நூல் வாசிப்பு:
தமிழில் ஹெர் ஸ்டோரிஸ் என்ற புதிய பதிப்பகம் உருவாகியுள்ளது. பெண்களின் குரல்கள் பிரதிபலிக்கும் படைப்புகளை வெளியிடத் தொடங்கியுள்ளது.
சமீபத்தில் அவர்கள் வெளியிட்ட நூல்களில் ஒன்றுதான் ‘தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும்’. எழுதியவர் சாந்தி சண்முகம்.
இதுவரை துபாய் பற்றிப் பல நூல்கள் எழுதப்பட்டிருந்தாலும் எளிய நடையும், அதில் கலந்து ஆங்காங்கே தூவப்பட்டுள்ள நகைச்சுவையும் இந்த நூலை வேறுபடுத்திக் காட்டுவதாக அணிந்துரையில் ஆசிர் மீரான் சுட்டிக்காட்டி நூலாசிரியரைப் பாராட்டியுள்ளார்.
“துபாயைப் பற்றிய பொதுவான மதிப்பீடுகளைத் தமிழகத்திலிருந்து வரக்கூடிய ஒரு சாதாரண பெண் எவ்வாறு எதிர்கொள்கிறாள் என்பதைப் பற்றிய அலசல் மிக இலகுவான நடையில் வாசிப்பவர்களுக்கு எந்தவிதமான சலிப்பையும் தந்துவிடாமல் எழுதப்பட்டிருப்பதுதான் இந்நூலின் சிறப்பு.
துபாயைப் பற்றிய பெருமிதங்களை மட்டுமே பேசாமல், அதீதமான கற்பிதங்கள் எதையும் கலந்துவிடாமல் துபாய் நகர வாழ்வில் தான் கண்டு அனுபவித்தவற்றை அது குறித்த நேர்மையோடு பதிவு செய்திருக்கிறார்.
ஒரு சுற்றுலாப் பயணியாக எந்தெந்த இடங்களைப் பார்க்கவேண்டும் என்று சொல்லும்போது கூடவே அது குறித்த முக்கியத் தகவல்களை முன்னிறுத்துகிறார் சாந்தி சண்முகம்” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
எந்த இடத்திலும் சலிப்புத் தட்டிவிடக்கூடாது என்பதற்காகவே தனது நடையில் புதிய ஒரு உத்தியைக் கையாண்டு லேசான நகைச்சுவையோடு நூலைக் கடைசிவரை கொண்டு சென்றதுதான் நூலாசிரியர் சாந்தியின் வெற்றியாகக் கருதுவதாக ஆசிப் மீரான் நெகிழ்ந்து எழுதுகிறார்.
திருமணத்திற்குப் பிறகு துபாய் மண் என்னைத் தத்தெடுத்துக் கொண்டதால், என் தமிழ் ஆர்வத்தைத் தூசி தட்டி எழுப்ப வேண்டியதாகப் போய்விட்டது.
வாசிப்புப் பழக்கத்தோடு நிறுத்தாமல், நாமும் எழுதினால் என்ன என்ற என் விபரீத ஆசையின் விளைவே இந்த புத்தகம் என்று தன்னடக்கத்துடன் பேசுகிறார் சாந்தி சண்முகம்.
வெளிநாட்டு வாழ்க்கை என்பது ஆணைப் பொறுத்தவரையில் பணம் ஈட்டுவதாக அமைந்து விடுகிறது. ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு அதுபோல் அமைவதில்லை.
குறிப்பாக வளைகுடா பகுதிகளுக்குச் செல்லும் பெண்கள் இல்லத்தரசிகளாக நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடப்பதாகவே இருக்கிறது.
பல அனுபவங்களைப் பகடி பேசிக்கொண்டே வந்தபோதும், சில பகுதிகள் இதுபோன்ற பெண்ணியச் சிந்தனைகளையும் விடாமல் அங்கங்கே தூவியுள்ளதால் வளைகுடாவில் வசிக்கும் ஆண்களையும் ஒரு கணம் யோசிக்க வைக்கும் என்பது திண்ணம்.
வெகு இயல்பாக ஆரம்பித்த இந்தக் கட்டுரைத் தொடருக்கும் வளைகுடா நண்பர்களும் இந்தியாவில் வசிக்கும் நட்புகளும் தொடர்ந்து கொடுத்துவந்த ஆதரவின் விளைவாக உங்களையும் விட்டுவிடக்கூடாது என்பதற்காக இதைப் புத்தகமாகத் தொகுத்து விட்டேன் என்கிறார் சாந்தி சண்முகம்.
ஹலோ துபாயா என்ற வடிவேலுவின் நகைச்சுவை கேள்வியே முதல் தலைப்பாகத் தொடங்கி, சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா என 15 கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
இணையத்தில் தொடராக வந்து பலரின் கவனத்தை ஈர்த்த கட்டுரைகள் நூலாக உருக்கொண்டுள்ளது. துபாய் செல்ல விரும்பும் அனைவரும் படிக்கவேண்டிய நூல்.
தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும்:
சாந்தி சண்முகம்
வெளியீடு: ஹெர் ஸ்டோரிஸ், சென்னை.
தொடர்புக்கு: 75500 98666 / விலை ரூ. 150
பா. மகிழ்மதி