அண்ணா என்றொரு அன்பு உயிர்  

கோபாலபுரம் வீட்டின் கீழ்தளத்தில் நாங்கள் அனைவரும் இருப்போம். மாடியில் தலைவர் இருப்பார். பேரறிஞர் அண்ணா அவர்கள் வந்துவிட்டால் மட்டும் தான் அவருக்கு மாடியைக் கொடுத்துவிட்டு கீழே வந்து விடுவார் தலைவர்.

அந்தளவுக்கு அண்ணாவை சிகரத்தில் வைத்திருந்தார் தலைவர். அதைப் பார்த்துத்தான் எங்களுக்கும் அப்படிக் காட்சி அளித்தார்.

முக்கியமான விவாதம் என்றாலோ ஓய்வு எடுக்க வேண்டும் என்றாலோ கோபாலபுரம் வீட்டுக்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் வந்துவிடுவார்கள். அவருக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்பவனாக இருக்கும் வாய்ப்பு அப்போது எனக்குக் கிடைக்கும்.

இராயப்பேட்டை காவல்நிலையத்துக்கு அருகில் இருக்கும் அமீன் கேப் உணவுவிடுதியில் தேநீரும், சமோசாவும், பக்கோடாவும் என்றால் அண்ணாவுக்கு அதிகம் பிடிக்கும். சைக்கிள் எடுத்துக் கொண்டு நான் சென்று வாங்கி வருவேன்.

அந்தக் காலத்தில் ஜுக் பாக்ஸ் (Juke) என்ற ஒன்று இருக்கும். அதில் காசு போட்டால் நமக்குப் பிடித்த பாடல்களைக் கேட்கலாம். அண்ணாவுக்கு டீ வாங்கிவிட்டு, இப்படி பாடல்கள் கேட்டுவிட்டு வருவேன்.

மிகவும் மகிழ்ச்சியான மனநிலையில் அண்ணா இருந்தார்கள் என்றால் எங்களை நாடகம் நடிக்கச் சொல்லி அதனை ரசித்துப் பார்ப்பார்கள்.

‘மனோகரா’ படத்தில் வரும் தர்பார் காட்சியை நாங்கள் நடித்துக் காட்டுவோம். சிவாஜியாக முத்து அண்ணன் நடிப்பார். அரசராக அழகிரி அண்ணன் இருப்பார். சிவாஜியை தர்பாருக்கு இழுத்து வரும் சங்கிலியாக நான் இருப்பேன்.

மகாராணி பத்மாவதி சிறை செல்லவேண்டும். மனோகரன் வசந்தசேனாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இதுதான் மன்னனின் கட்டளை. அப்போது மனோகரன், நான்கு வீரர்களால் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

தலைவரின் வசனத்துக்காகவும் சிவாஜியின் அந்த நடைக்காகவும் அந்தப் படத்தை பல தடவை பார்க்கலாம்.

மன்னன்: உன்னை ஏன் அழைத்திருக்கிறேன் தெரியுமா?

சிவாஜி: திருத்திக் கொள்ளுங்கள், அழைத்துவரச் சொல்ல வில்லை. இழுத்துவரச் செய்திருக்கிறீர்கள்.

மன்னன்: நீ நீதியின் முன் நிற்கும் குற்றவாளி.

சிவாஜி: கொலை செய்தேனா? கொள்ளை அடித்தேனா? நாட்டைக் கவிழ்க்கும் குள்ளநரி வேலையைத்தான் செய்தேனா? குற்றமென்ன செய்தேன் கொற்றவனே? குற்றம் என்ன செய்தேன்?

மக்கள்: குற்றம் என்ன செய்தான் மனோகரன் என்பதைச் சொல்லுங்கள்.

மன்னன்: இது உங்களுக்கு சம்பந்தமில்லாதது.

சிவாஜி: சம்பந்தமில்லாதது சபைக்கு வருவானேன் – என்று கிண்டலாகக் கேட்பார். இப்படி தர்பார் காட்சியைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

‘வஞ்சகம் வாழ்ந்தது கிடையாது.
கொடுமை நிலைத்ததில்லை..

“இதோ பார்… உன் பொருட்டு விழா நடைபெறுகிறது. விழாவிற்கு நீ வந்து தான் தீர வேண்டும்” – என்று மந்திரி சத்யசீலர், மனோகரனிடம் கூறுவார்.

“உத்தரவு கொடுங்கள் தாயே.. உருத்தெரியாமல் ஆக்குகிறேன். அந்த ஊர் கெடுப்பவளை” என்று கர்ஜிப்பான் மனோகரன்

“விடை கொடுங்கள். வெற்றி மழை பொழிய வைக்கிறேன். வீணன் முத்துவிசயனின் விலா எலும்பை நொறுக்குகிறேன்” என்று முழங்குவான் மனோகரன். இந்தக் காட்சிகளை நடித்துக் காட்டுவோம். அண்ணா தன்னை மறந்து ரசித்துக் கொண்டு இருப்பார்கள்.

ஒருநாள் காஞ்சிபுரத்தில் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. நாங்கள் அனைவரும் அண்ணாவின் வீட்டுக்குச் சென்றோம். திடீரென்று, “அந்த மனோகரா தர்பார் சின் நடித்துக் காட்டுங்க” என்றார் அண்ணா. அவருக்குள் இருந்த குழந்தை உள்ளத்தைப் பார்த்து நெகிழ்ந்து போனோம்.

தமிழ்நாட்டின் பெரும்பாலான நகரங்களில் நாடகம் நடித்தவர் அவர். அவரே நாடக மேதை. ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ என்று எழுத்தாளர் கல்கி அவர்களால் போற்றப்பட்ட மேதை அவர்.

அத்தகைய பெருந்தகை, எங்களைப் போன்ற சிறுவர்களை அழைத்து நாடகம் போடச் சொன்னதை அவரது பெருந்தன்மை என்பதா? எங்களுக்குக் கிடைத்த பெருமை என்பதா?

இதுதான் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை ஆண்டு தோறும் நடத்த வேண்டும் என்ற உந்துதலை எனக்கு ஏற்படுத்தியது.

கோபாலபுரம் இளைஞர் திமுக சார்பில் 30.9.1968 அன்று முதல் கூட்டம் நடத்தப்பட்டது. பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவாக அது ஏற்பாடு செய்யப்பட்டது. கோபாலபுரம் கிருஷ்ணன் கோவில் சாலையில் நடந்த அந்த விழாவுக்கு சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஜேசுதாஸ் தலைமை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

மாண்புமிகு அமைச்சர் ஏ.கோவிந்தசாமி,

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., எம்.எல்.ஏ.,

சிலம்புச்செல்வர் ம.பொ.சி., எம்.எல்.ஏ.,

ப.உ.சண்முகம் எம்.எல்.ஏ.

அப்துல் சமது எம்.ஏ., எம்.பி.,

துரைமுருகன் பி.ஏ..

இரா.சனார்த்தனம் எம்.ஏ., ஆகியோர் அழைக்கப்பட்டார்கள். தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கவியரங்கம் ஒலிபரப்பப்படும் என்று அறிவித்து இருந்தோம். அந்த விழா மிகச் சிறப்பாக நடந்தது. அதன் உற்சாகத்தில் அடுத்த ஆண்டு இன்னும் பெரிதாக நடத்தத் திட்டமிட்டோம்.

1969 பேரறிஞர் பெருந்தகைக்கு மணிவிழா. அதனை முன்கூட்டியே கோபாலபுரம் இளைஞர் திமுக சார்பில் கொண்டாடத் திட்டமிட்டோம். அண்ணாவையே நடுநாயகமாக அமர வைத்து நடத்த விரும்பினோம்.

முதல்வர் அண்ணாவை அழைக்க அவரது நுங்கம்பாக்கம் இல்லத்துக்குச் சென்றேன். அண்ணா அவர்கள் உடல் நலமில்லாமல் இருக்கிறார்கள். மாடியில் அண்ணா அவர்கள் இருக்கிறார்கள். முன்னணி தலைவர்கள் அனைவரும் கீழே இருந்தார்கள்.

அவர்களிடம் நான் வந்த நோக்கத்தைச் சொன்னேன். உடல்நலமில்லாமல் இருக்கிறார் என்று சொல்லி சந்திக்க இயலாத சூழ்நிலையை அவர்கள் சொன்னார்கள். நான் கோபாலபுரம் திரும்பி விட்டேன்.

சில நிமிடங்களில் முதல்வர் அண்ணாவின் கார், கோபாலபுரம் வீட்டு வாசலில் வந்து நின்றது. அண்ணாவின் வாகன ஓட்டுநர் சண்முகம் அவர்கள் வந்து, என்னை அழைத்தார். “அய்யா உங்களை அழைத்து வரச் சொன்னார்” என்று சொன்னார்.

அண்ணாவின் முதல்வர் வாகனத்திலேயே அவரைச் சந்திக்கச் சென்றேன்.

குழந்தை முகத்துடன் எப்போதும் புன்சிரிப்புடன் காட்சி அளிக்கும் அண்ணா அவர்கள் அன்று சோர்வாகக் காணப்பட்டார்கள். அவரது உடல்நோவு, அவரது முகத்தில் தெரிந்தது.

“நாங்கள் உங்கள் மணிவிழாவை நடத்துகிறோம். நீங்கள் கலந்து கொள்ள வேண்டும்” என்று தேதியைச் சொல்லி கேட்டேன்.

“உன் அப்பனைப் போலவே பிடிவாதக் காரனாக இருக்கிறாயே?” என்றார் அண்ணா. என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு இதுதான். 16 வயதில் கிடைத்த பெரும் பாராட்டு இது.

நான் நடத்திய விழாவில் கலந்து கொண்டு பாராட்ட வேண்டிய அண்ணா அவர்கள், அதில் கலந்து கொள்ளாமலேயே கொடுத்த பாராட்டு அது.

காலம் வழங்கிய கொடையாய், வாராது வந்த மழையாய் இந்த தமிழ்நாட்டில் பூத்த அறிவுலக ஆசானாம் அண்ணா அவர்கள் 1969 பிப்ரவரி 3-ம் நாள் கோடிக்கணக்கான மக்களை அழவைத்துவிட்டு வங்கக் கடலோரம் மீளாத்துயில் கொண்டு விட்டார்.

தமிழகம் அதற்கு முன்னும் பின்னும் பார்த்திராத மக்கள் திரளில் உடைந்த உள்ளத்தோடும், கலங்கிய கண்களோடும்

நானும் ஒருவனாய் நின்று கொண்டு இருந்தேன். அண்ணா சாலை ‘முரசொலி’ அலுவலகத்தின் (அப்போது அங்குதான் இருந்தது) வாசலில் நின்று மக்கள் கடலைப் பார்க்கிறேன்.

நடந்து சென்றவர்கள் அனைவரும் ‘அண்ணா’, ‘அண்ணா’ என்று அலறியபடியே சென்றார்கள். எத்தகைய அன்பை இந்த மனிதர் மீது மக்கள் வைத்திருந்தார்கள்! அதற்கு என்ன காரணம்?

அந்த மக்கள் மீது அவர் மாறாத அன்பைச் செலுத்தினார். ‘மக்களிடம் செல், மக்களோடு வாழ்’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

எனக்கு திரும்பத் திரும்ப நினைவில் வரும் வார்த்தையாக ‘மக்களிடம் செல், மக்களோடு வாழ்’ என்ற வார்த்தையே இருக்கிறது. பேரறிஞர் அண்ணாவின் பெரிய பாடமாக இதுதான் இன்று வரை என்னை வழிநடத்திக் கொண்டு இருக்கிறது.

எந்த விழாவை அண்ணாவை வைத்து நடத்த நினைத்தேனோ அந்த விழாவை அண்ணா அவர்கள் இல்லாமல் நடத்தினேன்.

– நன்றி மு.க. ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி.

You might also like