இலங்கையில் போராட்டக்காரர்களோடு கைகோர்த்த ராணுவத்தினர்!

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியை, பதவியில் உள்ள ராஜபக்சே குடும்பம் சரியாக கையாளவில்லை எனக் கூறி பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார்.

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். ஆனால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக மறுத்துவிட்டார். அவருக்கு எதிராக போராட்டங்கள் தொடர்கின்றன.

இதன் உச்சகட்டமாக அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக கோரி இன்று தலைநகர் கொழும்பில் போராட்டம் தீவிரமாக நடைபெறுகிறது.

ஊரடங்கு உத்தரவை மீறி நடந்த இந்த போராட்டத்தின்போது போலீசார் – போராட்டக்காரர்கள் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் போலீசார் அமைத்த தடுப்பு வேலிகளை தகர்த்த போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் அதிரடியாக நுழைந்தனர்.

ஆனால் அதற்கு முன்னதாகவே, அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது அதிகாரப்பூர்வ மாளிகையைவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

அவர் நேற்று இரவே ராணுவ தலைமையகத்திற்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோத்தபய ராஜபக்சேவின் லக்கேஜ்கள், கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கடற்படை கப்பலில் ஏற்றப்படுவதாக கூறி ஒரு வீடியோ வெளியானது.

அங்குள்ள நீச்சல் குளத்தில் போராட்டக்காரர்கள் குளிப்பது மற்றும் சமையல் அறைக்கு சென்று சாப்பிடுவது போன்ற வீடியோவும் வெளியாகி உள்ளது.

அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் உள்ளே இருந்தபடி அதிபர் பதவி விலக வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.

இன்று அதிபர் மாளிகையில் தங்கப் போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் அனைவரும், போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியை கைவிட்டதாகவும், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

கொழும்பு நோக்கி பொதுமக்கள் தொடர்ந்து படையெடுத்தவண்ணம் உள்ளனர்.

இதனால் தலைநகரை கைப்பற்ற திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே அதிபர் பதவியை ராஜினாமா செய்யுமாறு ஆளுங்கட்சி எம்.பி.க்கள் கோத்தபய ராஜபக்சேவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

You might also like