குத் தகுதி உண்டு.

ஐபிஎல் 2022 தொடருக்கு முன்பும், அவர் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடினார். ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடவில்லை.

பின்னர் தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து தொடரிலிருந்தும் ஓய்வெடுத்தார். “ஒரு வீரர் தான் இழந்த ஃபார்மை மீண்டும் பெற வேண்டும் என்றால் வெளியில் உட்கார்ந்து ஓய்வெடுப்பது சரியான முடிவல்ல. அப்படிச் செய்வதனால் இழந்த ஃபார்மைத் திரும்பப் பெற முடியாது” என்று சரன் தீப் சிங் கூறியிருக்கிறார்.

என்ன செய்யப்போகிறார் கோலி?

டி20 உலகக் கோப்பைத் தொடர் நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த நிலையில், விராட் கோலி தொடர்ந்து டி20 போட்டிகளில் சொதப்பலாக விளையாடிக்கொண்டும், அவ்வப்பொழுது ஓய்வெடுத்துக் கொண்டும் இருப்பது இந்திய அணியில் அவருடைய இடத்தை மற்ற வீரர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுப்பதுபோல் ஆகும்.

ஒருவர் என்னதான் மிகச் சிறந்த வீரர் என்றாலும் ஃபார்மை இழந்துவிட்டார் என்றால் உடனடியாக அதைச் சரி செய்து மீண்டும் சிறப்பாக விளையாடப் பயிற்சி செய்ய வேண்டும். ஆனால் விராட் கோலி அப்படிச் செய்வதாகத் தெரியவில்லை.

டெஸ்ட் போட்டிகளில் சொதப்பிவந்த சத்தீஸ்வர் புஜாரா, இங்கிலாந்து கவுண்டி அணியில் விளையாடித் தன் ஃபார்மை மீட்டெடுத்துக்கொண்டார்.

அதன் பிறகு அவருடைய ஆட்டம் மெருகேறியிருக்கிறது. கோலி அப்படி எதுவும் செய்யவில்லை.

அவர் எத்தனை முறை சொதப்பினாலும் அவருக்கு மீண்டும் மீண்டும் இந்திய அணியில் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவது கிரிக்கெட் ரசிகர்களையும் கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் செய்தியாளர் சந்திப்பில் விராட் கோலிக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்படுவது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதற்கு பதில் அளித்த அவர், “எங்கள் அணிக்கு என்று சில திட்டங்களும் வியூகங்களும் உள்ளன. அதன்படிதான் நாங்கள் அணியை தேர்ந்தெடுத்து விளையாடி வருகிறோம்.” என்று சமாளித்தார்.

கோலி தவறவிட்ட தென்னாப்பிரிக்கா, அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலும் தீபக் ஹூடா பேட்டிங்கில் அசத்தியது பல கிரிக்கெட் நிபுணர்களையும் மூத்த கிரிக்கெட் வீரர்களையும் ஈர்த்தது.

வரும் டி20 உலக கோப்பை தொடரில் விராட் கோலியின் இடத்திற்கு மாற்று வீரராக தீபக் ஹூடா சிறந்த தேர்வாக இருப்பார் என்று கருதப்படுகிறது.

எச்சரிக்கை மணி

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், “இந்திய கிரிக்கெட் அணிக்கு வீரர்களைப் புகழின் அடிப்படையில் தேர்வு செய்யக் கூடாது. விளையாட்டுத் திறன் அடிப்படையில்தான் தேர்வு செய்யப்பட வேண்டும்” என்று விராட் கோலியை குறிப்பிட்டுக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் நிபுணர்களும் கோலியின் ஆட்டம் பற்றியும் அவருக்கு வழங்கப்படும் வாய்ப்புக்கள் பற்றியும் விமர்சித்து வருகிறார்கள்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்கூலியும் கோலியின் ஃபார்ம் குறித்து நாசூக்காகத் தன் அதிருப்தியைத் தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில் கோலிக்கு அளிக்கப்பட்டுள்ள ஓய்வு அவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை என்று கருதப்படுகிறது.

இந்த எச்சரிக்கைக்குப் பிறகும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அவருடைய சாதனைகள் அப்படிப்பட்டவை.

ஆனால் அந்த வாய்ப்பு அவருக்கான கடைசி வாய்ப்பாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம்.

இது வேறு யாரையும்விட விராட் கோலிக்கு நன்கு புரிந்திருக்கும். களத்தில் ஆவேசம் காட்டும் இந்த மட்டை வீரர் இந்த நெருக்கடியை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்?

-இளவரசன்

You might also like