இன்னும் ஏன் ஜெய்பீம் கொண்டாடப்பட வேண்டும்!

காவல்துறையின் மனிதத்தன்மையற்ற தாக்குதலை, அதிகார எல்லை மீறலை முன்வைத்து தமிழில் தற்போது படங்கள் வெளிவரத் தொடங்கியிருப்பது ஆரோக்கியமான அணுகுமுறை.

‘விசாரணை’ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘ஜெய் பீம்’ பல படிகள் மேலேறி ஒடுக்கப்பட்ட மக்களை காவல்துறை எப்படியெல்லாம் சித்திரவதை செய்கிறது, அவர்கள் மீது எப்படி பொய் வழக்குகள் பதியப்படுகிறது என்பதை அப்பட்டமாக பதிவு செய்திருக்கிது.

இத்தகைய படங்கள் பெரும் வரவேற்பு பெறுவது சமூக கலையில் முன்னேற்றத்தைக் காட்டுகிறது. ஆனால் நாம் அச்சம் கொள்ள வேண்டிய ஒரு சூழலும் இதில் மறைமுகமாக ஒளிந்திருக்கிறது.

காவல்துறையின் அராஜகங்களை பதிவு செய்யும் படங்கள் பெறும் வெற்றியை விட, பன்மடங்கு காவல்துறையை நாயகர்களாக ஆராதிக்கும் படங்கள் வெற்றி பெறுகின்றன.

பெரிய கதாநாயகர்கள் அதிகாரிகளாக நடித்த பல படங்கள் தமிழின் வணிகச் சூழலில் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.

ஒரு பக்கம் காவல்துறையின் அராஜகங்களைப் பேசும் படங்கள் வெற்றிபெறுவது, இன்னொரு பக்கம் காவல்துறையினரை கதாநாயர்களாகக் காட்டும் படங்கள் வெற்றிபெறுவதும் நமக்கு உறுத்தலாக தெரியவில்லை. இந்த மனநிலை எப்படி வாய்க்கிறது?

காவல்துறையினரை கதாநாயகர்களாகக் காட்டும் படங்களில் எதிராக வைக்கப்படும் சம்பவங்களில் தொடர்புடைய எல்லோரும் அயோக்கியர்கள் போல, முழுமையான குற்றவாளிகள் போல காட்டப்படுகிறார்கள்.

நான் போலீஸ் இல்லை பொறுக்கி என்று வசனம் பேசி, பெரும் கை தட்டலைப் பெற்று வெற்றி பெற்ற படங்கள் இங்கே உண்டு. அதே நேரத்தில் காவல்துறையின் அராஜகங்களை காட்டும் படங்களில் காவல்துறையே குற்றவாளியாக இருப்பதால், இரண்டு வகை பக்கம் வெற்றி பெறுகிறது.

அதாவது பொதுப்புத்தியில் தவறு செய்யும் சராசரி மனிதர்கள் காவல்துறையால் எவ்வளவு கண்மூடித்தனமாகவும் தாக்கப்படலாம். ஆனால் தவறு செய்யாதவர்களைத் தாக்கினால் காவல்துறையே பெரும் கேடு விளைவிக்கும் துறையாக மாறவும் செய்யலாம்.

உண்மையில் நாம் இந்த இடத்தில் சிந்திக்கத் தவறியது, ஒரு மனிதன் பெரும் தவறு செய்திருந்தாலும் கூட அவனை விசாரணை என்கிற பெயரில் அடித்துத் துன்புறுத்த காவல்துறைக்கு எவ்வித உரிமையும் இருக்கக் கூடாது.

ஜெய் பீம் படத்தில் கூட பெண்களைத் தொந்தரவு செய்யும் ஒருவனை எப்படி தண்டித்தேன் என்று காவல்துறை அதிகாரி பேசும்போது நமக்கு எழாத கோபம், அப்பாவி ராஜாக்கண்ணுவை தாக்கும்போது ஏற்பட்டு விடுகிறது.

இதில் உள்ள நியாயத்தை யாரும் மறுக்க இயலாது. ஆனால் தவறு செய்தவர்களை கண்மூடித்தனமாக, எவ்வித வரைமுறையும் இல்லாமல் தாக்கும் உரிமையை காவல் துறைக்கு யார் கொடுத்தது.

‘பிங்க்’ என்றொரு படம், ஒரு பெண் விர்ஜின் இல்லை என்றாலும், அவளது சம்மதம் இன்றி அவளை ஒரு ஆண் சீண்டக்கூடாது என்பதை பதிவு செய்திருந்தது.

ஒரு பெண் விருப்பப்பட்டு எத்தனை ஆண் கூடவும் உறவு வைத்துக்கொள்ளலாம். ஆனால் ஒரு பெண்ணின் விருப்பம் இன்றி அவளது கணவன் கூட அவரை தீண்டக் கூடாது என்பதுதான் பாலியல் அறம். அதை அப்படியே இங்கேயும் பொருத்திப் பார்க்கலாம்.

ஒரு மனிதன் உண்மையில் குற்றம் செய்திருந்தால் கூட அவனை கண்மூடித்தனமாக, மனித உரிமைகளை மீறி தாக்கும் அதிகாரம் காவல்துறைக்கு இல்லை. இதனை முன்வைத்து நீதிமன்றங்களில் வாதாடி, குற்றவாளிதான் ஆனால் அவனை இவ்வளவு கொடூரமாக தாக்கும் அதிகாரத்தை காவல்துறைக்கு யார் கொடுத்தது? என்கிற சமூக விசாரணையை மேற்கொள்ளும் படங்கள் தமிழில் இதுவரை வெளியாகவில்லை.

இது ஒருவகையில் அப்பாவிகளை விட்டுவிடுங்கள், குற்றவாளிகளை கொன்று விடுங்கள் என்று நாம் காவல் துறையினருக்கு எழுதிக்கொடுக்கும் சாசனமாகவே இருந்து வருகிறது.

அதனால்தான் காவல்துறையை ஹீரோவாகவும் அதே நேரத்தில் காவல்துறையை மோசமான எதிராளியாகவும் காண்பிக்கும் சினிமாக்கள் வெற்றிபெற்றுவிடுகின்றன.

இப்படியான கோணத்திலும் படங்கள் வெளிவரவேண்டும் என்பதே சமூகத்தின் தேவை.

ஆனால் ‘ஜெய் பீம்’ என்கிற திரைப்படம் உண்மை சம்பவத்தை தழுவியத் திரைப்படம், அதில் குற்றமற்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவரை காவல்துறை எவ்வாறெல்லாம் துன்புறுத்துகிறது என்பதைப் பதிவுசெய்த படம் என்பதால் ‘ஜெய் பீம்’ தமிழின் முக்கியமான படமாக மாறியிருக்கிறது.

எடுத்துக்கொண்ட கதைக்களம் மட்டுமின்றி அதனை உருவாக்கிய விதத்திலும் கொஞ்சம் செய்நேர்த்தி இருக்கவே செய்கிறது. தமிழில் இதுவரை வெளியான தலித்தியல் படங்களில் ஜெய் பீம் படம் மட்டுமே கதாநாயக பிம்பத்தை முழுக்க சார்ந்திருக்காமல், அதாவது ஒரு நாயகனே நம்மை காப்பார் என்கிற கற்பிதத்தை நம்பாமல், அண்ணல் அம்பேத்கர் உருவாக்கி வைத்துள்ள சட்டமும், அதனை நிறைவேற்றும் நீதிமன்றமும் நம்முடைய உரிமைகளுக்கான இடம் என்பதை பதிவு செய்திருக்கிறது.

ஜெய் பீம் படத்திலும் கூட சூர்யா என்கிற நாயகனுக்கான சில பிரத்யேக காட்சிகள் இருக்கிறது என்றாலும், இதற்கு முன்னர் வெளியான தலித்திய படங்களோடு ஒப்பிடுகையில் கதாநாயக பிம்பம் இந்த படத்தில் மிகக் குறைவே.

நமது நம்பிக்கையை போலியான கதாநாயக பிம்பம் நோக்கி திருப்பாமல், இருக்கிற அமைப்புகளில் இருந்து நமது உரிமையை மீட்டெடுக்கலாம் என்கிற நிதர்சனமான நம்பிக்கையை நோக்கி திரும்பியிருக்கிறது.

வெகுசன சினிமாவில் தொட இயன்ற ஒரு சிறந்த இடத்தை ஜெய் பீம் படம் தொட்டிருக்கிறது என்றாலும், தமிழ் பார்வையாளர்களுக்கான சில பிரத்யேக சினிமா உருவாக்க முறையும் இதில் இருப்பதை மறுக்க இயலாது. ஒரு வன்முறைக் காட்சியை எப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் இதே காலகட்டத்தில் இந்தியில் வெளியான சர்தார் உத்தம்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை இந்தப் படம் பதிவு செய்திருக்கும் விதம் நேர்த்தியான சினிமா காட்சிகளுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

பிரிட்டிஷ் அதிகாரி அப்பாவியாக போராடிக் கொண்டிருந்த மனிதர்களை எவ்வித ஈவு இரக்கமும் இன்றி சுட்டுத்தள்ளியதும் அதன் பிறகு அவர்களில் உயிருடன் இருக்கும் சிலரை உத்தம் சிங் மீட்க போராடும் காட்சிகளும் பார்வையாளனின் கழிவிரக்கத்தைத் தூண்டி அவர்களை கண்ணீர் விட வைத்திருக்கலாம்.

ஆனால் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை, கழிவிரக்கத்தைத் தூண்டாமல் உள்ளது உள்ளபடி என்கிற தத்துவார்த்த அடிப்படையில் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர். எப்போதும் கலைஞன் யார் பக்கம் என்றால் எளியவனின் பக்கம்தான்.

ஆனால் அதனை அப்பட்டமாக சினிமாவில் காட்சியாக பதிவு செய்யாமல், பார்வையாளனை தானாகவே சுய விசாரணை மேற்கொண்டு தன்னையே விசாரணைக்குள்ளாக்கி பின்னர் உண்மையைக் கண்டறியும் வேலையை தொடங்க வேண்டும்.

அதனை ‘சர்தார் உத்தம்’ திரைப்படம் சாத்தியப்படுத்தியிருக்கிறது. ஜெய் பீம் அந்த இடத்தை தவறவிட்டிருக்கிறது. ஆனால் தமிழ் சினிமாவின் மிக நீண்ட பயணத்தில் இப்படியான ஒரு முயற்சியே இப்போதுதான் நடக்கிறது என்பதால், ஜெய் பீம் போன்ற படங்களில் நிகழும் சில காட்சியியல் குறைபாடுகளை நாம் கடந்துபோய்விடலாம்.

‘ஜெய் பீம்’ படம் ஏற்படுத்திய தாக்கத்தை விட அந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக தொடர்ந்து அது சார்ந்த தேடலில் ஈடுபட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காக சில முன்னெடுப்புகளை செய்கிறார் ஜெய் பீம் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான சூர்யா.

இந்தப் படம் சார்ந்து ஆதிக்க சாதியினரிடத்தில் இருந்து வரும் மிரட்டல்களை, எள்ளல்களை சூர்யா கையாளும் விதம் எல்லா கலைஞர்களுக்கும் உண்மையில் ஒரு முன்னுதாரணம்.

பிரதி என்பது வெறுமனே கதைக்களம் மட்டுமல்ல. அதைத் தாண்டி அந்த பிரதியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு எல்லாரும் அந்த பிரதிக்கு எவ்வளவு நேர்மையாக இருக்கிறார்கள் என்கிற அணுகுமுறையும் சேர்த்தே விவாதிக்கப்பட வேண்டும்.

தமிழில் இதுவரையில் வெளியான தலித்திய திரைப்படங்களில் அண்ணல் அம்பேத்கரின் படங்கள் இருந்திருக்கலாம்.

ஆனால், அண்ணல் அம்பேத்கர் வழியில் ஒடுக்கப்பட்டோருக்கான உரிமைகளை மீட்டெடுக்க இயலும் என்கிற நம்பிக்கையை ஜெய் பீம் படம் விதைத்திருக்கிறது.

மற்ற தலித்திய படங்களில் நடித்திருந்த நடிகர்கள், இயக்குனர்கள் அதனை ஒரு பொருளீட்டும் உத்தியாக பாவித்திருந்தார்கள்.

ஜெய் பீம் படமும் பொருளீட்டவே எத்தனிக்கிறது என்றாலும் அதில் அறம் இருக்கிறது. பிரதி யாரை முன்வைத்து உருவாக்கப்பட்டதோ அவர்களுக்காகவும் இந்த பொருளீட்டலை பகிர்ந்தளிக்கிறது. ஜெய் பீம் பல வகைகளில் தமிழ் சினிமாவில் ஒரு முன்னத்தி ஏர்.

– அருண் மோ.

படச்சுருள்,  டிசம்பர் 2021

You might also like