தமிழ் சினிமாவில் தலைதூக்கும் பவுன்சர் கலாச்சாரம்!

பாலிவுட் நட்சத்திரங்களான ஜோடியான ஆலியா பட் – ரன்பீர் கபூரின் திருமணம் அண்மையில் நடைபெற்றது.

திருமண நிகழ்வில் மொத்தமே 24 பேர்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது.

இது முக்கியத்தும் பெறும் செய்திகள் அல்ல… அடுத்த வருவதுதான் முக்கியமான செய்தி.

24 பேர் பங்குபெறும் திருமண நிகழ்ச்சிக்கு, ‘பாதுகாப்புக்காக’ 200 பவுன்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது ஒரு நபருக்கு எட்டு பவுன்சர்கள்!

அப்படி என்ன பாதுகாப்பு அச்சுறுத்தல்.. அதுவும் இத்தனை பேர்.

காவல்துறையில் தெரிவித்தால் அவர்களே பாதுகாப்பு தருவார்களே. இப்படிப் பல கேள்விகள் எழலாம்.

பவுன்சர்கள் என்பவர்கள் பாதுகாப்புக்காக என சொல்லப்பட்டாலும், அது பகட்டுக்காக என்பதே உண்மை.

ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாய் கறுப்பு உடையோடு தன்னைச் சுற்றி ஏழெட்டு பவுன்சர்கள் சூழ நடந்து வருவதை பெருமையாக நினைக்கின்றனர் திரையுலகினர்.

ஆரம்பத்தில் பாலிவுட்டில் துவங்கிய இந்த கலாச்சாரம் தமிழ்த் திரையுலகிலும் புகுந்தது.

ஆரம்பித்து வைத்தவர் சிவகார்த்திகேயன்.

தொலைக்காட்சிகளில் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்தி வந்த இவர், 2012ல் ‘மெரினா’ படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் நுழைந்தார்.

2014ம் ஆண்டல் என்ன நினைத்தாரோ.. அவர் நடித்த மான் கராத்தே பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட பவுன்சர்களோடு வந்தார்.

அந்த பவுன்சர்கள், வி.ஐ.பி.க்கள் மற்றும் செய்தியாளர்களை தள்ளிவிட, பலரும் சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார் சிவகார்த்திகேயன்.

விக்ரம் பிரபு, தனது அரிமா நம்பி பாடல் வெளியீட்டு விழாவில் இருந்து பவுன்சர்கள் புடைசூழ வருவதை வழக்கமாக்கிக் கொண்டார்.

சந்தானம், முழு நீள கதாநாயகனாக நடித்த முதல் படமான ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் ஆடியோ நிகழ்விலிருந்து இந்த பழக்கத்தைத் துவக்கினார்.

இவர்கள் வரிசையில் சிம்பவும் இணைந்தார்.

இப்போதெல்லாம் முதல் படம் வெளிவராத நடிகர்கள்கூட பவுன்சர்களோடு நிகழ்ச்சிகளுக்கு வர ஆரம்பித்து விட்டனர்.

ஒரு வாதத்துக்காக, ‘பாதுகாப்புக்காக’ என வைத்துக்கொள்வோம்.

ஆடியோ வெளியீடு போன்ற நிகழ்ச்சிகளுக்கு மேடையில் பேச வி.ஐ.பி.க்களும், செய்திக்காக செய்தியாளர்களுமே அதிக அளவில் வருவார்கள். தங்களுக்கு கோஷம் போட நடிகர்களே சிலரை அழைத்து வருவது உண்டு.

இவர்களில் எவரும் நடிகர்கள் மீது முட்டி மோதி ‘பாதிப்பு’ ஏற்படுத்தப்போவது இல்லை.

இதிலிருந்தே, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த பவுன்சர்கள் இல்லை என்பது தெரிந்துவிடும்.

சில அரசியல் பிரமுகர்களும் பவுன்சர்கள் புடை சூழ உலா வர ஆரம்பித்துவிட்டனர். இங்கும் பெரும் பணக்காரர்கள் இல்லத் திருமணங்களில், இசைக்கச்சேரி, விருந்து என்பதோடு பவுன்சர்கள் என்பதும் பட்டியலில் சேர்ந்துவிட்டது.

ஆரம்பத்தில் நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பார்களில்தான் பவுன்சர்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர். அங்கு வரும் முக்கியஸ்தர்கள் எவரேனும் அதித போதையில் தகராறில் ஈடுபட்டால், அதிகம் வலிக்காமல், அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதில் வல்லவர்களாக இந்த பவுண்சர்கள் இருப்பார்கள்.

அதன் பிறகுதான் திரையுலகம், அரசியல், திருமணங்கள் என பல்கிப் பெருகி, பவுன்சர்கள் சப்ளை செய்யும் நிறுவனங்கள் துவங்கப்பட்டன. இன்று இது பெரிய பிஸினஸ்.

பகட்டுக்காக மட்டுமின்றி, கட்டுக்கடங்காத கூட்டங்களில் காவல்துறையினருக்கு உதவியாகவும் பவுன்சர்கள் பயன்படுத்தப் படுகின்றனர்.

பவுன்சராக பணிபுரிய இளைஞர்கள் பலரும் விரும்புகிறார்கள். ஏ.டி.எம். வாசல்களில் பாரத்திருப்பீர்களே. தனியர் செக்யூரிட்டி ஊழியர்கள்.. அவர்களைப் போன்றவர்களுக்கு மாத சம்பளம் சுமார் 10 ஆயிரம் ரூபாய்தான்.

அதுவே பவுன்சர்களுக்கு நான்கு மடங்கு அதிகமாக, நாற்பதாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம்.

இந்த நிலையில் பெண்களும் பவுன்சர்களாக வர ஆரம்பித்துவிட்டனர்.

டெல்லி கேளிக்கை விடுதி ஒன்றில் பவுன்சராக பணியாற்றும் மெஹருன்னிசாதான் இந்தியாவின் முதல் பெண் பவுன்சர்.

“இப்போது இரவு விடுதிகளுக்கு பெண்களும் வர ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களில் சிலர் மது போதையில் ரகளை செய்வதும் உண்டு. தவிர ஆண்களுக்குள் சண்டை ஏற்படுவதும் உண்டு. இவற்றை அடக்கி சமாளிப்பது என் பணி” என்கிறார் மெஹருன்னிசா.

இதைத் தொடர்ந்து, பெண் பவுன்சர்களை மட்டுமே கொண்ட நிறுவனங்கள் தோன்ற ஆரம்பித்துவிட்டன.

2016ல் புனேவை சேர்ந்த தீபா பராப் துவங்கிய ‘ரன் ராகினி பவுன்சர்ஸ் குருப்’ என்ற நிறுவனத்தை புனேவில் துவங்கினார். இந்தியாவிலேயே பெண்களை மட்டுமே கொண்டு துவக்கப்பட்ட பவுன்சர் நிறுவனம் இது.

இன்று இந்த அமைப்பில் 500க்கும் மேற்பட்ட பெண் பவுன்சர்கள் பணி புரிகின்றனர்.

“முன்பு பெண்கள் கூட்டத்தையும் ஆண் பவுன்சிலர்களே கட்டுப்படுத்த வேண்டிய சூழல் இருந்தது. அதனால்தான் பெண் பவுன்சிலர்களை கொண்டு நிறுவனம் துவங்க நினைத்தேன்.

பவுன்சர் என்றால் கைகளும், கால்களும் வலுவாக இருக்க வேண்டும். அப்போதுதான் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

இதனால் தினமும் அவரவர் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வது அவசியம். மேக் அப், மோதிரம், பிரேஸ்லெட், சங்கிலி, விலையுயர்ந்த காதணி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்” என்கிறார் இவர் தீபா பராப்.

இதற்கிடையே மீண்டும் ஒரு சினிமா செய்தி.

பெண் பவுன்சராக ஒரு திரைப்படத்தில் களம் இறங்குகிறார் பிரபல நடிகை தமன்னா.

‘பப்ளி பவுன்சர்’ என்ற பெயரில் இந்தியில் உருவாகிறது இந்தப் படம்.

இந்தப் படம் குறித்து பேசிய தமன்னா, “இன்று எல்லாத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் களம் இறங்கி உள்ளனர்.

அதில் சமீபமாக, பவுன்சர் பணியும் ஒன்று. இந்தப் பணியில் ஈடுபட உடல் வலு மட்டுமின்றி மனத்துணிவும் வேண்டும். அதை வெளிப்படுத்தும் விதமாக இந்த படம் இருக்கும்!” என்கிறார்.

ஆக பவுன்சர்கள் என்பது, பகட்டு, அவசியம் என்பதை எல்லாம் கடந்து பணி வாய்ப்பு என்கிற நிலைக்கு வந்துவிட்டது என்பது உண்மை.

-யாழினி சோமு

You might also like