வரலாறு ஆண்களுக்கு மட்டும் சொந்தமா?

நூல் அறிமுகம்:

நீல் மெக்கிரெகர் எழுதிய A History of the World in 100 Objects எனும் நூலின் தாக்கத்தில் எழுதப்பட்ட நூல் மருதனின் ‘தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள்’. 220 பக்க நூலில்  சுமார் 50 பொருள்களின் வாயிலாகப் பெண்களின் வரலாறுகள் எழுதப்பட்டுள்ளன.

நூலாசிரியர் மருதன் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துத் துறையில் இயங்கி வருகிறார். வரலாறு, அரசியல், வாழ்க்கை வரலாறு என ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பண்டைய இந்திய வரலாற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.

கூழாங்கல் என்ற தலைப்பில் நூலை எழுதியதன் நோக்கம் பற்றி நூலாசிரியர் மருதன் மிகத் தெளிவாக விவரித்துள்ளார். தாய் இணையதள வாசகர்களுக்காக அந்த முன்னுரை இங்கே…

“நீல் மெக்கிரெகர் ஒரு கலை வரலாற்றாசிரியர். பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் தலைமைப் பொறுப்பு வகித்தவர்.

பண்டைய கலைப்பொருள்கள், தொழில்நுட்பக் கருவிகள், ஆயுதங்கள் என்று தொடங்கி வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த 100 பொருள்களைத் தேர்ந்தெடுத்து அவற்றின் கதைகளைச் சொல்வதன்மூலம் உலகின் கதையை அவர் விவரிக்க முயன்றார்.

அழகிய படங்களோடு கூடிய கனமான, கெட்டி அட்டை பதிப்பு இது. எங்கிருந்தும் தொடங்கலாம், எங்கும் முடிக்கலாம்.

குங்குமம் தோழி இதழில் ஒரு தொடர் எழுதும் வாய்ப்பை தோழர் வள்ளிதாசன் அளித்தபோது, 100 பொருள்கள் மூலம் பெண்கள் வரலாற்றை எழுதினால் எப்படி இருக்கும் என்று தோன்றியது.

இப்படியொரு தலைப்பை எடுத்துக்கொண்டு ஒருவர் எழுதுகிறார் என்றால் அவர் அத்துறையில் ஆழங்கால் பட்டவராகத்தான் இருக்கவேண்டும் என்று நினைப்பீர்கள் அல்லவா?

நான் இதில் தலைகீழ். பெண் வரலாறு எனக்குத் தெரியும், அதை நான் கரைத்துக் குடித்துவிட்டேன் என்பதால் அல்ல; எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது என்பதாலும், அது எத்தனை பெரிய குறைபாடு என்பதை உணர்ந்திருந்ததாலும் இப்படியொரு தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன்.

கிரேக்கத் தொன்மத்தில் சிசிஃபஸ் என்றொருவர் வருவார். அவர் யார், அவர் செய்த குற்றமென்ன என்பதையெல்லாம்விட, கடவுள்கள் அவருக்கு அளித்த தண்டனையைத்தான் உலகம் இன்றும் நினைவில் வைத்திருக்கிறது.

ஒரு பெரிய பாறாங்கல்லைக் கீழிருந்து உருட்டி, உருட்டி மலையுச்சிக்குக் கொண்டுசென்று நிறுத்தவேண்டும் என்பதுதான் அந்தத் தண்டனை.

சிசிஃபஸ் எவ்வளவுதான் உயிரைக் கொடுத்துப் போராடினாலும் அவரால் கல்லை உச்சிக்குக் கொண்டுபோகவே முடியாது. நான்கு அங்குலம் தள்ளினால் சரசரவென்று நான்கடி அவரையும் சேர்த்து உருட்டிக்கொண்டு கீழே பாயும்.

அப்படித்தான் ஆகிவிட்டது எனக்கும். பெண் வரலாறு தொடர்பான நூறு பொருள்களைக் கண்டறிவது சுலபமல்ல என்பது முதல் சில அத்தியாயங்கள் எழுதும்போதே தெரிந்துவிட்டது.

இரண்டு நடவடிக்கைகளை உடனே எடுத்தேன். பாறாங்கல் கீழே விழட்டும் என்று நகர்ந்து கொண்டேன். கீழே குனிந்து எனக்கேற்ற எடையுடன் கூடிய ஒரு சிறிய கூழாங்கல்லைத் தேர்ந்தெடுத்து, இதுவும் கல்தான் என்று சொல்லிக்கொண்டு உச்சியை நோக்கி உருட்டத் தொடங்கினேன்.

தொட்டு உணரக்கூடியது மட்டுமல்ல, பொருள். அமைதி, வீரம், வரலாறு, போராட்டம், அரசியல் எல்லாமே பொருள்தான். பொருளுக்கான பொருளை இப்படி வசதியாக நீட்டித்துக் கொண்ட பிறகே கூழாங்கல் மேலே நகர ஆரம்பித்தது.

அப்படியும் பாதி மலைதான் ஏறினேன். வருத்தமில்லை. இதுவரை புலப்படாமலிருந்த பல காட்சிகளை, இதுவரை சிந்தித்திராத பலகோணங்களை இந்த மலைப்பயணம் எனக்கு வெளிப்படுத்திவிட்டது.

இத்திசையில் மேலும் செல்வேன். மேலும் விரிவாக வாசிப்பேன். அப்போதுதான் பெண் வரலாறு தெரியவரும் என்பதால் அல்ல; அப்போதுதான் வரலாறு முழுமையாகவும் சரியாகவும் புரியத் தொடங்கும் என்பதால்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நூல் குறித்த அறிமுகத்தில், “எல்லா விஷயங்களையும் போல வரலாறும் ஆண்களுக்கானதாகவே இருக்கிறது. அவனே அதன் உந்துசக்தி. ஆதி மனிதன் ஓர் ஆண். சிக்கிமுக்கிக் கல் கொண்டு நெருப்புப் பற்ற வைத்தவன் அவனே.

இலைகளையும் விலங்குத் தோல்களையும் கொண்டு ஆடைகள் உருவாக்கியவன் அவனே. பாய்ந்து ஓடக்கூடியவனாக, சண்டையிடும் ஆற்றல் கொண்டவனாக, பலமிக்கவனாக அவனே திகழ்ந்தான் என்பதால் அவனே முதல் வேட்டைக்காரனாகவும் அவதரித்தான்.

விலங்குகளைக் கொன்று இறைச்சியைச் சமைத்தவன் அவனே என்பதால் சமையல் கலையின் பிதாமகன் என்றும் அவனை அழைக்கமுடியும். கருவிகளை உருவாக்கும் ஆற்றலை மனிதகுலம் பெற்றது அவனால். மனிதகுலம் பரிணாம வளர்ச்சி பெற்றதற்கு அடிப்படை காரணம் ஆண்!

பள்ளிக்கூடங்களில் தொங்கவிடப்பட்ட வண்ண வண்ண சார்ட்டுகளைப் பார்வையிட்டார் ரோஸாலிண்ட் மைல்ஸ். வேட்டைச் சமூகம், நியோலிதிக் யுகம், வெங்கல யுகம், இரும்பு யுகம் என்று காலம் உருண்டோடிக்கொண்டிருந்தது.

பாடப் புத்தகங்களைப் பிரித்துப் பார்த்தார் மைல்ஸ். மனிதகுலத்தின் நாகரிக வரலாறு விவரிக்கப்பட்டிருந்தது.

வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்சியாளர்களாக, திட்டமிடுபவர்களாக, முடிவெடுப்பவர்களாக, விவாதிப்பவர்களாக, செயல்படுத்துபவர்களாக ஆண்களே இருந்தார்கள்.

அரசியல், அறிவியல், சட்டம், கணிதம், மதம் என்று அனைத்துத் துறைகளையும் உருவாக்கி, வளர்த்தெடுத்து, செழுமைப்படுத்தியவர்கள் அவர்கள்தாம். மைல்ஸ் யோசித்தார்.

பெண்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? வரலாற்றில் ஏன் அவர்கள் எந்தப் பங்களிப்பையும் நிகழ்த்தவில்லை? தன்னந்தனியாக ஓர் ஆண் இந்த உலகைப் படைத்திருக்கிறானா? தன்னந்தனியாக அனைத்து நன்மைகளையும் தீமைகளையும் தோற்றுவித்திருக்கிறானா?

தன்னந்தனியாக உலக உருண்டையை 6 சூனியக்காரிகள், தேவதைகள், பெண்கள் தன் முதுகில் கட்டி குகையில் இருந்து உருட்டி இங்கே, இந்த இடத்துக்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறானா? எனில், இது உண்மையாகவே மாபெரும் சாதனைதான்.

கண்கள் பனிக்க, உதடுகள் துடிக்க இரு கரம் சேர்த்துக் குவித்து அந்த மாபெரும் ஆணுக்கு ஒட்டுமொத்த மனிதகுலமும் நன்றிக்கடன் செலுத்தத்தான் வேண்டும் என்கிறார்.

தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள்:
மருதன்

வெளியீடு: ஹெர் ஸ்டோரிஸ், சென்னை.
தொடர்புக்கு: 75500 98666

விலை ரூ. 250

பா.மகிழ்மதி

You might also like