– வரலாறு படைத்த கேடான்ஜி பிரவுன் ஜாக்சன்
அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ஸ்ரீபன் பிரெயர் ஓய்வுபெறுவதாக கடந்த ஜனவரியில் அறிவித்தார்.
இதையடுத்து காலியாகும் இடத்துக்கு கருப்பினப் பெண்ணை நீதிபதியாக நியமிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி பூண்டிருந்தார்.
அதன்படி, நீதிபதி கேடான்ஜி பிரவுன் ஜாக்சனை அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக கடந்த பிப்ரவரி 25-ம் தேதி அதிபர் ஜோ பைடன் தேர்வு செய்தார்.
அமெரிக்க செனட் சபை அங்கீகாரத்திற்காக இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் நீதிபதி ஜாக்சனை ஆதரித்து 53 வாக்குகளும் எதிர்த்து 47 வாக்குகளும் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, கறுப்பினத்தைச் சேர்ந்த கேடான்ஜி பிரவுன் ஜாக்சனை நியமிக்க அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை ஒப்புதல் அளித்தது.
இதன்மூலம் அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் முதல் கருப்பினப் பெண் நீதிபதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கேடான்ஜி பிரவுன் ஜாக்சன்.
இவருக்கு முன்பாக இரண்டு கருப்பின ஆண்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி பதவி வாழ்நாள் நியமனமாகும்.
தற்போது தலைநகர் வாஷிங்டனில் உள்ள கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக உள்ள கேடான்ஜி பிரவுன் ஜாக்சன், அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் 6-வது பெண் நீதிபதியாக இருப்பார்.
அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் 233 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை 5 பெண் நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,
“இது அமெரிக்க வரலாற்றில் முக்கிய தருணம். அமெரிக்காவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் விதமாக உச்சநீதிமன்றத்திலும் மற்றொரு மைல்கல் எட்டப்பட்டுள்ளது.
நீதிபதி ஜாக்சன் சிறந்த நீதியரசராக விளங்குவார். இந்த மகிழ்ச்சியான தருணத்தை அவருடன் பகிர்ந்துகொள்வதில் பெருமை கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் பொதுப் பாதுகாவலராகப் பணியாற்றிய ஒரே நீதிபதி இவர்தான் என்று கூறப்படுகிறது.