எங்கு நாம் தடம் மாறினோம்?

பேராசிரியர் க.பழனித்துரை

ஜுன் 2ஆம் தேதி மகாத்மா காந்தியின் சேவாகிராம் ஆசிரமத்தில் மாலை 6 மணி பிரார்த்தனைக்கு 48 டிகிரி வெப்பத்தைத் தாங்கிக்கொண்டு 5.15 மணிக்கே சென்று நுழைவாயிலை நானும் என் நண்பர்கள் மூவரும் அடைந்தோம்.

மரங்கள் அடர்ந்த இடத்தில் பகல் நேரத்தை கழிக்க வந்த ஒரு சிலர் குறிப்பாக இளம் வயது ஆண்களும் பெண்களும் மரத்தடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.

ஒரு விசில் சத்தம் 5.45 மணிக்குக் கேட்டது. பிரார்த்தனைக்கு வந்திருப்போரைத் தவிர அனைவரும் வெளியேறுங்கள் என்று விசில் அடித்தவர் கூவினார்.

என்னுடன் வந்த மூவரைத் தவிர மற்ற அனைவரும் வேகமாக வெளியேறிவிட்டனர். பிரார்த்தனை என்பது ஒரு பாவப்பட்ட செயல் செய்வது என எண்ணி வேகமாக அந்த இடத்தைவிட்டு வந்திருந்தவர்கள் சென்றதுதான் என்னை பிரமிக்க வைத்தது.

அதைவிட முக்கியமாக அந்த இடம் என்ன குறிக்கோளுக்காக துவங்கப்பட்டது, இன்று அந்த இடத்தை எதற்காக மக்கள் பயன்படுத்துகின்றார்கள் என்பதைப் பார்த்தபோது இதயமே நின்றுவிடும் அளவுக்கு வருத்தம் நம்மைக் கவ்விக் கொண்டது.

காந்தி அமர்ந்து பிரார்த்தனை நடத்தும் இடத்தில் விரிப்பு நான்கு வரிசையாக விரிக்கப்பட்டு இருந்தன.

காந்தி அமரும் இடத்தில் ஒரு சிறிய தலையணை போன்று திண்டு இரண்டு வைக்கப்பட்டிருந்தன.

சரியாக 6 மணிக்கு மணியடித்தது. பிரார்த்தனையை தொடங்கினர். அந்தப் பிரார்த்தனையில் அங்கு பணிபுரியும் 9 பேர் கலந்து கொண்டனர். எங்களுடன் சேர்த்து 13 பேர். 20 நிமிடம் அந்தப் பிரார்த்தனை நடந்தது.

வெயிலின் தாக்கம் என் காதுக்குள் எதோ இரும்பைக் காய்ச்சி ஊற்றுவதுபோல் இருந்தாலும், பிரார்த்தனை,

அதுவும் காந்தியின் குடிலில் என்றபோது ஒருவித புனித உணர்வோடு பங்கேற்று வெளியில் வரும்போது என்னுடன் வந்த பேராசிரியர் என்னிடம் ஒரு கருத்தைத் தெரிவித்தார்.

“இவ்வளவு சீக்கிரம் நம் நாடு காந்தியை மறந்து விட்டதே” என்றார். எனக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை.

அந்த அளவுக்கு சோகம் என்னைக் கவ்விக் கொண்டது. அங்கு கூட்டம் வரவில்லை என்பதற்காக அல்ல, காந்தி மண்ணில் நடைபெற்று வரும் இன்றைய சமூக, பொருளாதார, அரசியல் செயல்பாடுகளை எண்ணியதன் விளைவாக.

அந்த நேரத்தில் என் நினைவுக்கு வந்தது அமெரிக்க கருப்பின மக்களின் விடுதலைக்காக போராடிய மார்டின் லுதர் கிங் ஜீனியர் தான்.

அவர் இந்தியாவுக்கு வந்து பல காந்திய நிறுவனங்களுக்குச் சென்று காந்திய சிந்தனையாளர்களை சந்தித்து விட்டு அமெரிக்கா திரும்புமுன் புதுடெல்லியில் அகில இந்திய வானொலி நிலையத்தில் ஒரு பேட்டி கொடுத்தார்.

அந்தப் பேட்டி இந்தியர்களாகிய நாம் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய ஒன்று.

இந்தியாவில் பலர் எண்ணுகின்றனர், காந்தியின் பணி சுதந்திரம் வாங்கியதுடன் முடிந்துவிட்டது என்று.

உண்மை அதுவல்ல, காந்தி எதிர்காலத்திற்கானவர். இந்தியாவுக்கும் சரி, உலகுக்கும் சரி எதிர்காலத்தில் அவர் மிகவும் தேவைப்படுவார் என்று கூறினார்.

அது மட்டுமல்ல அவர் தன் சுயசரிதையில் அகிம்சையைப் பற்றிய தெளிவை “காந்தி கிராமத்தில் தங்கி அதன் நிறுவனர்களில் ஒருவரான ஜி.ராமசந்திரனிடம்தான் பெற்று என் போராட்டத்தை வடிவமைத்தேன்” என்று எழுதியுள்ளார்.

நெல்சன் மண்டேலாவும் அதைத்தான் பின்பற்றினார். உலகம் கடைப்பிடிக்கின்ற முன்னேற்றப் பாதைக்குப் பதிலான ஒரு மாற்றுப் பாதையைத்தான் இன்று தேடுகிறது.

அது காந்தியிடம்தான் இருக்கிறது என்பதை மேற்கத்திய மக்கள் புரிந்து கொண்டு தனிமனித வாழ்வில் காந்தியின் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டனர்.

உலகம் முழுவதும் மானுடம் எளிய வாழ்வை நோக்கி, இயற்கையை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது.

அறிவு நிலையில் செயல்படும் சமூகம் இன்றைய வளர்ச்சிப் பாதையின் பேராபத்தை உணர்ந்து செயல்படத் துவங்கி விட்டது.

நாமோ அதற்கு நேர் எதிர்திசையில் பயணித்து வருகிறோம். மேற்கத்தியம் என்பதை நம் அறிவு ஏற்றுக் கொள்கிறது.

இன்று மேற்கத்திய சமுதாயமே அந்தமுறை தவறானது என்று எண்ணும் நிலையில் நாம் மேற்கத்திய முறையை விடமுடியாமல் தவிக்கின்றோம்.

நம்மிடம் அறிவும் ஆற்றலும் இருந்துதான் ஒரு நாகரீகத்திற்கு சொந்தக்காரர்களாக இருந்துள்ளோம் என்பதை நம் அறிவு ஏற்க மறுக்கிறது. நம் சமூகம் தன் வரலாறு மறந்த ஒரு சமூகம்.

நம் மக்களுக்கு நாம் கடந்து வந்த பாதையின் முக்கியத்துவம் பற்றிய எந்தப் புரிதலும் இல்லை. இந்த நாட்டின் விடுதலைக்கு நம் முன்னோர்கள் கொடுத்த விலை மற்றும் தியாகங்கள் என்ன என்பதை மறந்து நம் மக்கள் மோகத்தில் தோய்ந்து வாழ்கின்றனர்.

நம்முடைய கல்வியும் நம் தியாக வரலாற்றையும் உணர்வுபூர்வமாக நம் இளைஞர்களுக்கு போதிக்கும் சூழலில் இல்லை.

அதேபோல் நம் நாகரீகத்தின் தொன்மையான விழுமியங்களை மீட்டெடுத்து நம் வாழ்வில் இணைத்துக் கொள்ள நம் கல்வி வழிகாட்டவில்லை.

அதேபோல் அரசியல் கட்சிகளும் கட்சியைக் கட்டுவதில் காலத்தைக் கழித்தார்களே தவிர சுதந்திர நாட்டில் பொறுப்புடன் வாழ மக்களை தயாரிப்பதற்கு பணியாற்றிடவில்லை.

ஆட்சியாளர்களோ அரசைக் கட்டமைக்க முனைந்தார்களே தவிர பொறுப்புமிக்க குடிமக்களை உருவாக்க செயல்படவில்லை.

அதன் விளைவுதான் நாம் பார்க்கும் பொறுப்பற்ற செயல்பாடு. எல்லா இடங்களிலும் அதன் விளைவாக நாம் பார்க்கும் ஒரு குழப்பமான இந்தியா. பலருக்கு புதிரான இந்தியா.

ஒரு முப்பது ஆண்டு காலத்தில் புலன்களுக்குத் தீனி போடும் செயல்பாடுகள் சந்தையால் கட்டமைக்கப்பட்டு அரசால் அங்கீரிக்கப்பட்டு நுகர்வில் தோய்ந்துவிட்டனர் பெரும்பகுதி மக்கள்.

இதில் ஏழை பணக்காரர் வித்தியாசமின்றி இந்தச் சூழலில் மக்கள் வாழ்கின்றனர்.

மக்களை ஒரு போதை நிலைக்கு நம் அரசும், சந்தையும் கொண்டுவந்து நிறுத்தி விட்டது அதன் விளைவு இன்று நாம் பார்க்கும் அலங்கோல அறமற்ற சமூக பொருளாதார அரசியல் வாழ்க்கை.

நவீன ஐரோப்பிய வரலாறறை எழுதிய கெச்.ஏ.எல்.பிஷ்ஷர் ஓர் கருத்தை ஆழமாக பதிவு செய்தார்.

“எந்த சமூகமோ, நாடோ, அல்லது நிறுவனமோ தன்னை மாற்றிக்கொண்டு வெற்றித்தடங்களைப் பதிக்கும்போது, ஒவ்வொரு நிலையிலும் பெற்ற வெற்றிகளை நிலைநிறுத்த செயல்படத் தவறினால் அடைந்த வெற்றி பலனற்றுப் போய்விடும்” என்றார்.

இதைத்தான் “ஒரு சமூகம் விடுதலை அடைவது என்பது பெரும் போராட்டத்திற்கு பிறகு நடைபெறும் ஒரு நிகழ்வுதான்.

ஆனால் அதைவிட முக்கியமானது அடைந்த சுதந்திரத்தைப் பாதுகாக்க சுதந்திரத்திற்கும் போராடியதை விட ஒரு மடங்கு அதிகமாகப் போராட வேண்டும்” என்று நெல்சன் மண்டேலா கூறினார்.

எனவே காலத்திற்கேற்ப நவீனப்படுத்தி தன்னை மக்கள் தேவையில் வைத்து செயல்படாத எந்த நிறுவனமும் காலச் சூழலில் காணாமல் போய்விடும். இதை இந்த இடத்தில் குறிப்பிடுவதற்கு ஒரு காரணம் உண்டு.

காந்தியின் மறைவுக்குப்பின் சேவா கிராமத்தில் கூடியவர்கள் எடுத்த முடிவில் ஒன்று காந்திய நிறுவனங்கள் சமூகப் பணி மேற்கொண்டு, அதன் மூலம் அரசுக்கு வழிகாட்ட வேண்டும் என்பது.

ஆனால், அந்த காந்திய நிறுவனங்கள் இன்று எங்குள்ளது என்று திரும்பிப் பார்க்கும்போது கண்ணில் ரத்தம் வருகிறது.

காந்தி உருவாக்கிய நிறுவனங்கள் பல, அவர் வாழ்ந்த அதே சேவா கிராமத்தில் எப்படி அரசியல்வாதிகளால் சிதைக்கப்படுகிறது எப்படியெல்லாம் அரசியல்வாதிகள் அந்த நிறுவனங்களுக்குள் புகுந்து நிலங்களை அபகரிக்க செயல்படுகிறார்கள் என்பதை அங்குள்ள சர்வோதய நிறுவன ஊழியர்கள் கூறியதை கேட்டபோது காந்திய நிறுவனங்களைப் பாதுகாக்க இயலாத நிலையில் காந்திய நிறுவனங்கள் இருக்கின்றன.

காந்தி மட்டும் நம் நாட்டில் அனாதை ஆக்கப்படவில்லை, காந்திய நிறுவனங்களும் அனாதைகள் ஆக்கப்பட்டு விட்டன இவ்வளவு பெரிய இயக்கத்தை நடத்திய காந்தியின் நிறுவனங்கள் ஏன் இப்படி சிதிலமடைந்தன என்று மீள் பார்வை செய்தபோது நமக்கு எளிதாக புலப்பட்டது பல அவைகளில் மிக முக்கியமானது ஒன்று.

ஊரகத் தொழில்களை வளர்த்தெடுக்கும் நிறுவனங்களை ஊக்குவித்து ஊரக பொருளாதாரத்தைப் பெருக்க இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் அரசாங்கம் ஒரு நிறுவனத்தை “காதி மற்றும் கிராமிய தொழில்கள் வார்யம்” என்ற பெயரில் மும்பையில் ஆரம்பித்து தலைசிறந்த காந்தியவாதிகளை அதற்கு தலைவராக நியமனம் செய்தது மத்திய அரசு.

க.பழனித்துரை

அதற்கென தனி நிதிக்கீடு செய்து செயல்பட வைத்தது. அது கடைசியாக ஊழலின் ஒட்டுமொத்த தலைமையிடமாக மாறி பல காந்திய நிறுவனங்களைச் சிதிலமடையச் செய்துவிட்டது.

காதிப் பணியினையும், ஊரக தொழில்களை மேம்படுத்தும் பணியினையும் பெரும்பகுதி காந்திய நிறுவனங்கள்தான் அன்று முன்னெடுத்தன.

அந்தப் பணி என்பது மேற்கத்திய தொழில்மயத்திற்கு இணையாக மிகப்பெரிய இயக்கமாக்கத் தேவையான பணிகள் செய்ய வேண்டிய சூழலில்தான் காந்திய நிறுவனங்களுக்கு மிகப்பெரிய தலைவர்கள் தேவைப்பட்டனர்.

ஆனால், ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு அந்த காந்திய நிறுவனங்களுக்குக் கிடைத்தவர்கள் சாதாரண மேலாளர்கள்தான். எனவேதான் காந்திய நிறுவனங்களை அவர்களால் முன்னெடுத்துச் செல்ல இயலவில்லை.

அகில இந்திய கிராமத் தொழில் நிறுவனச் சங்கத்தை காந்தி 1934ல் ஆரம்பித்து, அதை ஜெ.சி.குமரப்பா மஹன் சங்கராலயாவில் தங்கி இருந்து நடத்தி வந்தார்.

இன்று அங்கு அந்த நிறுவனத்துக்குள்ள நிலங்களை அபகரிக்க அரசியல்வாதிகள் நடத்தும் நிகழ்வுகளை செய்தித்தாட்களில் பார்த்துவிட்டு அங்கு சென்றபோது அங்குள்ளவர்களிடம் விவாதித்போது நமக்குப் புரிந்தது ஒன்றே ஒன்றுதான்.

நம் காந்திய நிறுவனங்கள் மீட்பாராற்று அனாதைகளாக நிற்கின்றன. காந்திய நிறுவனங்களின் நிலங்களின் மேல் நம் அரசியல்வாதிகளின் பார்வை படுகின்றது. அதைக் காப்பதற்கு யாரும் இல்லை.

காந்தியம் அது பிறந்த இடத்தில் அநாதையாகி நிற்கிறது. காந்தியம் இந்திய வாழ்வுமுறையை கட்டமைக்க முனைந்தது. நாமோ மேற்கத்தியத்தில் மேற்கத்தியர்களைவிட தோய்ந்து வாழ்ந்து வருகின்றோம்.

இன்றும் நாம் வாழும் வாழ்வு இந்தியாவுக்கான வாழ்வு அல்ல. இந்திய மக்களின் மையச் செயல்பாடக இருக்க வேண்டிய பொது வாழ்வு, நம் முன்னோர்கள் தந்த அறவாழ்வு. அது சமூகத்திற்கானது, இயற்கையுடன் இணைந்தது.

அந்த வாழ்வினை இந்திய மண்ணில் மீண்டும் உருவாக்க காந்தி கனவு கண்டார். அந்தக் கனவுகள் அனைத்தும் இன்று சிதைக்கப்பட்டு ஒரு நுகர்வுச் சமூகத்தை உருவாக்கி வைத்து வாழ்கின்றோம்.

எந்த ஒரு சமூகமும் அதன் வரலாற்றை மறந்து சுயமரியாதையை இழந்து சாதனைகளைப் படைக்க முடியாது. சுதந்திரம் அடைந்த சில வருடங்களுக்குக்குள்ளாகவே நாம் தடம் புரண்ட அரசியலில் பயணிக்க ஆரம்பித்தோம்.

அதன் விளைவு எப்படி மக்களை வெள்ளைய அரசு சுரண்டியதோ அதேபோல் மீண்டும் மக்களைச் சுரண்ட நாமே வழிவகை செய்துகொண்டுவிட்டோம்.

அதன் விளைவுதான் நம் மக்கள் இன்றும் மேய்க்கப்படுபவர்களாகவே இருக்கின்றனர்.

நம் அரசியல், மேய்ப்பு அரசியலாக இருக்கின்றது. நம் அரசு மேய்ப்பவராகவே இருக்கின்றது. முன்பு வெள்ளையனுக்கு பயந்து வாழ்ந்தனர்.

இன்று சுதந்திர மண்ணில் மக்கள் உருவாக்கிய அரசுக்கே பயந்து வாழ்பவராக உருவாக்கப்பட்டு விட்டனர்.

இந்தச் சூழலை மாற்றுவதற்கு குறுக்கு வழி ஏதும் இல்லை. மக்களைத் தயார்படுத்துவதுதான் அதற்கான ஒரே வழி.

அந்தப் பணியை ஆத்ம சக்தி படைத்தோர் எழுந்து செய்திட வேண்டும். அதுதான் இன்றைய தேவை.

You might also like