மதச்சார்பின்மை என்று சொல்வது பிழை!

மதச்சார்பின்மை என்று சொல்வது பிழையான கருத்து. மதநல்லிணக்கம் என்று தான் அழைக்க வேண்டும். மத நல்லிணக்கம் என்பது என்ன என்பதை அனைவரும் உணர வேண்டும்.

•திருக்கோவில்கள் ஆறுகால இந்து சமய பூஜைகள் நடக்கட்டும்.

•தேவாலயங்களில் மணியோசையோடு ஜெபங்கள் நடக்கட்டும்.

•இஸ்லாமிய சகோதரர்களின் மசூதிகளில் பாங்கோசையோடு தொழுகைகள் நடக்கட்டும்.

•குருத்வாராகளில் சீக்கியர்கள் தங்கள் கிரதங்கள் படித்து வழிபாடு நடத்தட்டும்.

•இறைமறுப்பாளர்கள், நாத்திகர்கள் தங்கள் கருத்தை சதுக்கங்களில் சொல்லட்டும்.

இது அவரவர்களின் விருப்பம், இதுதான் மதநல்லிணக்கம். இதில் நான் பெரிது, அவர் பெரிது, இதில் குறை, அதில் குறை என்று சொல்வது மேலும் சிக்கலை உருவாக்கும்.

ஆமாம்மா, இங்கே பலர் ஒருவரையொருவர் பழித்து வெளியிடும் வார்த்தைகள் எப்படி அந்த மதம் சார்ந்தவரை காயப்படுத்தும் என்பதை ஏனோ உணர மறுக்கிறார்கள்.

அவரவர் வழியில் அவரவர் வணங்குவதை விட்டு தேவையில்லாத வீண் வெறுப்பை ஏன் சம்பாதிக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது வேதனைதான் வருகிறது.

மதத்தையும், ஜாதியையும் நாங்கள் தடுக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, அதே தளத்தில் இயங்கிக் கொண்டு சுய நலத்திற்க்கு மதத்தையும், ஜாதியையும் வளர்ப்பது நல்லதல்ல.

அரசியலில் ஜாதிகள் மதங்கள் என்பது இல்லை என்று, சில இயக்கங்களை ஆரம்பித்து கொண்டு, அந்த தளத்தில் அதற்கு எதிராக, முரண்பட்டு இயங்குவது நல்லதல்ல. மதமும் ஜாதியும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்.

எப்படி டி.டி.கிருஷ்ணமாச்சாரி நாடாளுமன்றத் தேர்தலில், திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்? சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவர் ஜி.ஆர்.தாமோதரன், பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

வட இந்தியர் ராம்நாத் கோயங்கா தோல்வியுற்றாலும் திண்டிவனம் பகுதியில் போட்டியிட்டார். இப்படி பல விஷயங்களை சொல்லலாம். கும்பகோணத்தைச் சேர்ந்த மணிக்கொடி ஆசிரியர் சீனிவாசனை சங்கரன்கோவில் தொகுதியில் சம்பந்தமில்லாமல் வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்தது எல்லாம் உண்டு.

இப்படி அன்றைக்கு மதமும், ஜாதியும் அரசியலில் இல்லை. இடைத்தேர்தலில் விருதுநகரில் இருந்து, குடியாத்தம் வந்து போட்டியிட்டார் காமராஜர். இப்படி எல்லாம் அன்றைக்கு, நல்லவர்கள், வல்லவர்கள் அரசியல் களத்தில் செயல்படக்கூடிய ஆளுமைகள் பொது வாழ்க்கையில் வரவேண்டும்.

ஜாதி மதங்களை கடந்து வர வேண்டும். அது நாட்டுக்கு நல்லது, ஜனநாயகத்துக்கு நல்லது என்று இருந்த காலத்தை விட்டு, இன்றைக்கு அவர் மதம் பெரிது, இவர் மதம் பெரிது, இவர் ஜாதி பெரிது, அவர் ஜாதி பெரிது என்று பேசி அரசியல் வியாபாரம், அரசியல் அடையாளங்களை ஏற்படுத்திக்கொள்வது எதிர்காலத்துக்கோ, நாட்டின் முன்னேற்றத்திற்கோ நல்லதல்ல.

இப்படி சொல்வதனால் எனக்கும் எதிர்வினைகளும் வரலாம். வருவதைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், சொல்ல வேண்டியதை சொல்வது தானே முறை. அதில் தயக்கங்கள் கூடாது என்பது என் போன்றவர்களின் கருத்து.

– வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

You might also like