இறை நம்பிக்கை கொண்ட மக்கள்!

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் முக்கூடலுக்கு மேற்கே நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பனையன்குறிச்சி என்ற சிற்றூர்.

ஊருக்கு வடக்கே பேப்பாறை (பேய்பாறை) ஆறு ஓடுகிறது. அந்தக் காலத்தில் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படவில்லை. ஆற்றில் வெள்ளம் வரும் காலத்தில் பனையன்குறிச்சிக்கு அணைந்த நாடார்பட்டி வழியாகச் செல்ல முடியாது.

தெற்கே நாலுமைல் சுற்றி பாப்பாக்குடி வழியாகத்தான் செல்ல முடியும். பனையன் குறிச்சியில் இன்றைக்கும் சுமார் ஐநூறு தலைக்கட்டுக் குடும்பங்கள்தான் இருக்கின்றன.

பீடி சுற்றுதலும், விவசாயமும்தான் இங்கு பிரதானத் தொழிலாக உள்ளன. இந்த ஊரில் இந்து நாடார்கள் மட்டுமே பெருவாரியாக வாழ்கின்றார்கள். மற்றபடி குயவர், ஆசாரி, தலித்துகள், வண்ணான், நாவிதன் என்று சுமார் பத்து குடித்தனங்கள் மாற்று ஜாதியினர் வாழ்கின்றனர்.

இன்றைய தேதிக்கு ஒரே ஒரு முஸ்லிம் குடியிருப்பு மட்டும் அந்த ஊரில் இருக்கிறது. சுமார் ஐம்பது ஆண்டுகால வரலாற்றில் ஒரே ஒரு முஸ்லிம் குடும்பம் மட்டும் அந்த ஊரில் இருந்திருக்கிறது.

ஊரைச் சுற்றி நான்கு திசைகளிலும் பார்த்தால் சுமார் பத்து மைல் சுற்றளவிற்கு இன்றும் எந்த ஊரிலும் ஒரு முஸ்லிம் குடியிருப்பு கூட இல்லை. ஆனால், ஊரின் தென்பகுதியில் ஒரு அழகான தர்ஹா இன்று நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறது.

இந்தச் செய்தி இந்தக் காலகட்டத்தில் எனக்கு அபூர்வமாகப்பட்டது. மத நல்லிணக்கத்திற்குச் சான்றாக திகழ்கின்ற பொட்டல்புதூர் மைதீன் ஆண்டவர் தர்ஹா இங்கிருந்து பத்து மைல் தூரத்தில் இருக்கிறது.

பனையன்குறிச்சி என்ற குக்கிராமத்திற்குச் சென்று அந்தத் தர்ஹாவைப் பற்றி விசாரித்தேன். அந்த ஊரைச் சேர்ந்த சிவனைந்த பெருமாள் என்ற பெரியவர் கூறியதை இனி பதிவு செய்கிறேன்.

“ஐயா, எனக்கு இன்றைய தேதிக்கு எண்பது வயசுக்கு மேல் ஆகுது. நான் சின்னப் பிள்ளையா இருக்கிறபோதே இந்த இடத்துல இந்தப் பள்ளிவாசல் இருக்கு. (தர்ஹாவைத்தான் அவர் பள்ளிவாசல் என்று குறிப்பிடுகிறார்). அந்தக் காலத்துல இந்தப் பள்ளிவாசலின், ஓரத்தில் ஒரு ஓலைப்புரை (சிறிய ஓலைக்குடிசை) இருந்தது.

அதில் வயதான ஒரு பெரியம்மா குடியிருந்தார். அந்தம்மா எப்பவும் தலையில் வெள்ளைச் சீலை போட்டுக்கிட்டு எதையோ முணுமுணுத்து நமக்குத் தெரியாத பாஷையில ஓதிக்கிட்டே இருக்கும். அந்தம்மாவுக்கு அப்பமே, எழுவது வயசுக்கு மேல் இருக்கும்.

இந்தப் பள்ளிவாசலைத் தூத்துப் பெருக்கி சுத்தமா வச்சிக்கிட்டு, பள்ளிவாசலுக்கு விளக்கும் போட்டுக் கிட்டு அந்த ஓலைப்புரையிலேயே குடியிருந்தாங்க. இந்த ஊர்க்காரங்க அந்த அம்மாவுக்கு வேண்டிய உதவிகளைச் செஞ்சாங்க.

அந்தம்மாவோட உண்மையான பேரு என்னன்னு எனக்குத் தெரியாது. ஆனால் அந்தம்மா எப்பப் பார்த்தாலும் யா- அல்லா; யா….அல்லான்னு” சொல்லிக்கிட்டே இருக்கும். அதனால் அந்தம்மாவை நாங்க, ‘அல்லாம்மா’ என்றுதான் கூப்பிடுவோம்.

அந்தம்மாவும் அப்படி கூப்பிட்டால்தான் என்னன்னு கேட்கும். மற்றபடி, “என் பெயர் இன்துல்லா- ஏன் என்னை இப்படிக் கூப்பிடுகிறீர்கள்?” என்று அந்தம்மா கேட்டது கிடையாது.

அதனால், இந்த ஊர் மக்கள் அந்தப் பாட்டி அம்மாவை, ‘அல்லாம்மா’ என்றே அழைத்தார்கள். இந்த ஊர்ல இன்றைய தேதிக்கு ஒரே ஒரு முஸ்லிம் வீடு மட்டும் இருக்கு.

ஆனால் நாங்கதான் இந்தப் பள்ளிவாசலைக் காபந்து பண்ணிக்கிட்டு இருக்கோம். அந்தக் காலத்துல இருந்து நாங்க, இந்தப் பள்ளிவாசலையும் ஒரு புண்ணிய ஸ்தலமாத்தான் மதிச்சி வச்சிருக்கோம்.

நான் சின்னப் பிள்ளையாக இருக்கும்போதே, ஊர்ல யார் வீட்டுல என்ன நல்ல காரியம் நடந்தாலும், இந்தப் பள்ளிவாசலுக்கு வந்து வணங்கிட்டு பள்ளிவாசலின் தலைமாட்டில் இருக்கிற உண்டியலில் காணிக்கை போட்டுட்டுத்தான் போவோம்.

அந்தக் காலத்திலேயே இந்தப் பள்ளிவாசலை காரைக்கட்டால் கட்டி இருக்கிறார்கள். இந்தப் பள்ளிவாசலுக்கு இரண்டு மினராக்கள் இருக்கின்றன. நாங்கள் வெளியூர்க்காரர்களுக்கு இந்த மினராக்களைத்தான் எங்கள் ஊருக்கு வர அடையாளமாகச் சொல்வோம்.

இந்த ஊரில் யார் நெல் அறுவடை செய்தாலும், அறுவடையான நெல்லில் நிறை நாழி நெல்லை இந்தப் பள்ளிவாசல் முற்றத்தில் கொண்டுவந்து கொட்டிவிடுவோம். என்ன மகசூல் விளைந்தாலும் முதல் மகசூலின் ஒரு பகுதியை இந்தப் பள்ளிவாசல் தூணில் கொண்டுவந்து கட்டி விடுவோம்.

இந்தப் பள்ளிவாசலுக்குள் எரியும் குத்துவிளக்கிற்கு மக்கள் எண்ணெய் வாங்கிக் கொடுப்பார்கள். ஊதுபத்தியும் ஒரு கட்டு வாங்கிக் கொடுப்பார்கள். எங்கள் ஊர் பெண் பிள்ளையை கெட்டிக் கொடுக்கப் பெண் அழைத்துப் போகும்போதும், புதுப்பெண் குடும்பத்தோடு இந்தப் பள்ளிவாசலுக்கு வந்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு, கையில் இருக்கும் காசை, பள்ளிவாசல் உண்டியலில் போட்டுவிட்டுத்தான் போவார்கள்.

இந்தப் பள்ளிவாசல் இருப்பதால் எங்கள் ஊர் சுபிச்சமாக இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். அதனால், இந்தப் பள்ளிவாசலுக்கு எந்தக் கேடும் வராமல், நாங்கள் பாதுகாத்தும் வருகிறோம்.

சாதி, மதம் என்று பேதங்கள் ஒருபுறம் இருந்தாலும், இந்தப் பள்ளிவாசலையும் நாங்கள் ஒரு புனிதச் சின்னமாகத்தான் நினைக்கின்றோம்.

யாரோ ஒரு முதியவர் ரொம்ப காலத்திற்கு முந்தி இந்த இடத்திற்கு வந்ததாகவும், அவர் அபூர்வ சக்தி வாய்ந்தவராகத் திகழ்ந்ததாகவும் பேப்பாறை ஆற்றில் ஒருநாள் அதிகமாக வெள்ளம் வந்து ஊரை வெள்ளம் அடித்துச் சென்றுவிடும் நிலை இருந்ததாகவும் இங்கு வந்திருந்த பெரியவரின் அபூர்வசக்தியால் பெருகி வந்த வெள்ளம் கட்டுக்குள் நின்றதாகவும் அதனால் அந்தப் பெரியவரின் வேண்டுகோளின்படி சிங்கம்பட்டி ஜமீன்தார் இடத்தில் பள்ளிவாசல் கட்டிக் கொடுத்ததாகவும் நான் சிறுபையனாக இருந்தபோது தாத்தா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்’ என்று கூறினார் தகவலாளர் சிவனைந்த பெருமாள்.

மதத்தின் பெயரால் சண்டை சச்சரவுகள் நடந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் முஸ்லிம்களின் குடியிருப்புகள் இல்லாத நிலையில் மாற்றுச் சமுதாயத்தினர் மட்டும் பெரும்பான்மையாக வாழும் இந்த ஊரில் ஒரு ‘தர்ஹா’ தலைநிமிர்ந்து நிற்பது, நமது சமயப் பொறைக்கு சான்றாதாரமாகத் திகழ்கிறது.

You might also like