கற்பித்தல் ஒன்றும் எந்திரச் செயலல்ல!

சமகால கல்விச் சிந்தனைகள்: 2  / உமா மகேஸ்வரி

ஒரு செடி வளர்ந்து பூ பூத்து காய்கள் பழங்களைத் தரவேண்டுமானால், அதற்குரிய காலமும் சூழலும் மிக முக்கியம்.

காலத்தைக் கணக்கில் கொள்ளாமல் உடனே வளர்ந்து பூ பூத்துவிட வேண்டும் என்று கருதுவதும், சூழலையே தராமல் விளைவுகள் உருவாகிவிட வேண்டும் என்று  எதிர்பார்ப்பதும் அறிவார்ந்த செயலாகிவிடாது.

அதே போலத்தான் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஏதுவான சூழல்களை உருவாக்குவதும் சரியான காலத்தைத் தருவதும் மிக இன்றியமையாதது.

இங்கு சூழல் என்பது வகுப்பறை வசதிகள், சரியான எண்ணிக்கையுள்ள ஆசிரியர், கற்பித்தல் சாதனங்கள்.

பிறகு வகுப்பறைச் செயல்பாடுகளைத், திட்டமிடுதல். கற்பித்தல் உபகரணங்கள் தயாரித்தல் மாணவர்களுடன் உரையாடல், கற்பித்தல் முறைகள், அணுகுமுறைகள்  இப்படி ஏராளமான தொடர் செயல்பாடுகளை உள்ளடக்கியதுதான் கற்பித்தல் பணி.

ஆனால் இன்றைய நடைமுறையில் தமிழகத்தின் பள்ளிக்கல்வியை எடுத்துக் கொண்டால் ஏராளமான முரண்பாடான சிக்கல்களை நாம் சந்தித்து வருகிறோம்.

அடிப்படையில் தேவை என்று நாம் சொல்லக்கூடிய வகுப்பறை வசதிகளும்,  ஆசிரியர்கள் எண்ணிக்கையுமே இங்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.

அவற்றைத் தாண்டி மேற்சொன்ன எல்லா விஷயங்களும் செய்வதற்கான காலமும் சூழலும் இங்கு ஆசிரியர்களுக்கு சுதந்திரமாக தரப்படுவதில்லை என்பதுதான் கள எதார்த்தம்.

கடந்த கல்வியாண்டில் கொரோனா காலம் என்று தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை விட்டிருந்தாலும் இணையவழிக் கற்றல் – கற்பித்தல், கல்வித் தொலைக்காட்சி, இன்னபிற வழிகள், மாணவர்களை நேரடியாக சந்தித்தது என பல்வேறு செயல்பாடுகளை ஆசிரியர்கள் தொடர்ந்து செய்து வந்தது எல்லோரும் அறிந்ததே.

ஆனால், உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைப் பொறுத்தவரை ஜூன் இரண்டாம் வாரத்தில் இருந்து ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்தனர். எல்லா  சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கின.

அதாவது வாரம் ஆறு நாட்கள் முழுவதுமாக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தது கண்கூடு.

மாணவர்கள்தான் பள்ளிக்கு வரவில்லையே தவிர, ஆசிரியர்கள் வந்ததும் கற்றல் கற்பித்தல் அல்லாத வகுப்பறையில் செய்யாத பல அலுவலகப் பணிகளை மாணவர் சார்ந்து தொடர்ந்து செய்ததும் கோப்புகளை அரசுக்கு,

அடுத்த  நிலையில் உள்ள அலுவலர்கள் கேட்பதற்காக தயாரித்து அனுப்புவதும் என்று தொடர்ந்து வேறுவிதமான அழுத்தங்களும் அவர்களுக்கு இருந்தன.

திடீர் திடீரென பள்ளிக்கல்வித் துறையிலிருந்து மாவட்ட கல்வி அலுவலகங்களில் இருந்து அறிவிப்புகள் வரும்.

தொடர்ந்து 6, 7, 8 வகுப்பு குழந்தைகளுக்கு அசைன்மென்ட் கொடுப்பது, தேர்வு வைப்பது, அவர்களை வீட்டிலிருந்து பள்ளிக்கு வரவழைத்து அதை வாங்குவது இப்படியான செயல்பாடுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன.

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் சமயத்தில், எட்டாம் வகுப்பு வரை மேற்சொன்ன இப்படியான செயல்கள் நடந்தன.

9, 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது 11, 12 ஆம் வகுப்பு மேல்நிலை வகுப்புகளுக்கான முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், பள்ளிக்கு வருவதோடு மட்டும் பணி இருந்தது.

ஆனால், மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆறு முதல் எட்டு வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு இணையவழி கற்பித்தலில் படிக்கும் பகுதிகளை வீட்டு வேலைகளாகத் தருவதும், அவர்களைப் பள்ளிக்கு வரவழைத்து ஒப்படைப்புகளை வாங்குவதும்,

இப்படி ஒருபுறமும் 9, 10ம் வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் வகுப்புகளை வைத்ததனால் தொடர்ந்து அவர்களை இங்கும் கவனித்து இணைய வழியிலும் அவர்களுக்கு பணி கொடுத்து என்று மிகச் சிக்கலான பணியைத்தான் மேற்கொண்டனர்.

இது எவருமே மறுக்கமுடியாத ஒன்று. (வேலை செய்யாதவருக்கு இது பொருந்தாது)

சரி, அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டன. பத்தாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வுகள் நடப்பது குறித்தும் மிகப்பெரிய ஒரு சிக்கலும் இருந்தது.

ஏனெனில் செப்டம்பர் மாதம் அவர்கள் பள்ளிக்கு வந்த பிறகு, செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்கள் வரை ஏறக்குறைய 80 நாட்கள் பாடநூலைத் தவிர சிறப்பு உளவியல் பயிற்சியும், அரசு கொடுத்த மினிமம் லெவல் மெட்டீரியல் தான் நடத்தச்சொல்லி வழி காட்டப்பட்டது.

அதிலும் பல சிக்கல்கள், சில பள்ளிகளில் பாடம் நடத்தச் சொல்லியும் சில பள்ளிகளில் அவர்கள் கொடுத்த அந்த மெட்டீரியலை நடத்தச் சொல்லியும் குழப்பங்கள் நிலவின.

ஒரு கட்டத்தில் திடீரென்று பாடநூலின் பாடங்களில் திருப்புதல் தேர்வு வைக்கின்றனர்.  முதல் திருப்புதல் தேர்வு முடிந்து வேறு பள்ளிகளுக்கு விடைத்தாள்கள் அனுப்பப்பட்டு திருத்தம் செய்யப்பட்டன.

அடுத்தது பள்ளிக்கல்வித் துறை அமைச்சரிடம் ஊடகங்கள் கேட்ட கேள்வியின் அடிப்படையில் நடத்தாத பாடத்திலிருந்து, பொதுத் தேர்வுக்கு எந்த கேள்விகளும் கேட்கப்பட மாட்டாது என்றவுடன்,

மீண்டும் அவசர அவசரமாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முழுமையாக எல்லாப் பாடங்களும் நடத்தி அதில் தேர்வுகள் வைக்கப்பட்டன. குழந்தைகள் தரப்பிலும் மிகுந்த மனஅழுத்தமான சூழல் நிலவின்

அது முடிந்தவுடன் பொதுத்தேர்வுகள் ஆரம்பமாகின்றன. 6 முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு தொடர்ந்து தேர்வுகள் நடத்தப்பட்டு அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

ஆனால், பத்தாம் வகுப்புக்கு தேர்வுப் பணிக்காக பட்டதாரி ஆசிரியர்கள் செல்வதும், மீண்டும் பள்ளிக்கு வருவதும் தேர்வுப் பணிக்காகவும் அது தவிர அன்றாடம் மதிய வேளைகளில் தொடர்ந்து வருவதும்,

தேர்வுப் பணிகளில் வேறு பள்ளிகளில் இருந்தாலும் முடித்துவிட்டு மீண்டும் அவர்கள் பணியாற்றும் பள்ளிக்குத் திரும்பிவந்து தேர்ச்சிக்கான பணிகளை செய்வதற்கு துரிதப்படுத்தப்படுவதும் நடந்தது.

இடையிடையே மாவட்ட கல்வி அலுவலரிடமிருந்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதினொன்றாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு  சொல்லுவதை எழுதுதல் பணியும் வந்தது.

மே 31-ஆம் தேதி வரை தேர்வுப் பணியில் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் இருக்கின்றனர். தொடர்ந்து அடுத்த நாளிலிருந்தே 1 ஆம் தேதியிலிருந்து 10 ஆம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு அனுப்பப்படுகின்றனர்.

தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை இருக்கலாம். அது முடிந்தவுடன் பள்ளி 13 ஆம் தேதியிலிருந்து திறக்கப் போவதாக அறிவிப்பு வருகிறது.

இங்கு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளியில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மே 20ஆம் தேதி முதல் ஜூன் 12 வரை ஏறக்குறைய 20 நாட்களுக்கும் அதிகமாக விடுமுறை கிடைக்கிறது.

மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு பள்ளி திறப்பு ஜூன் 20 க்கு மேல், அவர்களுக்கும் ஒரு அளவுக்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்களாவது விடுமுறை கிடைக்கிறது.

ஆனால் இரண்டுக்கும் இடைப்பட்ட இடைநிலைக் கல்வியில் பணியாற்றும்  மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றக்கூடிய பட்டதாரி ஆசிரியர்கள், அவர்களுக்கு ஓய்வு என்பதே கிடையாது.

வரும் கல்வியாண்டு ஜூன் 13 முதல் தொடங்கப்பட இருப்பதனால் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து வேலை செய்வதுபோல இருக்கும். ஆசிரியர்கள் மன அழுத்தத்திற்கு நிச்சயமாக ஆளாகிறார்கள்.

அவருடைய கற்பித்தல் செயல்பாடுகள் இனிவரும் காலங்களில் எப்படி இருக்கப் போகிறது என்பது மிகவும் வேதனையாக இருக்கிறது.

ஏனென்றால் ஆசிரியர் பணி மிகவும் பொறுப்புள்ள பணி உயிருள்ள குழந்தைகளுடன்தான் பணியாற்றுகின்றனர்.

மற்ற அலுவலர்களைபோல கல்வித் துறையின் இதர இடங்களில் பணியாற்றக்கூடிய அதிகாரிகள் கல்வி அலுவலர்கள் அங்கு பணியாற்றக்கூடிய கணக்கு வேலை செய்பவர்கள் இவர்களைப்போல கோப்புகளுடன் வேலை செய்யவில்லை.

கோப்புகள் உடன் வேலை செய்யும்போது அதை தூக்கிப் போட்டுவிட்டு அடுத்த நாள் கூட பார்க்கலாம் அல்லது அது எந்த பாதிப்பையும் அவர்களுக்கு ஏற்படுத்தாது.

ஆனால், ஆசிரியர்களோ உயிருள்ள குழந்தைகளுடன் உறவை மேம்படுத்தி அணுகுமுறையை உள்வாங்கி நெகிழ்வுத் தன்மையுடன் பள்ளிகளில் கற்றல் கற்பித்தலில் ஈடுபடும் வேண்டிய தேவை இருக்கின்றது என்பதனை கருத்தில்கொள்ள வேண்டும். எனில் ஆசிரியர்களுக்கும் ஓய்வு தேவை.

இதை அரசு சிந்திக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய கோரிக்கை. கற்பித்தல் பணி பொருட்களை உற்பத்தி பண்ணும் பணியும் அல்ல, ஆசிரியர்கள் பொருட்களை உருவாக்குபவரும் அல்ல.

நாம் இந்த இடத்தில் நினைவுகூர வேண்டியது, இது வெறுமனே பாடப் பொருட்களை மாணவர்களின் மனதில் மண்டையில் திணிக்கக்கூடிய ஒரு பணி அல்ல என்பதைத்தான்.

இது குறித்து உரையாடல்கள் வரவேண்டும். ஆசிரியர்களிடம் அதிகாரிகள் பேச வேண்டும் அல்லது அதிகார மட்டத்தில் இருப்பவர்கள் உணரவேண்டும்.

இப்படியே ஒரு இறுக்கமான சூழலில் சென்றுகொண்டிருந்தால் கல்வியின் தரம் எத்தகையதாக இருக்கும்? ஏற்கனவே எங்கு பார்த்தாலும் ஆசிரியர் பற்றாக்குறைகள். ஆசிரியர்களுக்கு வேறு வேறு பணிகளிலும் கல்விப்பணி அல்லாத வேலைகள் தரும் போக்குகளும் இருக்கின்றன.

இப்படியே பணிகளை அழுத்தி அழுத்தி எடுத்துச் சென்றால் கல்வியின் தரம் நிச்சயமாக மேம்படாது.

இதுதான் எதார்த்தம் இதை ஒப்புக்கொள்ளாமல் முரண்டு பிடித்தால் அல்லது நாங்கள் செய்வதுதான் சரி என்றால், இல்லை ஆசிரியர்கள் விடுமுறை கேட்கிறார்கள் என்று கூறுவதெல்லாம் சரி அல்ல.

இதை கல்வித் துறையில் உள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்.

பொது மக்கள் பார்வையில் ஆசிரியர்களுக்கு ஏராளமான விடுமுறை அளிக்கப்படுகிறது என்ற கருத்து நிலவிவருவதும் அதை ஏற்கும்விதமாக கல்வித்துறை இத்தகைய போக்கில் பயணிப்பதும் ஆரோக்கியமானது அல்ல.

ஆகவேதான் கூறுகிறோம் கற்பித்தல் ஒன்றும் எந்திரச் செயலல்ல, கற்பிப்பவரும் எந்திரமல்ல.

– தொடரும்…

You might also like