தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை விஜய் என்பது ஒரு மந்திரச் சொல். ஒரு படத்தின் உலக விநியோக உரிமையைப் பெறும் பெருநிறுவனம் முதல் உள்ளூர் தியேட்டர் கேண்டீனில் டீ விற்பவர் வரை அனைவரது பிழைப்புக்கும் விஜய்யின் படங்கள் தருவது மேக்ஸிமம் கியாரண்டி!
1992ல் ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலமாக அறிமுகமானவர், 2021ல் தனது 66வது படமான ‘வாரிசு’டை ரசிகர்களுக்குத் தர காத்திருக்கிறார். இடைப்பட்ட காலத்தை உற்றுநோக்கினால், விஜயின் அயராத முயற்சியும் உழைப்பும் தெளிவாகத் தெரியும்.
பத்தோடு பதினொன்று அல்ல!
இந்தித் திரையுலக ஜாம்பவான் ராஜ்கபூர் காலம்தொட்டு, வாரிசுகள் சினிமாவுக்கு வருவது வழமையான ஒன்று. அதனால், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மகன் என்ற அந்தஸ்துடன் விஜய் நடிக்க வந்தது ஆச்சரியமான விஷயம் அல்ல.
எண்பதுகளில் அறிமுகமான திரையுலக வாரிசுகளில் கார்த்திக்கும் பிரபுவும் மட்டுமே பல வெற்றி தோல்விகளுக்குப் பிறகு தங்களுக்கான இடத்தை அமைத்துக் கொண்டனர்.
அதனை உணர்ந்ததாலோ என்னவோ செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா, விஷ்ணு என்று மகனுக்காகப் பார்த்துப் பார்த்து கமர்ஷியல் படங்களாக செதுக்கினார் எஸ்.ஏ.சி.
செல்வா, சந்திரலேகா, ராஜாவின் பார்வையிலே போன்ற பிற இயக்குனர்களின் படங்களில் தந்தையின் வழிகாட்டுதலுடன் நடித்தார் விஜய்.
விக்ரமன் இயக்கத்தில் வெளியான பூவே உனக்காக, விஜய்யின் கதைத் தேர்வை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப்போட்டது. தொடர்ந்து காதலுக்கு மரியாதை, லவ் டுடே, நிலாவே வா, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற படங்களில் நடிக்க விதை போட்டது.
தொடர்ச்சியாகப் பல வெற்றிகள் வந்த பிறகும் நடனக் காட்சிகளிலும் சண்டை காட்சிகளிலும் விஜய் காட்டிய அக்கறை, அவர் வாரிசு நடிகர்களில் பத்தோடு பதினொன்று அல்ல என்று நிரூபித்தது.
வேறுபட்ட தேர்வுகள்!
ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் வெளியான பகவதியும் ரமணா இயக்கத்தில் வெளியான திருமலையும், விஜய்யின் ஆக்ஷன் ஹீரோ கனவுக்கு உரமிட்டன. ஆனால், அவற்றுக்கு நடுவே கமர்சியல் அம்சங்களோடு சில வித்தியாசமான கதைகளையும் அவர் தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.
நினைத்தேன் வந்தாய், பிரியமுடன், என்றென்றும் காதல், பிரியமானவளே, சச்சின், வசீகரா, நண்பன், காவலன் போன்ற படங்கள் காமெடி, சென்டிமென்ட், ரொமான்ஸ் என்று வெவ்வேறு வகை சார்ந்து அமைந்திருந்தன.
இவ்வரிசையில் பெரும்பாலானவை ரீமேக் படங்கள் என்றாலும் பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என்று வெவ்வேறு தரப்பைச் சென்றடைவதற்கான வழியாக இருந்ததையும் உற்றுநோக்க வேண்டும்.
எத்தனை திறமை இருந்தாலும், அனுபவம் அதிகமாகும் போது அதில் நுணுக்கமும் நேர்த்தியும் கூடும் என்பது கண்கூடு.
விஜய் அறிமுகமானது முதல் ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் வெளியான அவரது திரைப்படங்களில் இது நன்றாகத் தெரியும். அந்த வகையில் நண்பன், கத்தி, மெர்சல் படங்களில் மிரட்டலான நடிப்பைத் தந்த விஜய், மாஸ்டர் படத்தில் மது போதைக்கு அடிமையான புரொபசர் வேடத்தில் நடித்து புது உச்சம் தொட்டார்.
மதுப்பழக்கம் இல்லாத இளையோர் இல்லை எனும் தற்போதைய சூழலில், மாஸ்டர் மூலம் அவர் தன் ரசிகர்களை நல்வழிப்படுத்துவதற்கு ஊக்கம் தந்ததாகவும் கருத வேண்டியிருக்கிறது.
நடிகர்களின் ரசிகன்!
எண்பதுகளில் வெளியான அமிதாப்பச்சன் படங்களில், விஜய் என்பது அவரது பாத்திரப் பெயராக இருக்கும். தமிழில் விஜயகாந்தின் படங்களிலும் இதனைக் காண முடியும்.
ஒரு வெற்றிகரமான நாயகனாகும் கனவை தன் பெயரின் மூலமாக வெளிப்படுத்திய விஜய், தனக்கு முன்னிருந்த அத்தனை கலைஞர்களையும் தேவைப்படும் அளவில் பின்பற்றி வருகிறார்.
தமிழில் எம்.ஜி.ஆர். படங்களுக்கு அடுத்தபடியாக விஜய் நடித்த படங்களில் ஹிட் பாடல்கள் அதிகம் இருப்பதைக் காணலாம். தனது திரைப்படங்களுக்கான முன் தயாரிப்பு பணியின்போது திரைக்கதை தொடங்கி பாடல்கள், இசை போன்ற பலவற்றில் விஜய்யின் பங்கு இருப்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
நடனத்தில் சிரஞ்சீவியையும் சண்டைக் காட்சிகளில் விஜயகாந்தையும் ரொமான்ஸில் கார்த்திக்கையும் மிக நுணுக்கமாகப் பின்பற்றியிருப்பார்.
விஜய்யோடு பணியாற்றிய இயக்குனர்களைக் கேட்டால், திரைக்குப் பின்னால் அவர் எத்தனை ஜாம்பவான்களின் தடங்களில் நடந்து செல்கிறார் என்பது தெரியவரும்.
அடுத்தடுத்த இலக்குகள்!
வாரிசு நடிகர்கள் பட்டியலில் இடம் பெற்றாலும், நெப்போட்டிசம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தபோது விஜய்யின் பெயர் அதில் துளியளவும் இடம்பெறவில்லை. அந்தவகையில் திரையுலகைச் சேர்ந்தவர்கள் தங்கள் வாரிசுகளைக் களம் இறக்குவதற்கு விஜய்யின் திரைப்பயணம் ஒரு முன்மாதிரி.
ஒரு திரைப்படத்தின் வெற்றி, அது தொடர்கதையாகவதற்கான உழைப்பு, ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் தேடல், கமர்சியல் வட்டத்துக்குள் புதிய விஷயங்களைப் பரிசோதிக்கும் ஆர்வம், இவை அனைத்துக்கும் மேலாகச் செய்யும் தொழிலில் காட்டும் சிரத்தை போன்றவையே விஜய்யை இத்தனை உயரத்துக்கு அழைத்துச் சென்றுள்ளது.
பல கோடி ரூபாய் வசூல் சாதனைக்கு இடையே கேரளா, கர்நாடகா மட்டுமில்லாமல் தெலுங்கு மார்க்கெட்டிலும் விஜயயின் படங்கள் மொழிமாற்றம் செய்யப்படுகின்றன.
இதன் தொடர்ச்சியாக விஜய்யின் அடுத்த படத்தை இயக்குனர் வம்சி பைடிபல்லி தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் இயக்குவார் என்று கூறப்படுகிறது.
இது தவிர்த்து விஜய்யின் படங்கள் இந்தி தொலைக்காட்சிகளில் வெற்றிகரமாக ஓடுவது தனிக்கதை.
ஒரு இலக்குக்குப் பிறகு இன்னொன்று என்று தனது பயணத்தை தொடர்ந்து வரும் விஜய், தன் பெயருக்குக் காரணமான அமிதாப்பின் வழியில் சென்று எதிர்காலத்தில் பெரும்புகழ் பெறலாம்.
அது சாத்தியமா என்று விஜய்யிடம் கேட்டால், தனது டிரேட் மார்க் புன்னகையை உதிர்க்கக் கூடும்.
இலக்குகள் தானாக நிர்ணயிக்கப் படுவதென்பது ஒரு வரம்.
இனிவரும் ஆண்டுகளிலும் விஜய்க்கு அது வாய்க்கட்டும்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விஜய்!