எப்போதுமே நிறைவையே உணர்கிறேன்!

நூல் வாசிப்பு:

விரைவில் வெளிவரவுள்ள தன் காதல் கணவரின் சிறுகதைத் தொகுப்பு நூல் பற்றி பேஸ்புக் பக்கத்தில் சுவாரசியமாக எழுதியிருக்கிறார் எழுத்தாளர் ஜா. தீபா.

தாய் இணையதள வாசகர்களுக்காக அந்தப் பதிவு இதோ…

காலச்சுவடில் ‘சுடலை’ என்றொரு கதை வந்திருந்தது. அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அந்தக் கதையினை பல்கலைக்கழக நூலகத்தில் வாசித்தபோது, அது என் நினைவில் என்றைக்குமாய் தங்கியிருக்கும் எனத் தெரியாது.

பின்னாட்களில் சென்னைக்கு வேலைக்கு வந்தபோது இயக்குநர் நாகா அவர்களிடம் உதவியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஒருநாள் படப்பிடிப்புத் தளத்தில், ‘இனி இவர் தான் நாகா சாருக்கு எழுதுவார்’ என திரைக்கதையாசிரியரை அறிமுகம் செய்தார்கள். “என் பேரு அய்யப்பன்..” என்று அந்த எழுத்தாளர் அறிமுகம் ஆனார்.

பேசிக் கொண்டிருக்கையில் அவர் இலக்கிய பத்திரிகைகளுக்கு எழுதுபவர் எனத் தெரியவந்தது. அதுவரை எங்கோ இருந்த சுடலை கதை நினைவில் வந்தது.

“நீங்கதான சுடலை கதை எழுதியது” என்று இரவு உணவின்போது அய்யப்பனிடம் கேட்டேன். அவர் அதனை எதிர்பார்த்திருக்கவில்லை என்பது முகத்தில் தெரிந்தது. இப்படித் தான் அய்யப்பனுக்கும் எனக்கும் முதல் உரையாடல் நிகழ்ந்தது.

அவர் எழுதுகிற கதைகளின் முதல் வாசகி நான். அவர் எழுதவிருக்கும் கதைகளும், எழுதியவைகளும் எனக்குத் தெரியும். அதிகமும் நாங்கள் கதைகள் தான் பேசுகிறோம். அய்யப்பனின் சிறுகதைத் தொகுப்பு நான் எதிர்பார்த்திருந்த காலத்தைக் கடந்தும் தாமதமாகத்தான் வருகிறது.

நண்பரும் யாவரும் பதிப்பாளருமான ஜீவகரிகாலன் அவர்களுக்கும் நண்பர் வேல்கண்ணன் அவர்களுக்கும் நிச்சயம் நன்றி சொல்லவேண்டும். தொடர்ந்து வற்புறுத்தி இந்தத் தொகுப்பு வந்தாக வேண்டும் என பிடிவாதம் கொண்டிருந்தனர்.

இருவரின் முயற்சியும் மறக்க இயலாதது.

இந்த சிறுகதைத் தொகுப்பு பல வகையிலும் எங்களுக்கு உணர்வுப்பூர்வமானது. எங்கள் இருவரின் வாழ்விலும் உடன் வந்த கதைகள் இவை. என்னுடைய கதைகள் வெளிவரும்போது என்னைக் காட்டிலும் அதிகம் உற்சாகமடைவது அய்யப்பனாகத்தான் இருக்கும்.

அதே போன்று அய்யப்பனின் கதைகள் வெளிவருந்தோறும் ஒரு நிறைவினை எப்போதும் உணர்வேன். ‘மூஞ்சிரப்பட்டன் & பிற கதைகள்’ தொகுப்பு வெளிவரவிருக்கிறது.

ஒவ்வொரு புத்தாண்டின்போதும், பிறந்தநாளின்போதும் இருவரும் ஒருவருக்கொருவர் எழுதுவதற்கான நோட்டினையும் ஒரு பேனாவையும் பரிசளித்துக் கொள்வோம். “நிறைய எழுதணும்” என்பது நாங்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளும் நிரந்தர வாழ்த்து.

இப்போதும் சொல்கிறேன் பாஸ்… நிறைய எழுதணும்.

You might also like