காதலிப்போம் எந்நாளும்…!

– இலக்குவனார் திருவள்ளுவன்

ஒவ்வொரு நாளையும் நாம் அன்னையர் நாள், தந்தையர் நாள், முதியோர் நாள், குழந்தைகள் நாள் புற்றுநோய் ஒழிப்பு நாள், காதலர் நாள் என்பன போன்று கொண்டாடி வருகிறோம்.

நாம் குறிப்பிட்ட அந்தந்த நாள்களில் அந்த நாளுக்குரியவர்களை நினைக்க வேண்டும் என்று பொருள் இல்லை.

எல்லா நாளும்தான் போற்ற வேண்டும். எனினும் முதன்மை கொடுத்துச் சிறப்பிப்பதற்காக அந்த நாள், இந்த நாள் என்று சொல்கிறோம்.

அதுபோல் வந்ததுதான் பிப்பிரவரி 14 – காதலர் நாள்.

இப்பொழுது இதனைக் காதலர் வாரம் எனப் பின்வருமாறு கொண்டாடுகின்றனர்.

பிப்பிரவரி 07 – அலரிப்பூ (உரோசாப் பூ) நாள் (Rose Day); பிப்பிரவரி 08 – காதல் தெரிவிப்பு நாள் (Propose Day); பிப்பிரவரி 09 – தித்தி நாள் (Chocolate Day); பிப்பிரவரி 10 – கரடி பொம்மை நாள் (Teddy Day); பிப்பிரவரி 11 – உறுதிப்பாடு நாள் (Promise Day); பிப்பிரவரி 12 – கட்டியணை நாள் (Hug day); பிப்பிரவரி 13 – முத்த நாள் (Kiss Day); பிப்பிரவரி 14 – காதலர் நாள் (Valentine’s Day)

எல்லா நாளும் வணிகர்களால் பெரிதாக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டுப் பரவலாக்கப்படுகிறது. காதலர் நாளும் அப்படித்தான்.

எவ்வளவு விரைவில் காதலில் விழுந்து திருமணம் புரிகிறார்களோ அவ்வளவு விரைவில் பிரிந்தும் போகிறார்கள் என்பதுதான் இன்றைய அவலம்.

உண்மையான காதல் நிலைத்து நிற்கும். எனவேதான்,

காதல் செய்வீர், உலகத்தீரே!

அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்;

காதலினால் சாகாமலிருத்தல் கூடும் கவலைபோம்,

அதனாலே மரணம் பொய்யாம்

– என்றார் பாரதியார்.

முதுமையிலும் காதல் மறையாது. எனவேதான், மூதாட்டி குறித்து முதுமகன்

எது எனக்கின்பம் நல்கும்?

‘இருக்கின்றாள்’ என்ப தொன்றே! (குடும்ப விளக்கு)

என்பதாகப் பாவேந்தர் பாரதிதாசன் இளமை போனாலும் காதல் போகாது என்பதைக் கூறுகிறார்.

எனவே, இளைஞர்களே, மறுபாலினரால் ஈர்க்கப்பட்டு ஆரவாரமாகக் கிளர்ந்து எழாதீர். அடுத்தவர் வெற்றிக்கு உதவ வேண்டும், துன்பத்தில் பங்கேற்க வேண்டும், இன்பத்தில் திளைக்க வேண்டும் என உறுதி கொள்ளுங்கள்.

திருமணத்துடன் காதல் முடிந்து விட்டதாகக் கருதாதீர். கணவனை மனைவியும் மனைவியைக் கணவனும் காதலிப்பதைத் தொடருங்கள்.

“நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்” என்பதற்குக் காதலே அடிப்படையாக அமையட்டும். காதல் பாதையில் கவனமாகவும் அழுத்தமாகவும் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் காதல் பயணத்தை எளிமையாக்கும், இனிமையாக்கும், சிறப்பாக்கும் என்பதை உணருங்கள்.

உண்மையை உணர்ந்து காதல் செய்வீர்! கடிமணம் புரிவீர்!

தொடர்ந்து எந்நாளும் காதலிப்பீர்! இல்லறத்தை நல்லறமாக்குவீர்!

You might also like