முகத்தை ஜொலிக்க வைக்கும் வெள்ளரிக்காய் ஃபேசியல்!

கோடைக் காலம் என்றால் நமது உடலில் வெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு உடல் பிரச்சனைகள் உண்டாகும். இந்தச் சூழ்நிலையில் பெரும்பாலானவர்களின் தேர்வு நீர்ச்சத்து அதிகம் நிறைந்த காய்கறிகள்.

அதில் முதல் இடம் எது என்று பார்த்தால் வெள்ளரிகாய். நீர்சத்து மட்டுமின்றி அழகையும் முகத்திற்கு பொலிவையும் தருகிறது. அழகு என்பது யாருக்கு தான் பிடிக்காது கெமிக்கல் இல்லாத அழகை அள்ளிக் கொடுக்கிறது மலிவான வெள்ளரிக்காய்.

உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே, மாங்கனீசு, காப்பர், காப்பர் மற்றும் பொட்டாசியம் போன்ற பல உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் வெள்ளரிக்காயில் அடங்கியுள்ளது.

அப்படிப்பட்ட இந்த வெள்ளரிகாய்கள் முகத்திற்கு எப்படி அழகு சேர்கிறது என்பதைப் பார்க்கலாம்.

1] வெள்ளரிக்காய் ஐஸ் மசாஜ்

வெள்ளரியை அரைத்து ஜூஸாக்கி, அதை ஐஸ்கட்டிகளாக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

வெளியில் சென்று வந்தவுடன் வெள்ளைத் துணியில் ஐஸ் கட்டிகளைப் போட்டு முகத்தில் வட்ட வடிவில் மசாஜ் செய்யுங்கள்.

இவ்வாறு தினமும் செய்து வந்தால் சருமத்தில் ஏற்படும் எரிச்சல், அரிப்பு, சோர்வு நீங்கும்.

அதோடு சருமத்தில் அதிகப்படியாக சுரக்கும் எண்ணெயைக் கட்டுப்படுத்தி முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி முகத்தைப் பொலிவாக மாற்றும்.

2] வெள்ளரிக்காய் பேஸ்ட்

பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் -¼ கப், தயிர் 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு முகத்தில் இதை அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவலாம்.

வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தி வந்தால் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கும். முகத்தில் இருக்கும் துளைகள் நீங்கி முகம் ஜொலிக்கும்.

3] வெள்ளரிக்காய் – புதினா

தோல் நீக்கிய வெள்ளரிக்காய், புதினா ஒரு கை பிடி எடுத்து நீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பேஸ்டை முகம், கழுத்துப் பகுதியில் பூசி 30 நிமிடம் ஊறவிடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால் சரும அழுக்கு நீங்கும். கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையம், கரும்புள்ளிகள் அகலும்.

இதில் வைட்டமின் ஈ, சரும துவாரம் மூடச் செய்து முகத்தை மென்மையாக இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

வெள்ளரிக்காய் பேசியல்

க்ளேன்சர்:

வெள்ளரி சாறு – 2 ஸ்பூன்

எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்

இரண்டு ஒன்றாக கலந்து பஞ்சில் நனைத்து முகம், கழுத்து பகுதியில் துடைத்து 10 நிமிடம் மசாஜ் கொடுக்க வேண்டும்.

ஸ்கிரப்:

ஸ்கிரப் உங்கள் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதற்கு உதவியாக இருக்கும். துருவிய வெள்ளரிக்காய் தோல் 2 ஸ்பூன், துருவிய எலுமிச்சை தோல் 1 ஸ்பூன் இவற்றுடன் மில்க் க்ரீம் அல்லது பால் 1 ஸ்பூன் கலந்து முகத்தில் மென்மையாக 15 நிமிடங்கள் வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும்.

ஃபேஸ் மாஸ்க்:

தக்காளி ஒன்று, அரை வெள்ளரிக்காய் இரண்டையும் சேர்த்து அரைத்து அதனுடன் அதிமதுரம் 1 ஸ்பூன், முல்தானி மெட்டி 1 ஸ்பூன் எல்லாவற்றையும் கலந்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.

பிறகு 20 நிமிடம் கழித்து தண்ணீரில் முகத்தைக் கழுவி விட வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால் முகம் சுருக்கம் இல்லாமல், பொலிவுடன் அழகு அதிகரிக்கும்.

[குறிப்பு] முகத்தை சோப்பு போட்டு இரண்டு நாள் கழுவக் கூடாது. பேசியல் செய்தவுடன் வெளியில் செல்லக்கூடாது. இந்த பேஷியல் செய்ய ஏற்ற நேரம் மாலை நேரமாக இருந்தால் நல்லது.

அதிக விலை கொடுத்து பார்லர் சென்று கெமிக்கல் நிறைந்த கிரீம் கொண்டு முகத்தை அழகுபடுத்துவதை விடவும், மலிவாகக் கிடைக்கும் வெள்ளரிக் காய்கள் கொண்டு உங்கள் சருமத்தை ஜொலிக்க வைக்கலாம்.

– யாழினி சோமு

You might also like