நான் ஒரு புராதனப் பயணி!

ஓவியர் செழியன் மறைவுக்கான அஞ்சலி!

சமகால நவீன ஓவிய உலகில் முக்கிய கலைஞர்களில் ஒருவரான செழியன் எனப்படும் நெடுஞ்செழியன், ஏப்ரல் 10 ஆம் தேதியன்று திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மறைந்தார். அவரது மறைவு தமிழ் ஓவிய உலகுக்கு பேரிழப்பாக மாறியிருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அவரது மகன் சிபி செழியன், “என் நண்பர், ஆசிரியர், வழிகாட்டி, வழிகாட்டும் விளக்கும், மிகச் சிறந்த ஓவியர், சிற்பி, என் வாழ்வின் பகுதியான என் தந்தை நெடுஞ்செழியன் மறைந்துவிட்டார்.

இந்த இழப்பைச் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை” என்று முகநூலில் பதிவிட்டுள்ளார்.

புதிய பார்வை இதழில் வெளிவந்த நவீன தூரிகை தொடரில் அவரைப் பற்றி சுந்தரபுத்தன் எழுதிய கட்டுரையை இங்கே ‘தாய்’ வாசகர்களுக்காக தருகிறோம்!

செழியன், நவீன ஓவியக்கலையின் நுட்பங்களில் செழித்தவர். ஓவியக் கூடத்தை விட்டு வெளியே வந்து சாலைகள், தெருக்கள், அரங்குகள் என ஓவியத்தை ஒரு நிகழ்த்துக் கலையாக செய்வதில் ஆர்வமுள்ளவர்.

சோதனை முயற்சிகள், புதுமையான உத்திகள், வேறுபட்ட பாடுபொருள்கள் என ஓவிய வானில் வானம்பாடியாக பறந்து மகிழ்கிறார்.

சமீபத்தில் ‘கேமல்’ நிறுவன ஓவியப் போட்டியில் முதல் பரிசை வென்றுள்ள இவரது ஓவிய நிகழ்வைப் பார்த்து மகிழ்ந்த கவிஞர் வாலி,

‘நான் கூர்மையில் முப்பது ஓவியச் செழியன் கைகள் கொண்டு வரைந்தேன். உயிர்க் காதலனே உனை என் சித்திரச் செழியன் கண்கள் கொண்டு வரைந்தேன்’ என்று ‘தீனா’ என்ற படப் பாடலில் பாராட்டி எழுதியிருக்கிறார்.

வெளிப்படையான ஓவியப் படைப்பு அரங்குகளை உருவாக்கும் செழியனின் படைப்புலகம் எங்கே தொடங்கியது?

என்னையும் ஒரு கிராமம்தான் படைப்புக் கலைஞனாக வளர்த்தது.

நான் பிறந்த ராயந்தூர், தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூருக்கு அருகில் இருக்கிறது.

பிரம்மாண்டமான வேல் கம்பும், திரிசூலமும் ஏந்தி கம்பீரம் காட்டும் அய்யனார் கோயிலும், மேலக்குளமும், பல்லக்கும், மணல்வீடும், காகிதக் கூடை, களிமண் பொம்மைகளுமாய் நிறைந்திருந்த கிராமத்தில் தான் ஏழு வயது வரை கழிந்தது.

பிறகு தஞ்சாவூர் வாழ்க்கை.

அங்கேயும் பாரம்பரிய தஞ்சாவூர் தட்டு செய்யும் வீடுகளின் தாழ்வாரங்களுக்கு பஞ்சமில்லை.

பலூன்காரன் வராத தெருவில் பலூனைக் கண்டால் ஓடும் சிறுவனைப்போல் ஆர்வத்துடன் ஓடி ஓடி பார்த்து ரசித்திருக்கிறேன். எனக்கு இன்னதென்று புரிந்துகொள்ள முடியாத வயதில் கலையார்வம் முளைக்கத் தொடங்கிவிட்டது.

கரந்தையில் ராஜகோரி என்ற ஓர் இடம். அங்கே சுதை சிற்பங்கள் ஏராளம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் போய்வருவேன்.

பத்தாவது படிக்கும்போதே பனியனில் நம்பரும், படங்களும் வரைய ஆரம்பித்திருந்தேன். கல்லூரிகளிலிருந்தும்கூட சிறுவன் என்று பார்க்காமல் ஆர்டர் தருவார்கள்.

நாகை ஜூவியின் சைன் போர்டை பார்க்க சைக்கிள் எடுத்துக்கொண்டு சுற்றுவேன். தேர்தல் நேரங்களில் சின்னங்களை வரைய நேரம் போதாது.

இப்படி இளம்பிராய வாழ்வின் கணங்கள்தோறும் ஓவியமும், சிற்பமும், கலைகளும் மனதில் படைப்பு மனத்தை உருவாக்கத் தொடங்கின.

கம்யூனிசத் தோழர் நாகராஜன் மூலம் கிடைத்த அறிமுகத்தில் ஓவியக் கல்லூரியில் சேர்ந்தேன். அந்த ஐந்து வருடப் படிப்புதான் வெறும் ஆர்வத்தை மட்டுமே கொண்டிருந்த என்னை ஒரு தேர்ந்தவனாக, நுட்பம் தெரிந்தவனாக மாற்றியது.

முதலில் போர்ட்ரைட், லேன்ட்ஸ்கேப் தீவிர கவனத்துடன் ஸ்டடி செய்து வரைந்தேன். அந்தப் பயிற்சிதான் இன்று சில மணித் துளிகளில் அவற்றை செய்ய காரணமாக இருக்கிறது.

நான் பெரியார் படங்களை மேடையில் வரையும்போது இசையின் வேகத்திற்குத் தகுந்தாற்போல என் தூரிகையின் வீச்சைப் பார்க்கலாம்.

கம்போசிசன், ஸ்டில் லைஃப்பிலும் கவனம் செலுத்தினேன். கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது, தஞ்சை பெரிய கோயிலுக்குள் மோனலிசா வருவது போல ஓர் ஓவியத்தை வரைந்தேன்.

அதற்கு ஆந்திர சித்ரகலா நிகேதன் முதல் பரிசு கிடைத்தது. புராதன சிற்பங்கள்தான் எனக்குள் ஆயிரமாயிரம் புனைவுகளை கட்டி எழுப்புகின்றன. அதனால்தான் ஓவியங்களில் பேண்டஸியை தூவுகிறேன்.

அதேபோல தமிழ் அழகியலின் கூறுகள் நிறைந்த நாட்டுப்புறக் கலையின் பாதிப்பையும் எனது ஓவியங்களில் காணமுடியும்.

‘பொய்க்கால்’ குதிரையாட்டத்தின் ஞாபகப் பதிவிலிருந்து எடுத்து குதிரை ஓவியங்களைப் படைத்தேன்.

அந்தக் குதிரைகள் ஒன்றிலிருந்து மற்றொன்றாக கிளைத்து, எனது வாழ்வின் அனைத்துவிதமான உணர்வுகளையும், அனுபவங்களையும் உள்வாங்கியதாக உருமாறின.

1985ல் முதல் தனிநபர் ஓவியக்காட்சி வைத்தேன். குடந்தை கல்லூரி வரலாற்றில் முதன்முதலில் கண்காட்சி வைத்த முதல் நபர் நான்தான். அந்த நேரத்தில் ஈழப் பிரச்சினை கொழுந்துவிட்டெரிந்தது.

தஞ்சை மருத்துவக் கல்லூரியில் நடந்த ஓவியப் போட்டிக்கு ஈழத்தமிழ்ப் பெண் வயிற்றிலிருந்து தொப்புள் கொடியோடு குழந்தையை சிங்கள இனவெறியர் தூக்கி எறிவது போன்ற ஓவியத்தை வரைந்து அனுப்பினேன். பரிசு கிடைத்தது.

எனக்குப் பிறகு பலரும் சமூகப் பிரச்சினைகளை கையில் எடுத்துக்கொண்டார்கள்.

தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நான்காண்டுகள் பணிபுரிந்த காலம் வளமையானது.

திருக்குறள் கையடக்கப் பதிப்பு, அறிவியல், வாழ்வியல், களஞ்சியங்கள் 16 தொகுதிகளில் ஓவியராக வேலை பார்த்த அனுபவம் மிக உயர்வானது.

து.முருகேசன், மு.ராமசாமி, ராமானுஜம் போன்றோரின் ஆய்வுகளுக்காக பொய்க்கால் குதிரை, காவடியாட்டம் போன்றவற்றின் அடவுகளை, அசைவுகளை பலநூறு படங்களாக படைத்துத் தந்தேன்.

நடனக் கலைஞர்களை அழைத்து வந்து ஆடச் சொல்லி ஓவியங்கள் செய்தோம். நவீனங்களின் உச்சிக்குச் சென்றாலும் என் கலையின் ஆணிவேர் நம் மரபின் பழைமையில்தான் வேரூன்றியுள்ளது.

சொந்த ஊரை விட்டுப் பிரிந்து வேலை நிமித்தமாக சென்னை வந்தபோது, நகரத்தோடு இணக்கமாக செல்ல முடியவில்லை.

பரபரப்பு… வெயில்… அந்நியத்தனம், மொழி என சகலமும் என்னை நிம்மதியிழக்க வைத்தன. அந்த மனநிலையில் ஓவியங்களைப் படைக்க உட்காரும்போது ஆக்ரோசமான உணர்ச்சிகள்தான் முட்டிமோதும்.

வாழ்வின் எந்தச் சூழலையும் எனது படைப்புகளில் திட்டமிடாமலேயே இணைத்துப் பார்ப்பது என் இயல்பாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை பல புதிய உத்திகளை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

அவை நமக்கானதாக மாறும் முன்பே அவர்களுக்கானதாக மாற்றிக்கொள்ளும் அபாயமும் இங்கே நிகழ்கிறது.

கமல்ஹாசனுடன் ‘அன்பே சிவம்’ படத்தில் பணிபுரிந்த அனுபவம் வேறொரு புதிய தளத்தினை அறிமுகம் செய்தது.

தற்போது மொகஞ்சதாரோ, ஹரப்பாவில் கிடைத்த கலை வடிவங்களின் பாதிப்பில் ஓவியங்கள் செய்கிறேன்.

எதையும் சாதித்தது போல தோன்றவில்லை. காலத்தின் தூரிகையில் எந்த மீடியம் பேசப்படுகிறதோ அது கலைஞனைப் பாதிக்காமல் இருக்க முடியாது.

அப்படித்தான் நானும் பாதிக்கப்படுகிறேன்.

பா.மகிழ்மதி

   

You might also like