நம்நாடு ஏடு (08.12.1956) ‘டாக்டர் அம்பேத்கர்’ என்று தலைப்பிட்டுச் சிறப்பான ஒரு தலையங்கம் எழுதியிருந்தது. அந்தத் தலையங்கம் வருமாறு:
“டாக்டர் அம்பேத்கர் மறைவு, தாழ்த்தப்பட்டும் ஒதுக்கப்பட்டும் கிடக்கும் கோடிக்கணக்கான மக்களை மட்டுமே கொடுந்துன்பத்திலாழ்த்தக் கூடிய சோகச் செய்தியாக இருக்கவில்லை. பிறப்பில் உயர்வு, தாழ்வு கற்பிக்கும் ஆணவப் போக்கை எதிர்த்து வரும் அனைவருக்கும் நெஞ்சைப் புண்படுத்தும் செய்தியாகும்.
பிறப்பினால் தாழ்ந்தவன் எனக் கூறப்படுவதனால் இழவேது, இன்னல்தான் ஏது என வாதிடும் சாதித் திமிர்கொண்டோர் இன்று உளர்.
அப்பெரும் குணவான்களால், டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சேவையில் மறைந்து கிடக்கும் உண்மையை உணர்ந்து கொள்வது இயலாததாகும்.
சாதிப் பாகுபாடு உள்ளவரை தீண்டாதார் எனப்படுவோர் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்பது மறைந்த அண்ணலாரின் உள்ளக் கிடக்கையாகும்.
அது மிகைப்படுத்திக் கூறப்படுகிறது எனக் கோபப்பட்டோர் பல்லோர். அக்கருத்தை எதிர்த்துப் போரிட்டவர் பலர்.
ஆனால், அவருடைய உள்ளக் கிடக்கையின் உண்மை இன்று தீண்டாதார் எனப்படுவோரின் துன்பம் துடைக்க எடுத்துக் கொள்ளப்படும் நடவடிக்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் மெய்ப்பிக்கப்பட்டு வருவதை நாம் அனைவரும் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.
தம் மாணவப் பருவம் முதற்கொண்டே, தாம் பிறந்த குடியின் தலைமீது தொன்று தொட்டுச் சுமத்தப்பட்டுள்ள தீமையை வேருடன் கிள்ளியெறிவதில் கருத்துச் செலுத்தலானார்.
தமது புரட்சிப் பணிக்குத் தம்மக்களைத் திரட்டுவதில் கணிசமான வெற்றியும் பெற்றார். தமது போக்கில் அவர் முழு வெற்றி பெறத் தவறிவிட்டார் எனக் கருதிக் கொண்டிருக்கும் அவர் எதிர்ப்பாளர்கள்கூட, தீண்டாமை குறித்துத் தாங்கள் கொண்டிருந்த கருத்து, அவருடைய தீவிர உழைப்பால் எந்த அளவு மாறிவந்திருக்கிறது என்ற உண்மையை ஒப்ப மறுப்பது கிடையாது.
உலக உத்தமர் காந்தியார், தீண்டப்படாத பழங்குடி மக்களுக்குத் தரப்பட்டிருந்த தனித் தொகுதி முறையை எதிர்த்து உண்ணா நோன்பு மேற்கொண்டார்.
கூட்டுத் தேர்தல் முறையை ஏற்க முன்வந்ததன் மூலம் உத்தமரின் உயிரை மீட்டுத் தந்த புகழை டாக்டர் பறித்துக்கொண்டு இருக்கிறார்.
தொடக்க முதற்கொண்டே காங்கிரஸ் கட்சியுடன், அவர் ஒவ்வொரு துறையிலும் பிணங்கியே வந்திருக்கிறார். அப்படி இருந்தாலும் இந்தியத் துணைக் கண்டம் சுதந்திரம் பெற்ற பிறகு, அரசியல் சட்டத்தை ஆக்குவதில் அவருடைய ஒத்துழைப்பைக் காங்கிரசுத் தலைமை கோரியபொழுது, அவர் தயக்கம் ஏதும் காட்டாது, தமது ஒத்துழைப்பை அளித்தார். அதன் விளைவுதான் இந்திய அரசியல் சட்டம்.
அவர் நேரு பண்டிதரின் முதல் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்து உருவாக்கிய இந்து தொகுப்பு மசோதா, காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்குள்ளாகவே பெரும் எதிர்ப்பைக் கிளப்புவதற்குக் காரணமாக அமைந்தது.
இருந்தாலும், அம்மசோதா சிற்சில உருமாற்றங்களுடன், பல துண்டுகளாக்கப்பட்டு இன்று சட்டமாக்கப்பட்டு வருகிறது. அரசியல் சட்டத்தை உருவாக்கிய முழுப் புகழுக்கும் உரியவர் அவர்தான். என்றாலும், ‘அதைத் தீயிட்டுக் கொளுத்துவேன்’ என்று முதல் முதலாகக் கூறியவரும் அவர்தான் என்பதை மறப்பதற்கில்லை.
அவர் பொருள், நூல், சட்டம், சமூக இயல் ஆகிய அருங்கலைகளைக் கற்றுத் தெளிந்தவர்.
விவாதத் திறமை மிக்கு உடையவர். சிறந்த நூலாசிரியர். அவர் எழுதிய நூல்களில், ‘பாகிஸ்தான் சிந்தனைகள்’ என்ற நூலும், ‘காந்தியாரும் காங்கிரசும் தீண்டப்படாத மக்களுக்குச் சாதித்துள்ளது என்ன?’ என்ற நூலும், ‘சூத்திரர்கள் யார்?’ என்ற நூலும் என்றென்றும் டாக்டரின் பெரும் புலமையையும் எழுத்துத் திறமையையும் எடுத்துக் காட்டிக் கொண்டிருப்பவையாகும்.
அவர் மிகுதியும் சிறந்த நூற்களைப் படிப்பதில் விருப்பமுடையவர் அதன் பலனாக, சொந்தத்தில் ஒரு நூல் நிலையத்தையே ஏற்படுத்திக்கொண்டார். இரண்டு தினங்களுக்கு முன், இரண்டு இலட்சம் பழங்குடி மக்களுடன் நாகபுரியில் புத்த நெறி தழுவியதை, இதற்குள் எவரும் மறந்திருக்க முடியாது.
அதே நேரத்தில் அனைத்திந்திய ரீதியில் ஒரு அரசியல் கட்சி பற்றி அறிவித்திருந்ததும் மறக்கத்தக்கதன்று. தாம் அறிவித்திருந்த கட்சிக்கு, ‘உரிமை – சமத்துவம் சகோதரத்துவம்’ என்ற மூன்று இலட்சியங்களை அடிப்படைகளாகக் குறிப்பிட்டிருந்தார்.
அம்மூன்று இலட்சியங்களையும் தமது கட்சியின் குறிக்கோள்களாகக் கொண்டது சிந்திக்கத்தக்கதாகும்.
டாக்டர் அம்பேத்கரின் மறைவு குறிப்பிட்ட ஒரு சாராருக்கு நஷ்டத்தைத் தந்திருக்கிறது எனக் கூறுவதைவிட மனித அறநெறிக்கே ஈடுசெய்ய முடியாத நஷ்டத்தைக் கொடுத்திருக்கிறது எனக்கூறுவதே பொருந்தக் கூடியதாகும். அவர் பிரிவால் வருந்திக் கிடக்கும் அனைவருடனும் நாமும் பங்கு கொள்ளுகிறோம்.”
- க.திருநாவுக்கரசு எழுதிய திமுக வரலாறு நூலிலிருந்து