முட்டாள்தனத்தில் என்ன அவமானம்?

உடலில் இருக்கும் பாகங்களிலேயே வலது, இடது என்று பிரித்து அவற்றில் எது உயர்ந்தது எது தாழ்ந்தது என்று பார்க்கும் வழக்கம் வெகுகாலமாக நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது.

இந்த பார்வையே ஒருவரை முட்டாளாக்கி நம்மை அறிவாளியாகவும் புத்திசாலியாகவும் காட்டிக் கொள்வதில் நிறைந்திருக்கிறது.

தினம் தினம் இதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கி அல்லது அதனைக் கண்டறிந்து கேலி, கிண்டல் செய்வோர் உண்டு.

பின்விளைவுகளில் ரவுத்திரம் கலந்துவிடுமோ என்று பயப்படுபவர்கள் பட்டும்படாமலும் மற்றவர்கள் மீது முட்டாள்தனத்தைப் பூசிவிட முயலுவர்.

இப்படிப்பட்டவர்களுக்காகவே தனித்த நாளொன்று முற்காலத்தில் வாய்த்திருந்தது. ஏப்ரல் 1 ஆம் தேதியே அத்தினம்.

உலகம் முழுக்க இதனை ‘முட்டாள்கள் தினம்’ என்கின்றனர். 80’ஸ் கிட்ஸிடம் ‘ஏப்ரல் ஃபூல்’ என்று சொன்னால், ‘ஆவ்’ என்று விழிகளை உருட்டுவார்கள்.

முதுகில் ‘சீல்’ வைத்த அனுபவம்!

பள்ளி நாட்களில் ஏப்ரல் 1 என்று வரும் என்று மார்ச் பிறக்கும்போதே காலண்டரை புரட்டிப் பார்த்ததுண்டு. வேறோன்றுமில்லை, என்றைக்கு அத்தேதி வருகிறதென்று காத்திருந்து அதனை எதிர்கொள்ளத் தயாராவதுதான் நோக்கம்.

ஆனாலும், மார்ச் 31 அன்று அந்த விழிப்புணர்வு சுத்தமாக மங்கிப் போகும்.

அடுத்தநாள் காலையில் பள்ளிக்குப் போனால், ‘டேய் பின்னால டீச்சர்டா’ என்றோ, ‘அந்த பொண்ணு உன்னை கூப்பிட்டாடா’ என்றோ சொன்னவுடன் திரும்பினால் போயோ போச்சு..!

நம்மிடம் பேசியது ஒருவர் என்றாலும், ‘ஏப்ரல் ஃபூல்’ என்று சொல்ல ஒரு கூட்டமே தயாராக இருக்கும்.

சைக்கிளில் செல்லும்போது ‘ஏலே வீல் சுத்துது’ என்று சொன்னதைக் கேட்டு, கீழே குனிந்து பார்த்த தலைமுறை ஒன்று உண்டு.

அவர்களை ‘முட்டாள்’ ஆக்கிப் பார்ப்பதில் ஆனந்தம் கண்டவர்களும், அவர்களால் முட்டாள் ஆக்கப்பட்டவர்களும் இன்று ஒருசேர அந்த நினைவுகளைப் புரட்டிப் பார்ப்பார்கள்.

உதட்டளவில் உருவாக்கும் புன்சிரிப்பைத் தவிர வேறெதையும் அந்நினைவுகள் உசுப்பாது.

பேனாவில் ‘இங்க்’ நிரப்பி வெள்ளைச்சட்டையை அணிந்தவனின் முதுகில் தெளிப்பதும், உருளைக்கிழங்கு கத்தரிக்காய் என்று விதவிதமான காய்கறிகளை வண்டி மையில் தோய்த்து முதுகில் ‘சீல்’ அடிப்பதும் மாபெரும் சாகசங்கள். அது சம்பந்தப்பட்ட மாணவனுக்குத் தெரியாவிட்டால் இன்னும் ஆனந்தம்.

இந்த இடத்தில் வண்டி மை என்பது மாட்டுவண்டியின் கீல் பகுதியில் அச்சாணியைச் சுற்றியிருக்கும் உயவுப் பொருள் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

உடலில் அரிப்பெடுக்கும் செந்தட்டி இழையைத் தடவுவது, காக்கா முட்டை எனும் ஒரு விதையைத் தரையில் தேய்த்து சூடானபின்னர் உடலில் வைத்து புண்ணாக்குவது என்று விதவிதமாக முட்டாளான, முட்டாள் ஆக்கிய அனுபவங்கள் அக்காலகட்டத்தில் பொதிந்திருக்கின்றன.

ஏப்ரல் ஃபூல் வரலாறு!

15-ம் நூற்றாண்டில், போப் அறிவிப்புக்குப் பிறகு மார்ச் இறுதி வாரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்த ஐரோப்பிய மக்கள் ஜனவரி 1-க்கு மாறினர்.

அதாவது, அதுவரை வழக்கத்தில் இருந்த ஜூலியன் காலண்டர் ஒழிக்கப்பட்டு கிரிகோரியன் காலண்டர் புழக்கத்தில் வந்தது.

இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து ஏப்ரல் 1-ம் தேதியன்று புத்தாண்டு கொண்டாடியவர்களை மற்றவர்கள் ‘முட்டாள்கள்’ என்றழைத்தனர். அவர்களை கிண்டலடிக்கும் விதமான பரிசுப்பொருட்களையும் அனுப்பி வைத்தனர்.

இப்படித்தான் ஏப்ரல் மாதத்தில் மற்றவர்களை ‘ஃபூல்’ ஆக்கும் வழக்கம் வந்ததாகச் சொல்கிறது வரலாறு. இது ஐரோப்பா வழியே உலகம் முழுக்கப் பரவிவிட்டது.

டச்சு நாட்டில் ஒரு மன்னனை விகடகவி ஒருவர் முட்டாள் ஆக்கியதைக் கொண்டாடும் வகையில் ‘ஏப்ரல் 1’ அனுசரிக்கப்படுகிறது.

எந்த நாடும் இந்நாளை விடுமுறையாக அறிவிக்கவில்லை, சைப்ரஸ் தவிர..

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை, காகிதத்தில் மீன் செய்து ஒருவரது முதுகில் ஒட்டுவதுதான் ‘ஏப்ரல் ஃபூல்’ கொண்டாட்டத்தின் அதிகபட்சம். இன்றோ, அதற்காகத் தனி செயலிகளே நம் மொபைலுக்குள் புகுந்துவிட்டன.

எதற்கு அவமானம்?!

சிறு வயதில் முட்டாள் ஆவதில் அல்லது ஆக்கப்படுவதில் இருந்த அவமானம் இப்போது சிரிப்பாகத் தோன்றுகிறது.

ஏனென்றால், ‘வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு’ என்ற சொலவடை புரிந்தபிறகு முட்டாள்தனம் அனைவருக்கும் பொதுவானது என்ற எண்ணம் ஒட்டிக்கொண்டது.

உண்மையில், எது முட்டாள்தனம் என்பதை காலம் கூட தீர்மானிக்க முடியாது. காலம் மாற மாற முட்டாள்தனம் கூட புத்திசாலித்தனமாக நோக்கப்படலாம்.

ஏனென்றால், உலகம் தட்டையானது என்று பெரும்பாலானவர்கள் சொன்னபோது ‘அது உருண்டையானது’ என்று சொன்னவர்கள் மீது ‘முட்டாள்கள்’ முத்திரை குத்தப்பட்டது.

இன்றும் நம்மில் பலர் சொல்லும் கருத்துகள், தகவல்கள், எண்ணங்களைக் கேட்டுவிட்டு ‘முட்டாள்தனம்’ என்று தோன்றலாம்.

அவர்களை நாம் அவமதிக்கலாம், புறக்கணிக்கலாம், அவர்களது முதுகுக்குப் பின்னே சிரித்து மகிழலாம் அல்லது முகத்திற்கு நேரே சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு பகடி செய்யலாம்.

அதாகப்பட்டது, அந்த கணத்தில் அது நமக்கு முட்டாள்தனமாகத் தோன்றுகிறது, அவ்வளவுதான்!

அதற்குப் பயந்துகொண்டு, முட்டாள்தனத்தைக் கண்டு கூனிக்குறுகவோ, பயந்து ஓடவோ தேவையில்லை.

உண்மையில் நம் தலைக்கு மேலே இருக்கும் அறிவாளி கிரீடம் தான், சுலபத்தில் எந்தவொன்றையும் ஏற்கவிடாமல் முட்களாக குத்திக் கொண்டிருக்கும்.

மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முட்டாளாக இருப்பதே ஆகச்சிறந்த தகுதி. இவ்விடத்தில், ’இந்த உலகில் மாற்றத்தை தவிர மாறாதது இல்லை’ என்ற சான்றோரின் வார்த்தை நினைவுக்கு வர வேண்டும்.

உண்மையைச் சொன்னால் தோல்வியில் இருந்து வெற்றிக்கு மெதுமெதுவாக நகர்வதைப் போல, நம் மீது படிந்த முட்டாள்தனமே அறிவுத்தளத்தின் அடிப்படை வேர் நோக்கி கூட்டிச் செல்கிறது.

முட்டாளாவதை அவமானம் என்று கருதி வெறுமனே இருந்தால், அப்படியொரு வாய்ப்பு கிடைக்காமல் போகும்.

அறியாமை என்பது இயல்பின் ஒரு பகுதி. அதனை இல்லாமலாக்க மறைப்பது உபாயமில்லை.

அது புரிந்துவிட்டால், முட்டாள் பட்டம் சூட்டப்படுவதை ஏற்பதில் எந்த தயக்கமுமில்லை.

அது மட்டுமல்ல, இன்றைய கார்பரேட் உலகில் எந்தவொரு தனிநபரும் ’நான் ஒருமுறை கூட முட்டாள் ஆகவே இல்லை’ என்று சொன்னால் அது பொய் என்று உடனடியாகச் சொல்லலாம். ஏனென்றால், அதுதான் அவ்வுலகின் ஆகப்பெரிய இலக்கு.

இப்போது சொல்லுங்கள், ஒரு நாள் மட்டும் ‘முட்டாள்’ ஆவதில் முட்டாள்களைக் கொண்டாடுவதில் என்ன வந்துவிடப் போகிறது!

– உதய் பாடகலிங்கம்

01.04.2022  12 : 30 P.M

You might also like