செஸ்ஸபிள் மாஸ்டர் செஸ் தொடரில் 2வது இடம் பிடித்த சென்னையைச் சேர்ந்த 16 வயது பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பிறந்த சிறுவனான பிரக்ஞானந்தா ஏழு வயதிலேயே உலக சாம்பியன்ஷிப் பட்டத்தையும், 10 வயதிலேயே சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தையும் வென்றதோடு, இளம்வயது சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தையும் வென்றவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்ற செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இதில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா சீன வீரர் டிங் லிரனைச் சந்தித்தார்.
இந்தப் போட்டியில் முதல் செட்டை சீன வீரர் திங் லிரன் கைப்பற்றினார். 2-வது செட்டுக்கான போட்டியில் பிரக்ஞானந்தா திறமையாக விளையாடி வெற்றி பெற்றார்.
தொடர்ந்து டை பிரேக்கரில் தோல்வியடைந்து பிரக்ஞானந்தா இரண்டாவது இடம் பிடித்தார்.
இந்நிலையில் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் (ஐஓசி) வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது 16 வயதாகும் பிரக்ஞானந்தா, பணிக்கால அடிப்படையில் தனது 18வது வயதில் பணியில் சேர்வார் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.