மூத்த ஊடகவியலாளர் அருமை நண்பர் மணா அவர்கள் தொகுத்துள்ள “கலைஞர் என்னும் மனிதர்” என்ற நூல் சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் வெளியான செய்தியை முகநூலில் பார்த்தேன்.
இந்த நூல் எனக்கு வேண்டும். எப்படிப் பெறுவது என்று அவரிடம் முகநூல் வழியாகக் கேட்டேன். அவர் என்னுடைய புதிய முகவரியைக் கேட்டார். அனுப்பி வைத்தேன். சில நாட்களில் நூல் எனக்கு கிடைத்தது.
நண்பர் மணா 1980-ல் நான் மதுரைக்கு வந்த புதிதில் எனக்கு அறிமுகமானார். ஆனந்த விகடனிலிருந்து வெளியேற்றப்பட்டு மக்கள்குரல் மதுரைப் பதிப்பில் வேலைக்குச் சேர்ந்திருந்தேன்.
நண்பர் முருகேச பாண்டியனும், லட்சுமணனும் (மணா) எழுத்தாளர் வண்ணநிலவன் சொல்லி இலக்கியார்த்தமாக எனக்கு அறிமுகமானார்கள். அன்று முதல் நாங்கள் நண்பர்கள்.
மதுரையில் இருந்தவரை அவர் குடும்ப நண்பர். சொற்ப காலத்தில் மக்கள்குரல் மதுரைப் பதிப்பு மூடப்பட்டபின்பு நான் ஊடகத்துறையிலிருந்து வெளியேறிவிட்டேன். அது எனக்கு லட்சியம் இல்லை. அரசியலுக்குப் போனேன். அதுவும் எனது இலக்கு இல்லை.
தோன்றுவதை எழுதுவதில் எப்போதும் ஆர்வம் இருக்கிறது. நண்பர் மணாவுக்கு அன்று தொடங்கி இன்றளவும் எழுத்தும் ஊடகத்துறையும் இலக்காக இருக்கிறது. அதற்காக அவர் அற்பணிப்போடு அயறாது உழைக்கிறார்.
தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தும் அவரது தாகம் தணியவில்லை.அருமை நண்பர் திறனாய்வாளர் ந.முருகேச பாண்டியன் அவர்கள் இந்த நூலில் “மணா எப்போதும் கொதிநிலையில் இருப்பவர்” என்று குறிப்பிட்டிருப்பது மிகையில்லை.
“கலைஞர் என்னும் மனிதர்” என்ற இந்த நூலை மணா ஒரு சிறப்பியைப் போல் செதுக்கியிருக்கிறார். எல்லாவற்றையும் விட “கலைஞர்” என்று தான் அழைக்கப்படுவதையே கருணாநிதி அவர்கள் விரும்பியிருக்கிறார்.
தஞ்சையில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மற்றும் கலைஞர் கருணாநிதி எழுதி நடித்த தூக்குமேடை நாடகம் அரங்கேறுவதற்கு முதல்நாள் நடிகவேள் அவர்கள் “அறிஞர் கருணாநிதி மற்றும் எம்.ஆர்.ராதா நடிக்கும் தூக்குமேடை நாடகம்” என்று விளம்பரப்படுத்தியிருக்கிறார்.
இதைப் பார்த்த கருணாநிதி அதிர்ச்சியுற்று அறிஞர் என்ற அடைமொழியை உடனே அகற்றாவிட்டால் நான் நாடகத்தில் நடிக்கமாட்டேன் என்று கண்டிப்பாக மறுத்து விட்டார்.
வேறு வழியில்லாமல் “கலைஞர் கருணாநிதி” என்று மாற்றியிருக்கிறார் நடிகவேள். இந்தச் செய்தியைக் கலைஞர் 13-03-1989 முரசொலியில் தெரிவித்துள்ளார். கலைஞர் என்ற பட்டத்தை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். அது முதல் அவர் கலைஞர் கருணாநிதியாக அறியப்பட்டுவருகிறார்.
சமூகநீதிப் போராளியாக, சுயமரியாதை பகுத்தறிவாளனாக, திரைக்கதை, வசன கர்த்தாவாக, அரசியல்வாதியாக, எழுத்தாளனாக, ஊடகவியலாளராக, முதலமைச்சராக, சிறந்த நிர்வாகியாக, சீரிய குடும்பத் தலைவராக, முத்தமிழ் வித்தகராக கருணாநிதி என்கிற பன்முக ஆளுமையில் அவருக்கு எந்த ஆளுமை பொருந்தி வருகிறது என்றால் அது கலைஞர் என்ற ஆளுமைதான்.
கலைஞர் என்பது அவரது இயற்பெயர் போல் மக்கள் மனங்களில் பதிந்து விட்டிருக்கிறது. அதனால்தான் இந்த நூல் “கலைஞர் என்னும் மனிதர்” என்று பெயர் பெற்றிருப்பது சாலப் பொருத்தம்.
மணா தன்னுடைய ஊடக வாழ்வில் சந்தித்த மனிதர்கள் பெற்ற அனுபவங்கள் ஏராளம் இருக்கலாம். ஆனால் அவர் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் கலைஞராகத்தான் இருந்திருக்கிறார்.
அதனால்தான் அவரை நிழல் போல் தொடர்ந்து அவரது ஆளுமைத் திறன்கள் அனைத்தையும் வெளியே கொண்டுவர முயற்சித்திருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். முகமுகமாய்க் கலைஞரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார்.
ஜெயலலிதாவால் கலைஞர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டபோது, முரசொலிமாறன், ஸ்டாலின் போன்றவர்கள் காவல் துறையினால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்ட அந்த தருணத்தில் எல்லாம் தகவல் அறிந்து நேரில் சென்று சாட்சியாகவும் உதவியாகவும் ஆறுதலாகவும் இருந்துள்ளார்.
வெளியிடக் கூடாத பல செய்திகளை ஒரு ஆப்த நண்பனைப் போல மணாவிடம் கலைஞர் பகிர்ந்துள்ளார். அது போலவே அவரது மரண தருணத்திலும் மணா தன் உள்ளார்ந்த சஞ்சலத்தைப் பதிவு செய்துள்ளார். கலைஞரை அவர் மறைந்த பின்பும் அவரது எதிராளிகள் வச்சு செய்ததையும் அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
இதுவெல்லாம் சாமான்யமாக ஏற்படக்கூடியது அல்ல. ஒருவரின் தனித்துவமான ஆளுமையின் மீது தோன்றுகின்ற நன்மதிப்பின் விளைவுகளே.
தமிழ்நாட்டின் அரசியல், சமூகப் பண்பாட்டுச் சூழலில் கலைஞர் கருணாநிதியின் மூத்த தலைமுறையினர் (பாரதிதாசன், தந்தை பெரியார், அண்ணா) சமகாலத்திலும் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்களும் அவரது ஆளுமைத் திறனை வியந்து பாராட்டியிருப்பதைப் போலவே மணாவும் அவரை மேலும் விதந்தோதியிருக்கிறார் என்றால் அது சரியே.
கலைஞர் கருணாநிதி கொள்கைப் பிடிப்பு கொண்டவரா? என்ன கொள்கை? அல்லது சந்தர்ப்பவாத அரசியல்வாதியா? ஜனநாயகவாதியா? கோழையா? வீரனா? திராவிடம், தமிழ் இனம், தமிழ் மொழி, சுயமரியாதை, சனாதன எதிர்ப்பு போன்றவற்றில் கலைஞர் கரைகண்டவரா?
எல்லாவற்றிலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு மற்றவர்களின் வளர்ச்சியைத் திட்டமிட்டுத் தடுத்தாரா? பகுத்தறிவு பேசும் மறைமுக ஆன்மீகவாதியா? வாரிசு அரசியலைத் திணிப்பவரா? அரசியல் நாகரிகம் தெரிந்தவரா? கம்யூனிசம் பற்றி அவர் என்ன கருதுகிறார்?
ஜெயலலிதாவுக்கு கருணாநிதி மேல் ஏன் அவ்வளவு கோபம். ஒழுக்கமில்லாதவரா? அவர் அய்ந்து முறை தமிழக முதல்வராக இருந்து சாதித்தது என்ன?
1967-க்குப் பின்பு இன்றுவரை திராவிட அரசியலை எதிர்த்த எந்த அரசியலும் தமிழ் மண்ணில் வேகவில்லையே ஏன்? கருணாநிதியின் நிறைவேறாத ஆசை என்ன? போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு இந்த நூலுக்குள் விடை இருக்கிறது.
ஒரு பகுத்தறிவுவாதியின் ஆன்மீக அணுகுமுறை.
கருணாநிதி பகுத்தறிவுவாதி. நாத்திகர். இந்துக்களுக்கு எதிரானவர். இந்து அறநிலையத் துறையின் மூலம் கோவில் சொத்தைக் கொள்ளையடிக்கிறார்கள். கருணாநிதி வீட்டுப் பெண்கள் கோவிலுக்குப் போய் பூஜை புனஸ்காரங்கள் செய்கிறார்கள்.
“ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்றால் அந்த தேவன் யார்? பழுத்த ஆத்திகர் ஶ்ரீராமானுஜர் பற்றி பழுத்த நாத்திகர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதி தொலைக்காட்சி தொடர் வெளியிடுவது இந்துக்களின் வாக்கு வங்கியைக் குறிவைத்து தானே? இது போன்ற இந்துத்வாக்களின் விமர்சனம்.
பாஜகவுடன் கூட்டணி கட்டி ஆன்மீக அடிவருடி ஆகிவிட்டார் கருணாநிதி. இதுதான் திராவிட மாடலா?
இதுபோன்ற சாதிய ஒடுக்குமுறைகள், ஆணவக் கொலைகள், கொட்டடிக் கொலைகள் போன்றவற்றை முன்வைத்து அதிமுக சார்ந்த கட்சிகள் தீவிர பெரியாரிய கம்யூனிஸ்ட் இயக்கங்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். வாரிசு அரசியல் பற்றியும் குறை சொல்லப்படுகிறது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக அறுதி வெற்றி பெற்று ஆட்சியில் இருக்கிற சூழலில், பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் 2026-ல் அமையப் போவது பாஜக ஆட்சிதான். இது பெரியார் பூமி அல்ல. ஆழ்வார்களின் ஆன்மீக பூமி. இதை நாங்கள் மீட்டே தீருவோம் என்று கொக்கரிக்கின்றனர்.
திமுக ஆட்சியின் மீது மேற்கண்ட தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றனர்.
பாஜகவைக் கண்டு அஞ்சி அவர்களோடு கூட்டணி வைத்து ஆட்சியைத் தக்கவைக்க திமுக முயற்சிப்பதாகப் பரப்புகின்றனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி வைக்கப் பலரும் தயங்கிய சூழலில் கருணாநிதி கூட்டணி வைத்தார். அதுபோலவே நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணி வைத்து வாஜ்பாய் அரசில் அங்கம் வகித்தது திமுக.
இதுபற்றி “உடம்புதான் என்னுடன் ஒத்துழைக்க வேண்டும்” என்ற மணாவின் நேர்காணலில் கலைஞர் பதில் சொல்கிறார்.
“யாருடன் (காங்., பாஜக) கூட்டணி வைத்தாலும் திமுக கொள்கையில் தெளிவாகவும் தனித்தன்மையுடனும் திமுக இருக்கும் என்பதும் அதற்கு மாறாக எதுவும் நடந்தால் கொள்கைக்காக எந்த இழப்பையும் எதிர்கொள்ளும் என்பதும் கடந்த கால வரலாறு. சமூக ஒற்றுமையும் மத நல்லிணக்கமும் திமுகவின் லட்சியங்கள்” என்று பதிலளித்துள்ளார்.
கூட்டணி குறித்து திமுகவின் நிலைப்பாடு இதுதான். யாரோடு கூட்டணி என்பது நடைமுறை சார்ந்த பிரச்னை.
திராவிடக் கருத்தியலில் சமரசம் இல்லை என்பது தான். 20 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவின் நிலையும் இன்று அதன் நிலையையும் எண்ணிப் பார்த்தால் வேறுபாடு தெரியும்.
அது போலவே காங்கிரசின் நிலையும். மத்தியில் வேறு மாற்றே இல்லை. புதிய மாற்றுக்கான அடிப்படைகூட திராவிடக் கருத்தியல், மாடல் சார்ந்ததாகவே தென்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
ஒன்றே குலம் சரி, ஒருவனே தேவன் என்றால் அந்த தேவன் யார்? என்று கல்கி நேர்காணலில் மூத்த பத்திரிகையாளர் பிரியன் கேட்கிறார்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது திருமூலர் வாக்கு. தேவன் என்பது இயற்கை என்று பதிலளிக்கிறார். இயற்கை என்பது ஒரு பேராற்றல் என்பதை எவராலும் மறுக்கமுடியாது என்று விளக்குகிறார்.
அனைத்து உயிர்களும் ஒன்றே; இயற்கை தோற்றுவித்தது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சிந்தித்தவன் தமிழன்.
“மதத்தில் புரட்சி செய்த மகான் ராமானுஜர்”
மதவெறி தலைதூக்கி வரும் இன்றைய சூழ்நிலையில், அனைத்து உயிர்களும் இறைவனால் படைக்கப்பட்டவையே என்றால் அதிலே ஏற்றத்தாழ்வு எவ்வாறு இருக்க முடியும் என்று கேட்டவர் ராமானுஜர். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த திருக்கச்சி நம்பியை குருவாக ஏற்றுக் கொண்டவர்.
தீண்டாதார் உட்பட பலரைத் தனது சீடராக ஏற்றுக்கொண்டவர். மோட்சத்திற்கு வழிகாட்டும் வைஷ்ணவ மூல மந்திரங்களைக் கற்க இவர் திருக்கோட்டியூர் நம்பியை அணுகிய போது அவர் மறுத்துவிட்டார்.
இறுதியில் இந்த மந்திரத்தை யாருக்கும் கற்றுக் கொடுக்கக் கூடாது என்ற உறுதிமொழியைப் பெற்றுக் கொண்டு அவருக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது.
மூலமந்திரத்தைக் கற்றுக் கொண்ட ராமானுஜர் செளமிய நாராயணன் கோவில் கோபுரத்தில் ஏறி அந்த மந்திரத்தை ஊரறிய உச்சரித்தார்.
வாக்குறுதியை மீறியதாக குற்றஞ் சாட்டியவர்களுக்கு அவர் சொன்ன பதில்: நான் மட்டும் மந்திரத்தைச் சொல்லி மோட்சத்துக்குப் போவதைவிட இதைச் சொல்லி எல்லா மக்களும் மோட்சம் போகட்டும் நான் நரகத்துக்குப் போகிறேன் என்றாராம்.
அப்படிப்பட்ட ஒரு மகானை இன்றைய தலைமுறை தெரிந்து கொண்டு மத நல்லிணக்கம் கற்கட்டும் என்ற வகையில் இந்த தொடர் ஒளிபரப்பப்படுகிறது.
இதில் ஓட்டரசியல் ஆதாயம் என்று சொல்வது கல்கியின் குசும்பு.
கடவுள் நம்பிக்கையைப் பொறுத்த வரை எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் என்னுடைய கருத்துக்களை நான் யார் மீதும் திணிப்பது இல்லை. அது, அவரவர் நம்பிக்கை சார்ந்தது. இதைப் பல இடங்களில் அவர் பதிவு செய்துள்ளார்.
திருவள்ளுவர், திருமூலர், வள்ளலார், அய்யங்காளி, நாராயண குரு போன்ற பல பார்ப்பன எதிரப்பு மரபாளர்களை எடுத்துக் காட்டியுள்ளார்.
வாரீசு அரசியல் பற்றி
நீதிக்கட்சி தொடங்கி திராவிட இயக்கங்களில் மக்கள் குடும்பமாக இணைவது செயல்படுவது என்பது தொடக்க முதல் இருந்து வருவதுதான். பிற கட்சிகள் இயக்கங்களிலும் இந்த நிலை உள்ளது.
திட்டமிட்டு வாரிசுகளைத் திணிப்பது ஏற்க முடியாது. அதே வேளையில் அவர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்று தடுக்க முடியாது. ஸ்டாலினை அரசியலுக்கு கொண்டு வந்தது இந்திரா காந்தி தான்.
இதுபோல் இன்னும் பல அரிய செய்திகளையும் கருத்துக்களையும் இந்த நூலின் நெடுகிலும் காணலாம்.
நான் அறிந்தவரை 1980 முதல் மணா அவர்கள் ஒரு பத்திரிகையாளராக செயல்படத் தொடங்கி விட்டார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இந்தத் துறையில் தொடர்ந்து இயங்கி வருகிறார்.
பலதரப்பட்ட நிர்வாகத்தின் கீழும் சுயேச்சையாகவும் அவர் தொடர்ந்து இயங்கி வருகிறார். அவரது சொந்த நிலம் மதுரை. உயிரோட்டமான தொடர்பு உண்டு.
கலைஞரை சந்திப்பதற்கு முன்பே அவர் திருக்குவளை, திருவாரூர் 2 முறை போய் வந்திருக்கிறார்.
அந்த அனுபவங்களைத் தொகுத்து கட்டுரையாகவும் நூலாகவும் ஆக்கிய பின்பே அவர் முதலமைச்சர் கலைஞரை சந்தித்திருக்கிறார். அது எந்த ஆண்டு என்று குறிப்பிடப்படவில்லை.
அது முதற்கொண்டு அவரது மறைவுவரை அவரை நிழல் போல் தொடர்ந்து திரட்டிய திரட்சியே கலைஞர் என்னும் மனிதர். புகழ் பெற்ற ஆளுமைகள் பலரது வாழ்வு பற்றியும் உலகம் முழுவதும் இதுபோன்ற நூல்கள் எழுதப்பட்டுள்ளன.
மாமேதை காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், மாவோ போன்ற எண்ணற்ற சாதனையாளர்கள் பற்றி அவர்களால் ஈர்க்கப்பட்ட பலரும் எழுதியுள்ளனர். அந்த வரிசையில் இந்த நூலும் சேரத் தகுதி படைத்தது.
ஏனெனில் கலைஞர் என்ற ஓய்வறியா உழைப்பாளியுடன் மணா என்றொரு உழைப்பாளியும் இந்த நூலில் இணைந்திருக்கிறார் என்பதுவும் ஒரு சிறப்பு.
மணாவின் விரிவான பல நேர்காணல்களுடன் அவருடைய பல கட்டுரைகளும் (பத்திரிகைகளில் வெளிவந்தவை) இதில் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.
கலைஞருடனான நடிகர் சிவகுமாரின் நீண்ட பேட்டி; முரசொலி மாறன், பேராசிரியர் அன்பழகன், துரைமுருகன் ஆகியோரின் பேட்டிகளும் இடம் பெற்றுள்ளன.
துக்ளக் ஆசிரியர் சோ, நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன், பத்திரிகையாளர்கள் சோலை, சுதாங்கன், ஞானி, மாபொசி, சுப.வீ, எழுத்தாளர் பவா செல்லதுரை இன்னும் பல பிரபலங்களின் கட்டுரைகள் சிறப்பு செய்கின்றன.
கலைஞரின் திரைத்துரை அனுபவங்கள்; போராட்ட வரலாறுகள், பாடல்கள், கவிதைகள் என்று நிறைந்துள்ளன.
பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, வழக்கறிஞர்கள் போன்றோரின் அனுபவங்கள் அனைத்தும் கலைஞர் என்னும் மனிதனை அலங்கரிக்கின்றன.
நீதிக்கட்சி சமூகநீதிக்கான போராட்டத்தைத் தொடங்கி நூற்றாண்டு நெருங்குகிறது. திராவிடர் கழகம் தொடங்கிய பெரியார் பகுத்தறிவு,
சுயமரிதை, பார்ப்பனிய எதிர்ப்பு, தாழ்த்தப்பட்டவர் முன்னேற்றம், சாதி ஒழிப்பு, சமூக நீதி, இட ஒதுக்கீடு, பெண் விடுதலைக்கான விழுமியங்களோடு மக்களைத் திரட்டிப் போராடினார்.
1949-ல் தொடங்கப்பட்ட திமுக சமூக நீதிக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்தும் நோக்குடன் தேர்தலில் போட்டியிட்டு அரசியல் அதிகாரத்துக்காக நின்றது. 18 ஆண்டுகளில் 1967-ல் அறிஞர் அண்ணா தலைமையில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
1969-ல் அண்ணா மறைவுக்குப் பின் ஆட்சிக்கும் கட்சிக்கும் தலைமையேற்றார் கலைஞர் கருணாநிதி. 1967 முதல் 2022 வரை 54 ஆண்டுகள் தமிழ்நாட்டை தேசிய கட்சிகள் ஆளமுடியவில்லை.
திராவிடக் கருத்தியல், தமிழ் இனம், மொழி, பண்பாடு இவற்றை இந்த மண்ணில் முன்னோடியாக இருந்து கட்டிக் காத்தவர் கலைஞர் கருணாநிதி என்றால் அது பொய்யில்லை புகழ்ச்சியும் இல்லை.
5000 ஆண்டுகள் தொன்மையான தமிழ்ச் சமூகத்தின் தனிச் சிறப்புகளையும் அனைத்துப் பெருமைகளையும் கற்றுணர்ந்து அவற்றை எளிய நடையிலே பாமரனுக்கும் பல படித்தாகப் பல்துறை சார்ந்து கொண்டு சேர்க்க அவர் அயராது பாடுபட்டார்.
எழுத்தாளர் பவா செல்லதுரை குறிப்பிட்டபடி கலைஞர் தன் வாழ்நாளில் எழுதிக் குவித்தது சுமார் 2 லட்சம் பக்கங்கள்.
12 வயதிலே மாணவர் சீர்திருத்த சங்கம் அமைத்து சாதி ஒடுக்குமுறையை எதிர்க்கத் தொடங்கிய அவர் இன்னல்கள் பல தாண்டி, அவரே சொன்னது போல் “தென்றலைத் தீண்டியதில்லை தீயைத் தாண்டியிருக்கிறேன்” என்பதற்கொப்ப, ஒரு கண்ணிழந்து, நடையழிந்து சக்கர நாற்காலியில் அமர்ந்து, பேச்சிழந்து பெருந்துன்புற்று 94 வயதில் மூச்சடங்கும் வரை உழைத்தார்.
ஒரு நேர்காணலிலே “உங்களுக்குப் பிடிக்காதது எது?” என்று கேட்ட போது அவர் சொன்னது “எனக்குப் பிடிக்காதது ஓய்வு.”
கருணாநிதியை அரசியலில் கடுமையாக எதிர்த்த சோ சொன்னது – “அசராத உழைப்பு, அசுர சாதனை.”
எம்.ஜி.ஆர். சொன்னது – “கலைஞர் எனக்குத் தலைவர்.” (சோலை கட்டுரை).
அவருடைய பரம எதிரியாக இருந்தால் கூட அவரது கடின உழைப்பை ஏற்றுக் கொள்வான். அவரது சிந்தனைக் களத்தின் விரிவே அவரது உழைப்புக்கான களமாக இருந்து நீண்ட வாழ்வுக்கு உரமாக அமைந்துள்ளது.
இந்த மண்ணின் மக்களின் வாழ்நிலை யதார்த்தத்தைக் கணித்து அதற்கான அரசிலை முன்வைத்துப் பயணிப்பது திராவிடக் கருத்தியலும் ஆட்சிமுறையும் என்பதை “கலைஞர் என்னும் மனிதர்” நூல் எடுத்துரைக்கிறது.
அனைவரும் படித்துப் பாதுகாக்க வேண்டிய நூல்.
கலைஞர் குட்டிக் காலம் தொடங்கி இறுதி யாத்திரை வரை அரிய புகைப்படங்கள் தரமான தாளில் அச்சிடப்பட்டு பரிதி பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலின் விலை. ரூ.500/
– லயனல் அந்தோணி ராஜ்.