ஜி.எஸ்.டியால் அரிசி, பருப்பு, கோதுமையின் விலை உயர்வு!

ஒன்றிய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், அமைச்சா்கள் குழுவின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் பல பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயா்த்தவும், சில பொருள்களுக்கு வரியைக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த வரி மாற்றம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த மாற்றம் காரணமாக, அச்சுப் பிரதி, எழுத அல்லது வரைவதற்கு பயன்படும் இங்க், வெட்டும் கத்திகள், பென்சில், எல்.ஈ.டி விளக்குகள், வரைவதற்கான உபகரணங்கள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளதால் இந்தப் பொருட்களின் விலை உயர வாய்ப்புகள் உள்ளன.

சூரிய சக்தியில் இயங்கும் சோலார் வாட்டா் ஹீட்டா்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.

பண்டல் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு, தயிர், பன்னீா் உள்ளிட்ட பொருள்களுக்கும், ரூ.5,000-க்கும் மேல் ஒருநாள் வாடகை கொண்ட மருத்துவமனை அறைகளுக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சாலைப் போக்குவரத்து வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சரக்கு வாகனங்கள் மற்றும் லாரிகளை வாடகைக்கு எடுப்பதற்கு விதிக்கப்பட்டுவந்த 18 சதவீத ஜிஎஸ்டி 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாடகை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

You might also like