தற்போது பதவி வகிக்கும் மாநிலங்களவை எம்.பி.க்கள் தங்கள் மீதான குற்ற வழக்கு விவரம் மற்றும் சொத்து விவரத்தை தாக்கல் செய்துள்ளனர்.
அவற்றை, ஜனநாயக சீர்திருத்த சங்கமும், தேசிய தேர்தல் கண்காணிப்பகமும் இணைந்து ஆராய்ந்து இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளன.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை: –
மொத்தம் 233 மாநிலங்களவை எம்.பி.க்களில் 226 பேரை பற்றிய விவரங்கள் கிடைத்துள்ளன. இவர்களில் 197 பேர் கோடீசுவரர்கள் ஆவர். அதாவது, 87 சதவீதம் பேர் கோடீசுவரர்கள். ஒவ்வொரு எம்.பி.யின் சராசரி சொத்து மதிப்பு ரூ.79 கோடியே 54 லட்சம்.
71 எம்.பி.க்கள் (31 சதவீதம்) தங்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக அறிவித்துள்ளனர். கட்சிரீதியாக பார்த்தால், அவர்களில் 20 பேர் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள். 12 பேர் காங்கிரசையும், 3 பேர் திரிணாமுல் காங்கிரசையும், 5 பேர் ராஷ்டிரீய ஜனதா தளத்தையும், 4 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியையும், தலா 3 பேர் ஆம் ஆத்மி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளையும், 2 பேர் தேசியவாத காங்கிரசையும் சேர்ந்தவர்கள்.
மாநிலவாரியாக பார்த்தால், இவர்களில் 6 பேர் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள். அதிகபட்சமாக, 12 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
37 எம்.பி.க்கள் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. 2 பேர் மீது கொலை வழக்கும், 4 பேர் மீது கொலை முயற்சி வழக்கும் உள்ளன. பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் 4 எம்.பி.க்கள் சிக்கி உள்ளனர். அவர்களில் காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால் மீது கற்பழிப்பு வழக்கு உள்ளது.