அ.தி.மு.க.வின் பொருளாளரான ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்த ஒருங்கிணைப்பாளர் பதவி ‘காலாவதியானதாக’ அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கட்சிப் பொருளாளர் பதவியும் பறிக்கப்பட வாய்ப்பிருப்பதாகச் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தி.மு.க.வில் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டது குறித்த ஒரு செய்தி.
“தி.மு.க தலைமைக் கழகப் பொருளாளர் எம்.ஜி.ஆர் அவர்கள் அண்மைக் காலத்தில் கழகக் கட்டுப்பாட்டுகளை மீறியும், கழகத்திற்குக் களங்கம் ஏற்படும் வகையிலும் தொடர்ந்து தன்னுடைய நடவடிக்கைகள் மூலம் செயல்பட்டு வருவதால்,
அவர் இன்று முதல் கழகப் பொருளாளர் பொறுப்பிலிருந்தும் மற்றும் கழகத்தின் சாதாரண உறுப்பினர் உள்பட எல்லாப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலகமாக விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார். அவர் பெயரில் முறைப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’
– இது 11.10.1972 அன்று முரசொலி இதழில் வெளியான செய்தி.
எம்.ஜி.ஆர் அப்போது நடந்த கூட்டம் ஒன்றில் பகிரங்கமாக கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட தி.மு.க தலைவர்கள் தங்கள் சொத்துக் கணக்கைக் காட்ட வேண்டும் என்று பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து – எம்.ஜி.ஆர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகவும், அதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் 26 பேர் கையெழுத்திட்டு மனு ஒன்றைத் தி.மு.க தலைமைக் கழகத்திடம் அளித்தனர்.
அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட கலைஞரும், நாவலர், நெடுஞ்செழியனும் அதைப் பரிசீலனை செய்து, அதை துணைப் பொதுச் செயலாளரான என்.வி.நடராசன் செய்தியாளர்களிடம் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு நீக்கப்பட்டிருப்பதான செய்தி அறிக்கையை வாசித்தார்.
அந்த அறிக்கையைச் செய்தியாளர்களுக்குத் தருவதற்கு முன்பு எம்.ஜி.ஆரிடம் விளக்கம் எதுவும் கேட்கப்படவில்லை.
முரசொலி மாறன், இரா.செழியன், இராம. அரங்கண்ணல், நாஞ்சில் கி. மனோகரன் போன்றவர்கள் எம்.ஜி.ஆர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் கட்சியை விட்டு நீக்கப்பட்டார் எம்.ஜி.ஆர்.