விமல் ஆரம்பித்த ‘யூடியூப்’ சேனலால் வந்த பிரச்சனை!

‘ஓடியன் டாக்கீஸ்’ தயாரிப்பில் விமல் கதாநாயகனாக நடித்து உருவாகியுள்ள படம் ‘துடிக்கும் கரங்கள்’.

மும்பையைச் சேர்ந்த மனிஷா கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஏற்கெனவே இரு தெலுங்குப் படங்களில் நடித்துள்ளதுடன், கன்னடத்திலும் ஒரு படத்தில் நடித்துவருகிறார்.

இவர்களுடன் சுரேஷ் மேனன், சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குனர் வேலுதாஸ் படத்தை இயக்கியுள்ளதுடன், இணை தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்றுளார்.

இவர் எஸ்.எஸ்.ஸ்டான்லி, நந்தா பெரியசாமி, வசந்தமணி ஆகிய இயக்குனர்களிடம் பணிபுரிந்தவர்.

கனவு என்கிற குறும்படத்தை இயக்கியதற்காக கனடா சர்வதேச திரைப்பட விருது பெற்றுள்ளார்.

இந்தப் படம் குறித்துப் பேசிய இயக்குநர் வேலுதாஸ், “யூடியூப் சேனல் நடத்தும் செய்தியாளராக விமல் நடித்துள்ளார். அவரது நண்பராக சதீஷ் நடித்துள்ளார்.

ஒரு செய்தியாளராக தன் வேலையை செய்கிறார். அதனால் அவருக்கு மிகப்பெரிய இடத்திலிருந்து ஏற்படும் எதிர்ப்பு மற்றும் பிரச்சனைகளை எப்படி தைரியமாக எதிர்கொள்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

இதுவரை நகரத்து இளைஞனாக அதிகம் நடித்திராத ஒருவர் நடித்தால், அந்த கதாபாத்திரம் சுவாரசியமாக இருக்கும் என்பதால், ஹீரோவாக விமலை தேர்வு செய்தோம். நடிகர் சுரேஷ் மேனனும் ஒளிப்பதிவாளர், இயக்குனர் என்பதால், என் சுமையை புரிந்துகொண்டு, அதை எளிதாக்கும் விதமாக நடித்துக்கொடுத்தார்” என்கிறார்.

மும்பையை சேர்ந்த ‘இந்தியன் சகீரா’ என அழைக்கப்படும் சினேகா குப்தா, ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். படத்தின் ஹைலைட்டான அம்சங்களில் ஒன்றாக அந்தப் பாடல் இருக்கும்.

பிரபல இசையமைப்பாளர் மணி சர்மாவின் நிழலாகவே, அவருடன் 23 ஆண்டுகள் உதவியாளராகப் பணியாற்றிவரும், அவரது சகோதரர் மகன் ராகவ் பிரசாத் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

நகரத்து கதை என்பதால் சென்னையிலேயே 45 நாட்கள் மொத்த படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது.

படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்மி இந்தியில் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் மூன்று படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

பா.மகிழ்மதி

You might also like