அமெரிக்காவில் வசிக்கும் நிர்மல் பிச்சை – ராஜி தம்பதியின் மகள் மேகனா. பதினாறு வயதாகும் அவர், எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதை ஒன்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
இதுபற்றி கனடாவில் வாழும் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய பேஸ்புக் குறிப்பு…
இந்தச் சிறுமியின் பெயர் மேகனா; வயது 7. தகப்பன் நிர்மல் பிச்சை; தாய் பெயர் ராஜி. இவர்கள் குடும்பமாக நாஞ்சில் நாடனின் இயல் விருது விழாவுக்கு யூன் 2013ல் அமெரிக்காவிலிருந்து ரொறொன்ரோவுக்கு வந்திருந்தார்கள். அப்பொழுது எடுத்தது இந்தப் படம்.
இப்பொழுது சிறுமிக்கு வயது 16. அவர் ஜெயமோகனுடைய ’விலங்கு’ சிறுகதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.
ஓர் அமெரிக்கப் பள்ளிக்கூடத்தில் கல்வி கற்கும் இந்தச் சிறுமி தானாகவே முன்வந்து இந்த மொழிபெயர்ப்பைச் செய்திருக்கிறார்.
தேர்ந்த மொழிபெயர்ப்பாளருடைய லாவகமும், சொற்தேர்வும் கொண்ட சிறந்த மொழிபெயர்ப்பு.
இதை வெளிநாட்டுப் பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டும். பிரச்சினை என்னவென்றால் மொழிபெயர்ப்புகளுக்கு வெளிநாட்டுப் பத்திரிகைகள் ஆதரவு தருவதில்லை. அவை ஆங்கிலத்தில் எழுதுவதையே விரும்புகின்றன.
பத்து கதைகள் அனுப்பினால் ஒன்று பிரசுரமாகும். பத்து கதைகள் பிரசுரமாக வேண்டுமானால் 100 மொழிபெயர்ப்புகளை அனுப்பவேண்டும்.
சமீபத்தில் கீதாஞ்சலி ஸ்ரீ என்னும் இந்தி எழுத்தாளர் எழுதிய நாவல் ஆங்கிலத்தில் Tomb of Sand என்ற பெயரில் மொழிபெயர்ப்பாகியிருந்தது.
அதற்குச் சர்வதேச புக்கர் பரிசு (63,000 டொலர்கள்) வழங்கப்பட்டது பெருமையான விசயம்.
’திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்’ என்றார் பாரதியார்.
மேகனாபோல இன்னும் பல இளம் தலைமுறையினர் மொழிபெயர்ப்பு செய்ய முன்வரவேண்டும்.
தமிழை உலகத்துக்கு எடுத்துச் செல்ல அவர்களால்தான் முடியும்.