– வே. வசந்தி தேவி
பள்ளி மாணவர் வன்முறையில் ஈடுபடுவது இன்று பேசு பொருளாகி இருக்கிறது. மாணவர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அனைவரும் அரசுப் பள்ளி மாணவர்தாம்.
அனைத்துத் தரப்பிலிருந்தும் அறிவுரைகள் அவர்களை நோக்கிப் பாய்ந்த வண்ணம் இருக்கின்றன. இவர்கள் அனைவரும் 18 வயதிற்கு உற்பட்டவர். ஆகவே, குழந்தைகள்தான்.
ஒன்றாம் வகுப்பிலிருந்து அந்தப் பள்ளியில் படித்த மாணவன் ஒன்பதாம் வகுப்பில் வன்முறையில் ஈடுபடுகிறான். ஒன்பது ஆண்டுகளின் பெரும்பகுதி பள்ளியில்தான் கழித்திருக்கிறான். அவனை உருவாக்கியதில் பள்ளிக்கு, ஆசிரியருக்குப் பங்கும், பொறுப்பும் இல்லையா?
இதுநம் சமுதாயத்தின் நமதுகாலக்கட்டத்தின் மிகப்பெரியசோகம்; நமக்கெல்லாம்ஒரு பெரியசவால்;
இளைஞர்கள்நம் சமுதாயத்தில், பெரியவர்களிடம் நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்பதன் குறியீடு.
வளர் இளம் பருவத்தில்தான் (adolescence) மாணவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்தப் பருவம் அனைத்து உலகநாடுகளிலும் ஒருசவாலானகால கட்டமாகத்தான் பார்க்கப்படுகிறது. இக்கட்டத்தில் பெரும் அளவில் மனஉளைச்சலுக்கு மாணவர்கள், பாலின பாகுபாடுஇன்றி, பாதிக்கப்படுவது உண்மை. இந்தவளர் இளம் பருவக் காலகட்டத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்குப் பலவிதமான உளவியல் கருத்துக்கள் உள்ளன.
அதற்கான பல்வேறு ஏற்பாடுகளும் சமூகத்தில் செய்யப்படுகின்றன. ஆனால் நம் சமுதாயத்தில் இதற்கான எத்தகைய ஏற்பாடும் இல்லை.
வளர் இளம் பருவம் அன்புக்காக , புரிதலுக்காக, அரவணைப்புக்காக, உதவிக்காகத் தவிக்கின்றகாலம். சிலக் கட்டுப்பாடுகளினால், கலாச்சாரக் காரணங்களினால், நம் சமுதாயத்தில் பெண்குழந்தைகள் வன்முறைகளில் அதிகமாக ஈடுபடாவிட்டாலும், அவர்களுக்கும் இதுபோன்ற உளவியல் சிக்கல்கள் ஏராளமாக இருக்கின்றன..
கல்விஅமைப்பு முழுவதையும்தான் இந்நிலைக்குக் குறைசொல்ல வேண்டும். வன்முறைகளில் ஈடுபடும் அல்லது அதில் தள்ளப்படும் குழந்தைகளின் சூழலைப் புரிந்துகொள்ளும் நிலை பள்ளிகளில் இல்லை. அந்தமாணவர்களின் பரிதாபமான குரல்தான் இன்று வன்முறையாக வெளிப்படுகிறது,
குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால் பள்ளிகள் சமுதாயத்திலிருந்து முழுக்க விலகிக் கிடக்கின்றன; அன்னியப்பட்டுக் கிடக்கின்றன. பள்ளிகளுக்கும், சுற்றிலுமுள்ள சமுதாயத்திற்கும் இடையில் உறவும் இல்லை; உரையாடலும் இல்லை. அரசுப் பள்ளி மாணவர்கள்தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர் என்று சொன்னால், அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தகைய சமூக, பொருளாதாரப் பின்னணியிலிருந்து வருகிறார்கள்? ஒதுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு,வறுமையில் வாடும் குடும்பங்களிலிருந்துதான் அரசுப் பள்ளிக்குவருகின்றனர்.அப்படிஎன்றால்ஏழைக்குழந்தைகள்தான்இதுபோன்றவன்முறைகளில்ஈடுபடுகிறார்களா? வசதிபடைத்தமாணவர்கள்ஈடுபடுவதுஇல்லையா ?
இவர்களை உருவாக்குவதில் பெற்றோர்களுக்குப் பங்கு இல்லையா என்று கேட்கப்படுகிறது. பெற்றோர்களுக்கும் பங்கு உண்டு.
ஆனால், அரசுப் பள்ளிக்கு வரக்கூடிய பெரும்பாலான குழந்தைகள் முதல் தலைமுறை உயர் நிலைப் பள்ளிகளில் கற்பவர். பெற்றோர்கள் எல்லோரும் அன்றாடம்கூலி வேலை செய்து கொண்டு, வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள். அவர்களிடம் இருந்துதான் உதவிவரவேண்டும் என்று சொன்னால் அதற்கான நேரமோ, புரிதலோ, சூழலோ பெற்றோர்களுக்குக் கிடையாது.
இன்றைய அரசுப் பள்ளிப் பெற்றோர், அவர்கள் வளர்ந்த காலத்திற்கும், இன்று தங்கள் வளர் இளம் பருவக் குழந்தைகள் வாழ்கின்ற உலகத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ள முடியாது. தங்கள் குழந்தைகள் வாழும் காலத்தின் பெரிய பரந்த உலகத்தை, கவர்ச்சிகளைக் கடை விரித்து, சுண்டி ஈர்க்கும் உலகத்தைப் புரிந்து கொள்ள முடியாது.
அதையும் பள்ளிகள்தான், ஆசிரியர்கள்தான் செய்யவேண்டும். அந்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களின் சமுதாயத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. பெரும்பாலான அரசுப் பள்ளிஆசிரியர்கள் தங்கள் வாழ்விடத்தில் இருந்துபள்ளிக்கு நீண்டதூரம் பயணம் செய்துவருகிறார்கள்.
அதனால் பள்ளியைச் சுற்றி இருக்கின்ற குழந்தைகள் பற்றியும்,சமுதாயத்தைப் பற்றியும் எந்தப்புரிதலும் கிடையாது. குழந்தைகளின் வாழிடங்களை நேரில் சென்று பெரும்பாலான ஆசிரியர்கள் பார்த்ததே கிடையாது. ஆசிரியர்கள்4 மணிக்குப் பள்ளிமுடிந்தஉடன் கிளம்பிவிடுவார்கள்.
குழந்தைகள் அவர்களுடன் பேசுவதற்கு, அவர்கள்மனதை உலுக்கிக் கொண்டிருக்கும் கேள்விகளைக் கேட்பதற்கு நேரமேஇல்லை . எந்தஉறவும் இல்லை.
சிலவிதிவிலக்கான ஆசிரியர்கள் மாணவர்களிடம் அன்பாகப் பழகக்கூடியவர்கள் உள்ளனர்.
அதுபோன்றஆசிரியர்களிடம் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் நடப்பது இல்லை. ஆசிரியரை அடிப்பது, அவதூறு பேசுவது போன்றவை நடப்பது இல்லை. ஏன் அனைத்து ஆசிரியர்களும் அவ்வாறு இல்லை? மனித உறவுகளே மறைந்து விட்டன; மடிந்து விட்டன.
நாற்பது-ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னெல்லாம் ஆசிரியர்கள் அதே கிராமத்தில் தங்கி இருப்பார்கள். மாலை நேரங்களில் மாணவர்களுடனும் பெற்றோருடனும் பேசுவார்கள். இன்று அந்த உறவு உடைந்தே விட்டது. அரசுப் பள்ளி ஆசிரியருக்கும், பெற்றோருக்கும் இடையில் பெரும் வர்க்க வேறுபாடு; அது உருவாக்கும் வர்க்க மன நிலை அனைத்தும் காரணம்.
மாணவர்களைப் பற்றி விசாரிக்க பெற்றோர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்றால், எவ்வாறு வரமுடியும்?நான்கு மணிக்கெல்லாம் ஆசிரியர்கள் வீட்டிற்குச் சென்றுவிடும் நிலையில், பெற்றோர்கள் ஒருநாள் கூலியை இழந்துதான் ஆசிரியரைப் பார்க்கவர வேண்டும்.
பெற்றோர்களைத் தேடிச்சென்று ஆசிரியர்கள் தான்பார்க்க வேண்டும்.
தவறு செய்யும் மாணவர்களை இழிவுபடுத்தாமல், பலர்முன்னிலையில் அவமானப் படுத்தாமல், தனியே அழைத்து, அவர்களிடம் ஆசிரியர்கள் பேசுகிறார்களா?அவனது பிரச்சினையை அறிந்து கொள்ள முயல்கிறார்களா? “ஏம்பாஇப்படிநடந்துகிட்ட?என்னகாரணம்?” என்பதைப்பற்றி ஒருபரிவுடன், கனிவுடன் ஆசிரியர்கள் பேச ஆரம்பித்தால் இந்த இடைவெளி மிகப்பெரிய அளவில் தவிர்க்கப்படும்.
கொரோனா காலகட்டத்தில் பலமாணவர்கள் பட்டினி கிடந்தார்கள். எத்தனை ஆசிரியர்கள் மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் தொலைபேசிமூலம் பேசினார்கள்? “ஏம்பா, சாப்பிட்டயா?’ என்று கேட்டார்களா?
அவ்வாறு பேசி இருந்தால் குழந்தைகள் ஆசிரியர்களுடன் ஒட்டிக்கொள்வார்கள். ஆசிரியர் கிழித்த கோட்டைத் தாண்டமாட்டார்கள்.
பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். தேர்வு வைக்க வேண்டும். குறைவான மதிப்பெண் வாங்கினால், குறைகூறத்தான் பெற்றோர்களை வரவழைக்க வேண்டும். அவர்கள் முன்னிலையில் மாணவர்களைத் திட்டவேண்டும்.
ஒரு மாணவனுடைய தலைமுடியை ஆசிரியர் வகுப்பிலேயே வெட்டியதாக ஒரு செய்தி. வளர் இளம் பருவக் காலக்கட்டத்தில் ஒருமாணவனை இதைவிடமோசமாகக் குத்திக் கிழிக்க முடியாது. ஒரு ஆசிரியர் இதை எப்படி செய்ய முடியும்?
நமது பள்ளிகளில் குழந்தைகளுடைய உளவியல் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதற்கு, அதற்கான கவுன்சிலிங் கொடுப்பதற்கு யாரும் இல்லை. ஒவ்வொரு பள்ளியிலும் கவுன்சிலர் நியமிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. எங்கே இருக்கிறார்கள் இந்த கவுன்சிலர்கள்? இந்தியாவில் தற்போது கவுன்சிலிங் கொடுப்பவர்கள் மிகவும் குறைவு.
அதுவும் கிராமப்புறத்தில் வறுமையிலும், சாதிய ஒடுக்கு முறைகளிலும் ஆழ்ந்து கிடக்கின்ற மாணவரின் உளவியல் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு கவுன்சிலிங் கொடுப்பவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
ஆசிரியர்கள்தான் ஆலோசகராக, வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது நான்கு மணிக்குமேல் இருந்து மாணவர்களிடம் பேச வேண்டும். மாணவரை சிறு குழுக்களாகப் பிரித்து, உபதேசம் செய்யாமல், மனதிலிருப்பதையெல்லாம் கொட்ட விட வேண்டும். அப்பொழுதுதான் மாணவர்கள் நம்பிக்கையாக ஆலோசனை பெறவருவார்கள். முதலில் ஆசிரியர்-மாணவர் நல்லஉறவை உருவாக்கிக்கொள்ள வேண்டும். தன்னுடைய தொலைபேசி எண்ணை அனைத்து ஆசிரியர்களும் குழந்தைகளிடம் கொடுத்து வைக்க வேண்டும்.‘ உனக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் கேட்கலாம்’ என்று நம்பிக்கையை உருவாக்கவேண்டும்.
மாணவர்கள் சுதந்திரமாகப் பேசுவதற்கு, கேள்வி கேட்பதற்கு, விமர்சிப்பதற்கு, உரையாடுவாதற்கு வகுப்பறையிலோ, பள்ளி வளாகத்திலோ இடமே இல்லை.
பெற்றோர்களின் இயலாமை, குழந்தைகளின் நிலை, இவற்றையெல்லாம் புரிந்து கொண்டு, ஆசிரியர்கள் குழந்தைகள் வசிக்கும் இடங்களுக்கு அடிக்கடி செல்ல வேண்டும். இவையெல்லாம் ஆசிரியர்களின் அடிப்படை விழுமியங்கள்; ஆசிரியருக்கான இலக்கணங்கள்.
தலைமை ஆசிரியருக்கு இதில் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. நமது பள்ளிகளில் பெரும்பாலான குழந்தைகள் கற்றல் திறனில் மிகவும் பின்தங்கியுள்ளனர் என்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்குத் தனிப்பட்டுக் கற்பிக்கும் ரெமெடியல் டீச்சிங் தேவைப்படுகிறது.. மதிப்பெண்கள் குறைவினாலும் மாணவருக்கு மனஉளைச்சல் ஏற்பட்டு, பிரச்சனைகள் உருவாகின்றன.
பாடத்திட்ட சுமையும் மிக அதிகமாக உள்ளது. வறுமையில் வாழ்கின்ற, கல்விசார்ந்து பள்ளிக்கு வெளியே எந்தவித உதவியும் கிடைக்காத சமுதாயத்தில் உள்ள குழந்தைகளுக்குப் பாடச் சுமையை சமாளிக்க முடியவில்லை. மேல்தட்டில் உள்ளவர்கள் தங்கள் குழந்தைகளை உலகஅளவிலான போட்டிக்குத் தயார்படுத்துவதற்காகப் பாடத்திட்டங்களை உருவாக்குகின்றனர்.
இதனை, அடிப்படை வசதிகள்கூட இல்லாத அடித்தட்டு மாணவர்கள் எவ்வளவு எம்பிஎம்பிக் குதித்தாலும் எட்ட முடியாது; ஆசிரியர்களாலும் கற்றுத்தர முடியாது.
இன்னொன்று சொல்லப்படுகிறது, இவர்களுக்கெல்லாம் சினிமா நட்சத்திரங்கள்தான் மாடல்ஸ். சினிமாவில் வன்முறைகளில் ஈடுபடுபவர்கள்தான் ஹீரோஸ். சரி; alternate models, வேறு வகைப்பட்ட மாடல்கள் யார்? ஆசிரியர் பல்வேறுபட்ட முன்னுதாரணமான மனிதர்களைப் பற்றித் தொடர்ந்து பேசவேண்டும். ஒரு அப்துல் கலாம் பற்றி மட்டும் அல்ல. சாதாரண மனிதர்கள் சிலரின் முன் உதாரண செயல்கள் பற்றிப் பேச வேண்டும். ஆசிரியர்களே முன்மாதிரியாக இருக்கவேண்டும். ஒருபிரச்சனை. சமூகத்தில் நடக்கிறது; அந்தசூழலில் ஆசிரியர். அதில்தலையிட்டு அதனைசரி செய்ய முயல்கிறார். இதைப் பார்க்கும்பொழுது மாணவர்கள் நிச்சயம் ஆசிரியர்களை முன்மாதிரியாக நினைப்பார்கள்.
தவறு செய்யும் மாணவனை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அவன் திருந்துவான் என்ற வாதங்கள் கேட்கிறோம். மாணவனை சஸ்பெண்ட் செய்தால், அவனை கிரிமினல் ஆக்கி விடுகிறீர்கள்.
ஆசிரியர் மேல் சுமத்தப்படும் பல வேற்றுப் பணிகளைத் தவிர்த்தல், பாடத் திட்ட சுமையைக் குறைத்தல் போன்றவை அரசு செய்ய வேண்டியவை.
மாற்றுகள் தேட வேண்டும்.இத்தகைய செயல்களில் ஈடுபடும்மாணவர்களை வேறுஏதாவதுஒன்றில் ஈடுபடஆர்வத்தைத் தூண்டலாம்.
அரசுப் பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் விளையாட்டுகளில் மிகச்சிறப்பாக இருப்பார்கள். உடல் உழைப்பில் ஈடுபடும் சாதிகளிலிருந்து வந்தவர்களாதலால், வலிமையான உடல்கட்டமைப்புக் கொண்டவர்களாக இருப்பார்கள். என்.சி .சி (NCC)., என்.எஸ்.எஸ், (N.S.S.), சமூக சேவை போன்ற பல்வேறு செயல்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்தலாம். தங்கள் சமூகத்தின் சில கொடிய பிரச்சனைகள் குறித்து பிராஜெக்ட் செய்யச் சொல்லலாம். அருமையாக செய்வார்கள். ஒரு சிறு பாராட்டு, பல மானநோய்களைத் தீர்க்கும் நிவாரணி.
கல்வித் துறை முதலாவதாக, பள்ளிக்கு இரண்டு ஆசிரியர்களுக்காவது கவுன்சிலர் பயிற்சி அளித்து, மாணவர் நெருங்கிப் பேசும் வாய்ப்பை அளிக்க வேண்டும். பள்ளிக்கும், சமுகத்திற்குமான விரிசலைப் போக்க வேண்டும். பள்ளியில் அருமையான மனிதநேயமுடைய, கனிவும், பரிவும், நம்பிக்கையும் கொண்ட ஒருசூழலை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். தவறினால், இந்தத் தலைமுறைக் குழந்தைகளை நாம் இழந்துவிடுவோம்.