எண்பதுகளில் காக்கி சட்டை, விக்ரம், சட்டம், ஒரு கைதியின் டைரி; தொண்ணூறுகளில் வெற்றி விழா, குருதிப்புனல்; 2000களில் ஆளவந்தான், வேட்டையாடு விளையாடு; 2010க்குப் பிறகு விஸ்வரூபம், தூங்காவனம் போன்ற படங்களில் காவல் துறை, உளவுத் துறை, பாதுகாப்பு பிரிவு அதிகாரியாக நடித்துவிட்டார் கமல்ஹாசன்.
அந்த படங்களிலெல்லாம் கமல் செய்த ஆக்ஷன் சாகசங்களை மனதில் கொண்டு, அறுபது வயதில் அது போன்றதொரு அதிரடியை மீண்டும் நிகழ்த்தினால் எப்படியிருக்கும் என்ற எண்ணத்திற்கு லோகேஷ் கனகராஜ் தந்திருக்கும் திரை வடிவமே ‘விக்ரம்’.
அப்படியானால் 1986இல் வெளிவந்த ‘விக்ரம்’ படத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
விக்ரம் ‘கனெக்ஷன்’!
இரண்டு கண்டெய்னர்களில் இருந்த போதைப்பொருட்களின் மூலப்பொருட்கள் காணாமல் போகின்றன. அதேநேரத்தில், பிரபஞ்சன் (காளிதாஸ் ஜெயராம்) என்ற அண்டர்கவர் ஏஜெண்ட் கொல்லப்படுகிறார். முகமூடி அணிந்த நபர்கள் அவரைக் கொல்லும் வீடியோ காவல் துறை கையில் கிடைக்கிறது.
பிரபஞ்சனின் மரணம் அவரது மனைவியையும் (ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன்) குழந்தை விக்ரமையும், கூடவே அவரது வளர்ப்பு தந்தையான கர்ணனையும் (கமல்ஹாசன்) கடுமையாகப் பாதிக்கிறது.
அன்று முதல் எந்நேரமும் மது, போதைப்பொருள், விபச்சாரப் பெண்ணின் தொடர்பு என்றிருக்கிறார் கர்ணன்.
இந்த நிலையில் பிரபஞ்சனை போன்றே போலீஸ் அதிகாரி ஸ்டீபன் ராஜும் (ஹரீஷ் பேரடி) கர்ணனும் முகமூடி நபர்களால் கொல்லப்படுகின்றனர்.
இது பற்றி விசாரணை மேற்கொள்ள அமர் (பகத் பாசில்) தலைமையில் ஒரு குழுவை நியமிக்கிறார் போலீஸ் அதிகாரி ஜோஸ் (செம்பன் வினோத் ஜோஸ்).
காணாமல் போன கண்டெய்னர்கள் மற்றும் பிரபஞ்சனின் மரணம் பற்றி அமர் குழுவினர் விசாரிக்கையில், சென்னையில் போதைப்பொருள் கடத்தும் சந்தானத்தின் (விஜய் சேதுபதி) நெட்வொர்க் பற்றி தெரிய வருகிறது.
போலவே, அடுத்ததாக முகமூடி நபர்கள் கொல்லப்போகும் நபர் யார் என்பதும் தெரிகிறது.
அமர் குழுவினர் பரபரப்பாக களத்தில் இறங்க, அதே வேகத்தில் முகமூடி கும்பலும் சந்தானத்திற்கு உதவியவர்களைக் குறிவைத்து துரத்துகிறது. அப்போதுதான் கர்ணன் உண்மையில் யார் என்ற உண்மை தெரிய வருகிறது.
அது அமர் குழுவினர், போலீஸ் அதிகாரிகள் மட்டுமல்லாமல் சந்தானத்தின் ஆட்களையும் திகைக்க வைக்கிறது. அதன்பின் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை.
லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படமான ‘கைதி’ முடிந்த இடத்தில் இருந்து ‘விக்ரம்’ கதை தொடங்குகிறது.
அந்தப் படத்தில் வில்லன் கோஷ்டியிடம் இருந்து கைப்பற்றிய போதைப்பொருளை நரேனிடம் கார்த்தி ஒப்படைப்பாரே, அதன்பின் வில்லன் கோஷ்டியினர் அதனைக் கடத்துவதாகவும் அவர்கள் வசமிருந்து பிரபஞ்சன் லவட்டுவதாகவும் முதலிலேயே தகவல் சொல்லப்பட்டு விடுகிறது.
இப்படியொரு கதையில், 1986இல் வெளிவந்த ‘விக்ரம்’ பட பாத்திரத்திற்கு என்ன வேலை என்பது கமல்ஹாசனின் இருப்பில் இருந்து சொல்லாமலே புரிந்திருக்கும். அவரே கர்ணன் @ விக்ரமாக திரையில் தோன்றுகிறார். இதற்கு மேல் என்ன சொன்னாலும், அது ‘ஸ்பாய்லர்’ ஆகிவிடும்.
சமநிலையான பாத்திரப் படைப்பு!
முதல் பாதி முழுக்க பகத் பாசிலின் ஆர்ப்பாட்டம். காயத்ரியுடன் கொஞ்சல், எதிரிகளுடன் மோதல் என்று அவரைச் சுற்றியே கதை நகர்கிறது.
சூப்பர் டீலக்ஸ், வேலைக்காரன் படங்களில் பார்த்திருந்தாலும், இப்பாத்திரம் பரவலாக அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்துவிடும் என்பது உறுதி.
கமல், பகத் என்ற இருவருக்கும் எதிரே வில்லனாக விஜய் சேதுபதி. உண்மையைச் சொன்னால் ‘மாஸ்டர்’ படத்தைவிட இதில் மனிதர் கலக்கியிருக்கிறார்.
கொஞ்சமாய் பார்த்திபனை நினைவூட்டினாலும், வில்லன் என்பதையும் மீறி அவர் வரும் காட்சிகளுக்கு கைத்தட்டல்கள் நிறைகின்றன.
சூர்யா திரையில் தோன்றும் நேரம் மிகமிகக் குறைவென்றாலும், அவருக்கான ‘அப்ளாஸ்’கள் தனியே கிடைக்கின்றன. ஆனாலும், அது அடுத்த பாகத்திற்கான (?!) முன்னோட்டமாக அமைந்திருக்கிறது என்பதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை.
’கைதி’யில் இடம்பெற்ற ஹரீஷ் பேரடி, ஹரீஷ் உத்தமன், அர்ஜுன் தாஸ் இதிலும் ஒரு காட்சியில் தலைகாட்டியிருக்கின்றனர். அவர்களைப் போன்றே, நரேனுக்கும் இதில் சற்றே பெரிய கவுரவ வேடம்.
விஜய் சேதுபதியின் குடும்பம் பெரிதென்று சொல்லப்படுவதால் அவரது மனைவிகளாக வரும் மைனா நந்தினி, ஷிவானி, மகேஸ்வரிக்கு கைத்தட்டல் அள்ள வாய்ப்பில்லை.
ரமேஷ் திலக் உட்பட பலருக்கும் இதே நிலைமை என்றாலும், விக்னேஷ் சிவனின் கண்டுபிடிப்பான ஜாபர் சாதிக் மட்டும் அந்த பட்டியலில் இருந்து நழுவி தன் முத்திரையைப் பதிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.
செம்பன் வினோத் ஜோஸ், காளிதாஸுக்கும் நான்கைந்து காட்சிகளில் தலைகாட்டும் வாய்ப்பு. இருவருமே அதனை நேர்த்தியாகத் திரையில் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
குமரவேல், சந்தானபாரதி, டினா எனும் பாத்திரத்தில் நடித்த நடிகை உட்பட அனைத்து பாத்திரங்களுக்கும் தரப்பட்டிருக்கும் முக்கியத்துவமே சமநிலை வார்ப்பு அமைய வேண்டுமென்ற மெனக்கெடலை வெளிக்காட்டுகிறது. இது தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புக்கும் பொருந்துகிறது.
கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு ஒரு ஆக்ஷன் படம் பார்க்கிறோம் என்ற உணர்வை எந்த இடத்திலும் மழுங்கடிக்கவில்லை.
சாதாரண உரையாடல் என்றாலும், சுழன்றடிக்கும் ஆக்ஷன் என்றாலும், ஒரே மாதிரியான வண்ணங்களைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்த படத்தின் சண்டை வடிவமைப்புக்காகவே இன்னொரு முறை பார்க்கலாம் என்ற எண்ணத்தை உருவாக்கியிருக்கின்றனர் அன்பறிவ் சகோதரர்கள்.
பிலோமின் ராஜின் படத்தொகுப்பு கதை சொல்லலை சீராக்கியிருப்பதுடன், காட்சிகளின் தன்மைக்கு தகுந்தவாறு பிரேம்களை கோர்த்திருக்கிறது.
பொதுவாகவே ஆக்ஷன் படம் என்றால் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் அதிகம். அதற்கேற்றவாறு, ஆங்கிலப் படம் (?!) பார்க்கும் உணர்வைத் தருகிறது அனிருத்தின் பின்னணி இசை.
கதையோட்டத்திற்கு சம்பந்தமேயில்லாத ’பத்தல பத்தல’ பாடல் திரைக்கதையில் ‘பட்டி டிங்கரிங்’ பார்த்து தொடக்கத்தில் இடம்பெற்றிருக்கிறது.
விஜய் சேதுபதியின் ஆய்வகம், பகத் பாசிலின் அலுவலகம் உட்பட திரையில் வரும் களங்களை வடிவமைத்ததில் கவனம் ஈர்த்திருக்கிறது கலை இயக்குனர் சதீஷ்குமாரின் குழு.
பல்வேறு தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிப்புக் கலைஞர்கள் என்று மிகப்பெரிய கூட்டத்தை ஒன்றிணைத்ததுடன், அந்த உழைப்பைத் திரையில் தெரிய வைப்பது மாபெரும் கலை. அந்த வகையில் ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
ஒரு கமல் ரசிகனாக..
தான் ஒரு கமல் ரசிகன் என்பதைத் தனது படங்களின் டைட்டில் கார்டிலேயே வெளிப்படுத்தியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அப்படிப்பட்டவர், ஒரு அதிரடி நாயகனாக கமலைக் காட்டினால் எப்படியிருக்கும்?
அந்த கேள்விக்குத் திருப்தியான பதிலைத் தந்திருப்பதோடு ‘எப்பூடி’ என்று ரசிகர்களை ஆர்ப்பரிக்கச் செய்திருக்கிறார்.
முதல் பாதியில் பகத் விசாரணை மேற்கொள்ளும் காட்சிகள் மிக மெதுவாக நகர்ந்தாலும், அருள்தாஸின் வீட்டு திருமண நிகழ்வு சீக்வென்ஸில் அவர் காட்டியிருக்கும் மேதைமை ‘கமர்ஷியல் திரைக்கதை’க்கான நல்ல உதாரணம்.
‘என்ன கமல் முகத்தையே காணோமே’ என்ற எண்ணம் ஏற்படாமல் அப்பாத்திரம் பற்றியே எல்லோரும் பேசிக்கொள்வது போல திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பான உத்தி. இதனாலேயே, இரண்டாம் பாதியில் கமல் தோன்றும் ஆக்ஷன் காட்சிகளுக்கு தியேட்டரே ஆர்ப்பரிக்கிறது.
’போதைப் பொருட்கள் தீமை தருபவை’ என்று ‘மெசேஜ்’ சொன்னாலும் படம் முழுக்க அதைச் சுற்றியே நகர்வதுதான் கொஞ்சம் அலர்ஜியான விஷயம்.
அதனைச் சரிக்கட்ட கமல் ‘அட்வைஸ்’ தருவது போன்று வசனம் அமைக்கப்பட்டாலும், ரசிகர்கள் விஜய் சேதுபதி போதைப்பொருளை தின்னும் காட்சிகளுக்கு கைத்தட்டுவது வேதனையான அம்சம்.
அது போதாதென்று ‘சதக்.. சதக்..’ என்று கத்தியால் திரையிலேயே அரைகுறை அறுவை சிகிச்சையை மேற்கொள்வது கண்ணைக் கட்டுகிறது. கண்டிப்பாக, இப்படியொரு கதை, களப் பின்னணியைத் தாண்டி லோகேஷால் யோசிக்க முடியாது என்று முடிவு கட்டும் வாய்ப்பையும் ‘விக்ரம்’ தந்திருக்கிறது.
போலவே, ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்துகொண்டு பெரும் வன்முறையாட்டம் நிறைந்த ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டுமா என்ற கேள்வியையும் கமலை நோக்கி எழுப்ப வைத்திருக்கிறது.
‘சலங்கை ஒலி’, ‘சிப்பிக்குள் முத்து’, ‘மூன்றாம் பிறை’, ‘பதினாறு வயதினிலே’ உட்படப் பல படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை நகம் கடிக்க வைத்தாலும், கமல் நடித்த ரொமான்ஸ் மற்றும் ஆக்ஷன் படங்களைப் பார்த்துவிட்டு அவரைப் போலவே கண்ணாடியைப் பார்த்து மீசையைக் கீழுதட்டால் கடித்துக் கொண்டிருந்தவர்கள் அனேகம்.
அப்படிப்பட்ட ரசிகர்களுக்கும், அவர்கள் ஆராதித்த கமல்ஹாசனின் ஆக்ஷன் பிம்பத்திற்கும் மரியாதை செலுத்தியிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
மூன்று மணி நேரம் தியேட்டரில் உட்காரத் தயாராக இருக்கிறீர்கள் என்றால், தாராளமாக இப்படத்தைப் பார்க்கலாம்.
லோகேஷ் சொன்ன டீட்டெய்ல்ல அது புரியலையே இது புரியலையே என்பவர்கள் மீண்டுமொரு இப்படத்தைப் பார்க்கலாம். அந்த வகையில், 2022இன் ‘பிளாக்பஸ்டர்’ என்று விக்ரமைக் கொண்டாடலாம்!
- உதய். பா