இந்திய விளையாட்டுச் சரித்திரத்தில் தவிர்க்க முடியாத பக்கங்களுக்குச் சொந்தக்காரர் தடகள ராணி பி.டி.உஷா.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் பயோலி கிராமத்தில் 1964-ல் பிறந்தவர் உஷா. தனது குழந்தைப் பருவம் முதலே விளையாட்டுகளில் ஆர்வமாக இருந்தவர்.
மாநில அளவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டியில், பங்கு பெற்று வெற்றிகளைத் தன் வசமாக்கிவந்தார்.
1976-ல் கேரள அரசு பெண்களுக்காக தொடங்கிய விளையாட்டுப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து தீவிரமாக பயிற்சி செய்தார். பின்னர், 1979ல் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில் (100 மீட்டர்) முதல் பதக்கம் வென்றார்.
இங்கு தேசிய அளவில் கவனம் ஈர்த்த இவருக்கு 1980-ல் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பிரதிநிதியாக பங்குபெற்றார்.
அப்போது உஷாவின் வயது 16. தனது முதல் ஒலிம்பிக்கில் சோடை போயிருந்தாலும், அவர் சோர்ந்து போகவில்லை. அதன் பின்னர் நடைபெற்ற சர்வதேச போட்டிகள், ஆசிய தடகளப் போடிகள் என அவர் பங்கு பெற்ற அனைத்து போட்டிகளிலும் பதக்கங்களைக் குவித்தார்.
இன்னும் சொல்லப்போனால், பி.டி. உஷா இருந்தாலே, இந்தியாவுக்கு ஒரு பதக்கம் பார்சல் எனச் சொல்லும் அளவுக்கு மிகவும் திறமையுடன் விளையாடி மற்ற நாட்டு வீராங்கனைகளுக்கு சவாலாக இருந்துள்ளார்.
1988 ஒலிம்பிக்கில் பதக்கத்தினை இழந்தார். இனி உஷா அவ்வளவு தான், அவர் விளையாடவே மாட்டார் என பலரும் நினைத்த காலகட்டம் அது. சிலர் இவரை இனி விளையாடவே விடக்கூடாது என சதித் திட்டம் தீட்டிய காலகட்டமும் அதுதான்.
அந்த மோசமான காலகட்டத்தினை உஷா தனக்கான படிக்கட்டுகளாக மாற்றினார்.
இதிலிருந்து மீண்ட உஷா, 1989-ல் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில், 4 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று அசாத்தியப் படுத்தினார்.
உஷா தற்போது கேரளாவில் தடகள பயிற்சிப்பள்ளியினை நடத்திவருகிறார். பயிற்சியும், முயற்சியும் குறித்து தனது மாணவர்களுக்கு அவர் கூறும்போது, “தோல்விக்கும் வெற்றிக்கும் இடைப்பட்ட காலத்தில் புறக்கணிப்பும், வலியையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்” என்ற அறிவுரையினை எப்போதும் வழங்கிவருகிறார்.
உஷா மொத்தம் 103 சர்வதேச பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லமுடியாமல் போனாலும் இந்தியாவின் தங்க மகள் என்றால் அது பி.டி. உஷா தான்.
உஷாவுக்கு கோழிக்கோடு பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பதக்கம் வழங்கியுள்ளது. மேலும் இந்திய அரசு 1983-ஆம் ஆண்டு அர்ஜுனா விருதும், 1985-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் அளித்து கௌரவித்தது.
ஆசியாவின் தடகள ராணி, இந்தியாவின் தங்க மங்கை பி.டி. உஷா தனது 58-வது பிறந்தநாளை இன்று (ஜூன் 27) கொண்டாடுகிறார்.
அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
- நன்றி: முகநூல் பதிவு