நார்மன் வின்சென்ட் பீலின் நம்பிக்கை மொழிகள்:
நார்மன் வின்சென்ட் பீல் (மே 31, 1898 – டிசம்பர் 24, 1993) அமெரிக்க அமைச்சர் மற்றும் உலகப் புகழ்பெற்ற தன்னம்பிக்கை எழுத்தாளர்.
அவரது The Power of Positive Thinking என்ற நூல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இவரது நேர்மறை எண்ணம் குறித்த கருத்துகள் மனநல மருத்துவர்களால் விமர்சனம் செய்யப்பட்டவை. முன்னாள் அமெரிக்க அதிபர்கள் ரிச்சர்ட் நிக்சன், டோனால்டு டிரம்ப் ஆகியோரின் நண்பர்.
அவரது நம்பிக்கை மொழிகள்…
நிலவைக் குறி வையுங்கள். ஒருவேளை அது தவறினால், நீங்கள் நட்சத்திரங்களுக்கு நடுவிலாவது இறங்கிவிடலாம்.
மகிழ்ச்சிக்கான வழிகள்:
வெறுப்பில் இருந்து உங்கள் இதயத்தை தள்ளிவையுங்கள். கவலைகளில் இருந்து மனதை தள்ளிவையுங்கள். எளிமையாக வாழுங்கள். சிறு அளவில் எதிர்பாருங்கள். அதிகமாக கொடுங்கள்.
சுயநலத்தை மறந்துவிடுங்கள். மற்றவர்களைப் பற்றி யோசியுங்கள். ஒரு வாரம் மட்டும் இவற்றை முயற்சி செய்து பாருங்கள் ஆச்சரியமடைவீர்கள்.
உங்களை நம்புங்கள். உங்களுடைய திறமைகளின் மீது நம்பிக்கை வையுங்கள். பணிவில்லாத, ஆனால் உங்களுடைய வலிமை மீதான நம்பிக்கை வெற்றியையோ அல்லது மகிழ்ச்சியையோ தராது.
உங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ளுங்கள். உங்கள் உலகத்தை மாற்றுங்கள்.
வலிமையாக இருங்கள். உங்கள் மனத்தின் அமைதியைக் கெடுக்க எதையும் அனுமதிக்காதீர்கள்.
உங்களைச் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் உடல்நலத்தை, மகிழ்ச்சியை, வளரச்சியைப் பற்றிப் பேசுங்கள். உங்களிடம் ஏதோவொரு சிறப்பான விஷயம் இருக்கிறது என்று நண்பர்களை உணரவையுங்கள். சிறந்ததையே சிந்தியுங்கள்.
கடந்த காலத்தின் தவறுகளை மறந்துவிடுங்கள். எதிர்காலத்தின் சிறந்த சாதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். எல்லோருக்கும் ஒரு புன்னகையை அளியுங்கள்.
உங்களை மேம்படுத்திக்கொள்ள அதிக நேரத்தைச் செலவிடுங்கள். மற்றவர்களை விமர்சிப்பதற்கு நேரம் இல்லாமல் போய்விடும்.
உங்கள் மனம் எதைப் பற்றி நினைக்கிறதோ, நம்புகிறதோ இதயம் விரும்புகிறதோ அதையே நீங்கள் சாதிப்பீர்கள்.
அதிகாலையில் எழும்போது உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. ஒன்று மகிழ்ச்சி. இன்னொன்று மகிழ்ச்சியற்றது. நீங்கள் மகிழ்ச்சியையே தேர்ந்தெடுங்கள்.
இந்த நாளை, என் வாழ்க்கையை, என் நேசத்திற்குரியர்களை, என்னுடைய வேலையை இறைவனின் கரங்களில் சமர்ப்பிக்கிறேன். இறைவனின் கரங்களில் இருக்கும்போது தீங்கு ஏற்படாது. நன்மை மட்டுமே விளையும்.
எது நடந்தாலும், என்ன முடிவுகள் கிடைத்தாலும், நான் இறைவனின் கரங்களில் இருக்கும்போது நல்லதே நடக்கும்.
எதிர்பார்ப்பின் விதைகளை உங்கள் மனதில் தூவுங்கள். சிந்தனைகளை பயிரிடுங்கள். சாதனைகளை எதிர்பாருங்கள். உங்களை நீங்கள் நம்பத் தொடங்கும்போது அனைத்து தடைகளையும் பலவீனங்களையும் கடந்துபோகும் வலிமை பெறுவீர்கள்.
நேர்மறை எண்ணம் உடையவராக மாறுங்கள். நெருக்கடியான நேரங்களிலும்கூட உங்கள் பார்வையை உயர்த்துங்கள். சாத்தியங்களைப் பாருங்கள்.
எப்போதும் அவை இங்கேதான் இருக்கின்றன.
உங்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வாய்ப்புண்டு என்பதை நம்புங்கள்.
மிகப்பெரிய காரியங்களை அவரால் சாதிக்கமுடியும். பதில் கிடைக்கும் என்று நம்புங்கள். அது நிச்சயம் நடக்கும்.
உங்கள் மனத்தில் வெற்றிபெறும் புகைப்படத்தை உருவாக்குங்கள். விடாப்பிடியாக அந்தப் படத்தை வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் படம் மறைவதற்கு எப்போதும் இடம் கொடுக்காதீர்கள்.
அந்தப் படத்தை மேம்படுத்த உங்கள் மனம் ஆர்வமாக இருக்கும். உங்கள் கற்பனையில் தடைகளை கட்டி எழுப்ப வேண்டாம்.
விஷயங்கள் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதற்கான பதில் நீங்கள் வித்தியாசமானவராக ஆக வேண்டும்.
மற்றவர்களைப் பார்த்து பிரமிப்பு அடைய வேண்டாம். அவர்களை காப்பி செய்யவும் வேண்டாம். உங்களுக்கு நிகர் யாருமில்லை. நீங்கள்தான் உங்களுக்குத் திறமையானவர்.
நம்பிக்கையை உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தும்போது வலிமையும் அமைதியும் உங்கள் மனதுக்குள் வந்துவிடும்.
நம்முடைய மகிழ்ச்சி என்பது நம் மனத்தை எப்படி வளர்த்து வருகிறோம் என்பதை சார்ந்தது.
எனவே, மகிழ்ச்சியான சிந்தனையை தினமும் பயிற்சி செய்யுங்கள். இதயத்தில் உற்சாகம் வளருங்கள். மகிழ்ச்சியான பழக்கத்தை மேம்படுத்துங்கள்.
பிறகு பாருங்கள்… வாழ்க்கை ஒரு தொடர் விருந்தாக மாறும்.
தொகுப்பு: தான்யா
29.03.2022 12 : 30 P.M