தாய்மையால் முழுமையடையும் பெண்மை!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

நான் என்னும் அகந்தை கொண்ட
ஆண்குலத்தின் முன்னே – பெண்கள்
தாழ்ந்தவரல்ல என்றும் தாழ்ந்தவரல்ல
காலத்தை வெல்லுகின்ற
பெண்குலத்தின் முன்னே – ஆண்கள்
உயர்ந்தவரல்ல என்றும் உயர்ந்தவரல்ல

(நான்…)

பெண்களெல்லாம் அடிமையல்ல
ஆண்களெல்லாம் மேதையல்ல
ஏன் இது தெரியவில்லை
அடுப்பூதும் பெண்களுக்கு
படிப்பெதற்கு என்று நம்மை
அதிகாரம் செய்ததெல்லாம் அந்த நாள்
அறிவோடு பெண்கள் அழகாக இங்கு
அரசாட்சி செய்வது இந்த நாள்

தாலி என்ற ஒரு வேலி கொண்டு நம்மை
ஆள நினைப்பது வெறித்தனம்
பிள்ளை பெறுகிற கருவியாகவே
பெண்ணை மதிப்பது மடத்தனம்
மாற்றனும் இந்த உலகை
மாறட்டும் ஆண்கள் மமதை

பெண்டுகளா ரோஜா செண்டுகளா
வண்டுகளா வாழைத் தண்டுகளா
குடும்பமென்ற கோவிலிலே
குடியிருக்கும் தெய்வங்களில்
ஆண்கள் என்றும் பெண்கள் என்றும் பேதமா?
அடுத்தவரை மதிப்பபதுதான் அடக்கமென்ற
உலகினிலே அடிமையென்றும்
உரிமையென்றும் வாதமா?

(பெண்டுகளா)

கன்னி என்ற பருவநதி
கரை புரண்டோடும் – அது
கல்யாண மேடையில்தான் சங்கமமாகும்
அன்னை சிந்தும் கருணைமழை
குழந்தைகளாகும் இங்கு –
பெண்மையெல்லாம் தாய்மையில்தான்
முழுமையைக் காணும்…..

– 1972- ம் ஆண்டு ஜெய்சங்கர் நடிப்பில் வெளிவந்த ‘உனக்கும் எனக்கும்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் ஆலங்குடி சோமு.

இசை: வி. குமார்.        குரல் : டி. எம். சௌந்தரராஜன்

You might also like