‘ரொம்பவும் திருப்தி’ என்று சொன்ன செல்லம்மாள்!

பாரதி அன்பர்களுக்கும், வாசகர்களுக்கும் அரிய பொக்கிஷம் வழக்கறிஞர் கே.எஸ்.இராதா கிருஷ்ணன் அண்மையில் தொகுத்து வெளியிட்டிருக்கிற ’கரிசல் காட்டில் கவிதைச் சோலை’ என்கிற நூல்.

இராஜாஜி, அண்ணா, கலைஞர் கருணாநிதி, பாரதியின் மனைவி, மகள் என்று அனைத்துத் தரப்பினரின் அனுபவச் செழுமை கொண்ட கட்டுரைகளுடன் 750 பக்கங்களுக்கு மேல் விரிந்திருக்கிற நூல் இராதா கிருஷ்ணனின் பல்லாண்டு கால உழைப்பு.

அந்த நூலில் இருந்து பாரதியின் மனைவியான செல்லம்மா எழுதிய சிறு கட்டுரை- ஓர் உதாரணத்திற்கு :

பாரதியாரை ஆதரித்து வந்த எட்டயபுரம் மகாராஜா ஒரு சமயம் சென்னைக்குப் போயிருந்தார். அவர்கூட பாரதியாரும் அவருடைய நண்பர்களும் போயிருந்தார்கள்.

போகும் சமயத்தில், செல்லம்மா! வரும்போது உனக்குத் தேவையான சாமான்கள் வாங்கிக் கொண்டு வருகிறேன்’ என்று சொல்லி விட்டுப் போனார். நானும் ஆவலாக அவர்கள் திரும்புவதை எதிர் நோக்கியிருந்தேன்.

பதினைந்து தினங்கள் கழித்து எட்டயபுரம் திரும்பினார். குதிரை வண்டிகள் இரண்டு வாசலில் வந்து நின்றன. ஒன்றிலிருந்து தாம் மட்டும் இறங்கினார். மற்றொரு வண்டியிலிருந்த மூட்டைகளை வண்டிக்காரன் உள்ளே கொண்டு வந்து வைத்தான்.

மூட்டைகள் கூடத்தை நிரப்பின. அத்தனையும் புடவைகள், வெள்ளிப் பாத்திரங்கள் முதலியவைகளாயிருக்கலாமென்று நான் மனம் பூரித்தேன். அவருடைய நண்பர்கள் முதலியோர் வந்து விசாரித்து விட்டுச் சென்றார்கள்.

கடைசியாக, நான் மூட்டைகளை அவிழ்த்துப் பார்த்ததும், எனக்குக் கோபந்தான் வந்தது. அத்தனையும் புத்தகங்கள்!

புறநானூறு, அகநானூறு, பதிற்றுப் பத்து, சிலப்பதிகாரம், திருக்குறள், திருவருட்பா, கம்பராமாயணம், ஆங்கிலப் புத்தகங்கள்!… ஒரே ஒரு புடவை மட்டும் வாங்கி வந்தார்.

“இதென்ன இது! மகாராஜா எவ்வளவு பணம் கொடுத்தார்?” என்று கேட்டேன்.

“ஐந்நூறு ரூபாய் கொடுத்தார்” என்று சொல்லிப் பணப் பையை என்னிடம் நீட்டினார். அந்தப் பையைத் திறந்து பார்த்தால், பதினைந்து ரூபாய்தான் இருந்தது.

இவருடன் சென்ற இவருடைய நண்பரோ, வீட்டுக்கு வேண்டிய சாமான்களையும் வாங்கிக்கொண்டு, கையிலும் ரூபாய் முந்நூறு கொண்டு வந்திருந்தார்!

பாரதியார் எனது முகக்குறிப்பை உணர்ந்து, “செல்லம்மா நீ பணத்துக்கு ஆசைப்படாதே! அழியும் பொருளைக் கொடுத்து அழியாத கல்விச் செல்வத்தைக் கொணர்ந்தேன். என் மனத்திற்குப் புத்தகங்களே ஆனந்தங் கொடுக்கின்றன. என்னுடைய சந்தோஷம் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?” என்றார்.

நான் “ரொம்பத் திருப்தி!” என்றேன்.

*****

‘சக்தி’ காரியாலயம் வெளியிட்டிருக்கும் ‘பாரதியார் சரித்திரம்’ என்ற நூலிலிருந்து எடுத்தது.

You might also like