சென்னை மாநகராட்சியில் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 1060 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த சில நாட்களாகவே பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் சென்னையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சென்னை மாநகராட்சி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பொது இடங்களில் முககவசம் அணிவதை கட்டாயமாக்கியும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு இன்று முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது.
அதன்படி பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கடைத்தெருக்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் இன்று தொடங்கியது.
சென்னையில் 200 வார்டுகள் உள்ளன. இந்த 200 வார்டுகளிலும் முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதற்காக சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.