தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் எப்படி ஒரு சகாப்தமோ அப்படித்தான் தெலுங்கு திரைப்பட உலகில் என்.டி.ஆரும்.
என்.டி.ராமாராவ் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர். 1923-ஆம் ஆண்டு மே மாதம் 28-ம் தேதி ஆந்திர மாநிலத்தில் நிம்மகுரு என்ற ஊரில் பிறந்தார்.
சிறு வயதில் இருந்தே சினிமா ஆர்வம் கொண்டவராக இருந்த என்.டி.ராமாராவ், எம்.ஜி.ஆரை போலத்தான் 1947-ல் மனதேசம் எனும் தெலுங்கு படத்தில் காவல் அதிகாரி வேடத்தில் நடித்தார்.
அதன் பிறகு பை-லிங்குவல் படமாக வெளியான ‘பாதாள பைரவி’ படத்தின் மூலம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமடைந்தார்.
அதன் பிறகு தெலுங்கு சினிமா என்.டி.ஆரை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. 1952-ல் ‘கல்யாணம் பண்ணிப்பார்’ என்னும் திரைப்படம் வெளியானது.
அந்த திரைப்படத்தின் வெற்றிக்கும் பிறகு என்.டி.ஆர் அசைக்க முடியாத நடிகராக உருவானார்.
கர்ணன் படத்தில் என்.டி.ஆர் கிருஷ்ணராக வரும் காட்சிகளை இன்றளவும் மெய்சிலிர்த்து பார்த்துக் கொண்டிருப்போம் நம்மில் பலர்.
ஆந்திர மக்கள் இவரை கடவுளாகவே கொண்டாடினர். இன்றளவும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
பல திரைப்படங்களில் நடித்து தெலுங்கு திரைப்படத்துறைக்கு பெருமை சேர்த்தமைக்காக 1968-ல் பத்மஸ்ரீ விருது என்.டி.ஆருக்கு வழங்கப்பட்டது. தமிழில் மாயா பஜார், லவகுசா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
நந்தமுரி டரகா ராமாராவ் எனும் என்.டி.ஆர் அரசியலிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். 1980களில், என்.டி.ராமா ராவ் திரையுலக வாழ்க்கையில் இருந்து ஓய்வுப் பெற்று, தீவிரமாக அரசியலில் ஈடுபட்டார்.
தற்போது சந்திர பாபு நாயுடு தலைவராக இருக்கும் தெலுங்கு தேசம் கட்சியை 1982 ஆம் ஆண்டு நிறுவியவர் என்.டி.ஆர்தான்.
1983 – 1994 காலக்கட்டத்தில் என்.டி.ஆர் மூன்று முறை முதலமைச்சராக இருந்தார். இவர் முதல்வராக இருந்த காலக்கட்டத்தின் சினிமா துறைக்கு ஆற்றிய பங்கு அதிகம். கிராமப்புற பகுதிகளில் திரையரங்குகள் அமைய காரணம் என்.டி.ஆர்தான்.
தனது கட்சியை மாநிலம் முழுவதும் கொண்டு செல்ல ‘சைதன்யா ரதம்’ என்னும் பயணத்தை என்.டி.ஆர் மேற்க்கொண்டார். என்.டி.ஆர் திரைக்கு வரும் முன்னரே திருமணமனமானவர்.
1942ம் ஆண்டு பசவ தாரகம் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர் 1985ம் ஆண்டு புற்றுநோய் காரணத்தால் மரணம் அடைந்தார்.
அவரது நினைவாக பசவதாரகம் இந்தோ – அமெரிக்கா புற்றுநோய் மருத்துவமனையை ஐதராபாத்தில் 1986ல் திறந்தார் என்டிஆர்.
மனைவியின் பிரிவிற்கு பிறகு தனது 11 மகன், மகள்கள் மற்றும் முப்பதுக்கும் மேற்ப்பட்ட பேரக்குழந்தைகளுடன் என்டிஆர் வாழ்ந்து வந்தார்.
பின்னர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மாரடைப்பால் 1996ம் ஆண்டு ஜனவரி மாதம் இதே தேதியில் காலமானார். அவருக்கு அப்போது வயது 72.
நன்றி: முகநூல் பதிவு.