தியாகி சத்தியமூர்த்தியின் நினைவைப் போற்றுவோம்!

நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கப் பாடுபட்டவர்களில் ஒருவரான, கைதியாகவே இருந்து உயிரை விட்ட சுதந்திரப் போராட்டத் தியாகி சத்தியமூர்த்தியின் 128-வது நினைவுநாள் இன்று (மார்ச் – 28).

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தைச் சேர்ந்தவர் சு.சத்திய மூர்த்தி. 1887 ஆகஸ்ட் 19-ம் தேதி பிறந்த இவர், புதுக்கோட்டை மன்னர் அரசு கல்லூரியிலும், சென்னை சட்டக் கல்லூரியிலும் மேற்படிப்பை முடித்தார். மாணவப் பருவத்திலேயே நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

1923-லும், 1930-லும் சென்னை மாநில சட்டப் பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1934-ல் டெல்லி மத்திய சட்டப் பேரவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939-ல் சென்னை மேயராக பணியாற்றியபோது சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக பூண்டி நீர்த்தேக்க திட்டத்தை கொண்டுவந்தார்.

காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்ட சத்தியமூர்த்தி, தடையை மீறி தேசியக் கொடி ஏற்றியது, அந்நிய துணிகள் விற்பனை செய்வதை எதிர்த்தது, தனிநபர் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு போன்ற நாட்டு விடுதலைக்கான பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதால் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார்.

இறுதியாக சிறைக் கைதியாக இருந்த சத்தியமூர்த்தி சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 1943-ல் இறந்தார்.

இப்படிப்பட்ட போராட்டத் தியாகி தீரர் சத்தியமூர்த்திக்கு மணிமண்டபம் அமைத்து அவரது பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தீரர் சத்தியமூர்த்திக்கு மணிமண்டபம் கட்டித் தரப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like