நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், அங்குள்ள பாராளுமன்றத்தில் மார்ச் 28-ல் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான வாக்கெடுப்பு ஏப்ரல் 3-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மொத்தமுள்ள 342 எம்.பி.க்களில், 172 பேர் ஆதரவு இருந்தால் தீர்மானம் நிறைவேறி விடும். அதைத் தொடர்ந்து, பதவியில் இருந்து இம்ரான் கான் விலக நேரிடும்.
ஏற்கனவே இம்ரான் கானுக்கு எதிராக கூட்டணிக் கட்சிகள் மற்றும் சொந்தக் கட்சி எம்.பி.-க்கள் போர்க் கொடித் தூக்கியுள்ளனர்.
இந்த நிலையில், இம்ரான் கட்சியுடன் கூட்டணியில் இருந்த எம்.க்யூ.எம் கட்சி இம்ரான் அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டது. எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக எம்.க்யூ.எம் கட்சி அறிவித்துள்ளது.
இதனால், இம்ரான் கட்சியின் பலம் 161 ஆகக் குறைந்தது. அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக உயர்ந்துள்ளது. ஏப்ரல் 3-ல் வாக்கெடுப்பு நடக்கும் சூழலில் இம்ரான் கட்சி பெரும்பான்மை இழந்துள்ளதால், இம்ரான் பதவி பறிப்போவது உறுதியாகியுள்ளது.
30.03.2022 12 : 30 P.M