எஸ்.பி.பி.யின் நெகிழ்ச்சியான அனுபவம்
எம்.ஜி.ஆர். கணிப்பு என்றுமே தவறியதில்லை. அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள், பாடல்கள், நடிகர் – நடிகைகள், ஒளிப்பதிவாளர்கள், இயக்குநர்கள் என்று எதுவுமே சோடை போனதில்லை.
அவர் அடையாளம் காட்டிய அசாத்திய திறமையாளர்களில் மிகமிக முக்கியமானவர் எஸ்.பி.பாலசுப்ரமணியன்.
ஏற்கெனவே தமிழில் ஒன்றிரண்டு பாடல்கள் பாடியிருந்தும் பிரபலமாகாத நிலையில், ‘அடிமைப்பெண்’ படத்தில் அவர் பாடிய “ஆயிரம் நிலவே வா…” அவருக்கு செலிபிரிட்டி சிங்கர் என்ற அந்தஸ்த்தை கொடுத்தது.
ஒரு அறிமுக பாடகருக்கு அவ்வளவு பெரிய வாய்ப்பு எப்படி வந்தது என்பதைப் பற்றி இசைபட விளக்குகிறார் எஸ்.பி.பி.
“எம்.ஜி.ஆரின் ‘நீரும் நெருப்பும்’ படத்தில் டி.எம்.எஸ். அண்ணா பாடின ஒரு பாட்டை தெலுங்கு டப்பிங்கில் பாட எனக்கு சான்ஸ் கிடைத்தது. ஏவி.எம்.ஆர்.ஆர் தியேட்டரில் நானும் எல்.ஆர்.ஈஸ்வரியும் பாட ரிக்கார்டிங் நடந்து கொண்டிருந்தது.
அந்த காலத்தில் ஸ்டுடியோக்களில் ஏ.சி. கிடையாது. மிக்ஸர் ரூம் கதவு திறந்து தான் இருக்கும். அது வழியாக பாடல் வெளியே கேட்கும்.
பக்கத்து ஃப்ளோரில் படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆர். வெளியே மரத்தடியில் உட்கார்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது பாட்டு சத்தம் அவருக்கு கேட்டிருக்கிறது.
“நம்ம படப் பாட்டு தான். பாடுற குரல் புதுசா இருக்கே” என்று ஒரு ஆளைவிட்டு யாரு பாடுவது என்று பார்த்துவிட்டு வரச் சொல்லி அனுப்பி இருக்கிறார் எம்.ஜி.ஆர்.
அவரும் வந்து விசாரித்துவிட்டு, “யாரோ பாலசுப்ரமணியன்னு தெலுங்கு பையனாம். காலேஜ் ஸ்டூடண்ட்…” என்று தகவல் சொல்லி இருக்கிறார்.
இந்தச் சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்கு பின், ராமாவரம் தோட்டத்தில் ‘அடிமைப்பெண்’ படத்தின் பாடல் கம்போசிங் நடந்திருக்கிறது. அப்போது கே.வி.எம். மாமாவிடம் என்னைப் பற்றி எம்.ஜி.ஆர். விசாரிக்க, அவரும் நல்லபடியாகவே சொல்லி இருக்கிறார்.
“அப்படினா, இந்த பாட்டை அந்த பையனை பாட வைக்கலாமா?” என்று புரட்சித் தலைவர் கேட்க, மாமாவும் சரி என்று சொல்லி இருக்கிறார்.
ஒரு நாள் நானும் என் நண்பனும் தங்கி இருந்த அறைக்கு கப்பல் மாதிரி கார் ஒன்று வந்தது. அதில் எம்.ஜி.ஆரின் உதவியாளர் பத்மநாபன் வந்து, ‘சின்னவர்’ அழைச்சுட்டு வரச் சொன்னார் என்றார்.
“சின்னவர்னா யாரு?” என்று கேட்டேன்.
சிரிச்சுகிட்டே எம்.ஜி.ஆர். என்றதும், எனக்கு பதட்டமாகிவிட்டது.
காரில் ஏறிப்போனால் அங்கே கே.வி.எம். மாமா, தபலா மைக்கேல் அண்ணன், சுசீலாம்மா, கவிஞர் புலமைப்பித்தன் எல்லாரும் இருக்க நடுநாயகமா எம்.ஜி.ஆர். அமர்ந்திருந்தார்.
பாடல் வரிகளை கொடுத்து ரிகர்சல் பார்க்க சொன்னார்கள். மூன்று நாள் ரிகர்சல் நடந்தது. எம்.ஜி.ஆரும் அடிக்கடி வந்து ரிகர்சலில் உட்காருவார்.
அவருக்கு ஏதாவது கரெக்ஷன் தோன்றினால் கே.வி.எம். மாமா காதில் மெல்லச் சொல்லுவார்.
“அவ்வளவு அழுத்தம் வேண்டாம்னு சின்னவர் சொல்றார்டா” என்று அவர் என்னிடம் சொல்ல, நான் மாற்றிக் கொள்வேன். அவ்வளவு சாஃப்டாகத் தான் டீல் செய்வார் எம்.ஜி.ஆர்.
மூன்று நாள் ரிகர்சலுக்கு பிறகு, 10 நாட்கள் கழித்து ரிக்கார்டிங் என்று தேதி முடிவானது. குஷியாக வீட்டுக்குப் போன எனக்கு காய்ச்சல். ஏதேதோ மருந்து மாத்திரைகளை சாப்பிட்டும் சரியாகாமல் டாக்டரிடம் போய் டெஸ்ட் பண்ணிப் பார்த்தால் டைஃபாய்டு.
ஒரு மாசத்துக்கு ரெஸ்ட் எடுக்கணும் என்று சொல்லிவிட்டார். அதை நேரில் சென்று சொல்லக்கூட உடம்பில் தெம்பில்லாமல் ரூமிலேயே படுத்துக் கிடந்தேன்.
ரிக்கார்டிங்குக்கு ரெண்டு நாட்கள் முன்னால் பத்மநாபன் சார் வந்தார். நான் படுத்துக் கிடந்த நிலைமையைப் பார்த்து “சான்ஸ் கிடைக்காதான்னு பல பேர் ஏங்கிட்டு இருக்குற இடத்துல, உனக்கு தானா சான்ஸ் கிடைச்சது. கடைசியில இப்படி ஆயிடுச்சே தம்பி” என்று பரிதாபபட்டு, “உடம்பை பார்த்துக்கோ” என்று சொல்லிவிட்டு திரும்பிப் போய்விட்டார்.
கொஞ்ச நாளில் தேறி நான் காலேஜ் போகத் தொடங்கினேன். அந்தப் பாடலை யாரைப் பாட வைத்திருப்பார்கள் என்று என் மனதுக்குள் ஒரு கேள்வி இருந்து கொண்டே இருந்தது.
ஒரு மாதம் கழித்து பத்மநாபன் சார் மீண்டும் அறைக்கு வந்தார்.
“உன்னை கூட்டிட்டு வர சொன்னாங்க” என்றதும், சின்ன பையன் மனசு ஒடிஞ்சிடக் கூடாது என்று ஒரு கர்டஸிக்காக கூப்பிடுறாங்க போல என்ற நினைப்பிலே போனேன்.
ஆனால் அங்கே புகழேந்தி மாஸ்டர் ஆர்மோனியத்தோட உட்கார்ந்துகிட்டு, “உடம்பு பரவாயில்லையாடா… ஸ்டார்ட் பண்ணு” என்று அதே பாட்டை கொடுத்தார்.
எனக்கு ஒன்ணுமே புரியவில்லை. அதிர்ச்சியை வெளிக்காட்டிக்காம பாடினேன். நாளைக்கு ரிக்கார்டிங்னு சொல்லி அனுப்பிட்டாங்க.
அடுத்த நாள் நான் ஸ்டுடியோவுக்கு போனபோது அந்த இடமே பரபரப்பாக இருந்தது. நிறைய ஆட்கள் வந்திருந்தாங்க.
நான் பாடத் தொடங்கினதும், பி.ஆர்.பந்துலு, தேவர் சார் என ஒவ்வொருத்தரா உள்ளுக்குள்ள வந்து என் முகத்தைப் பார்த்துட்டு போறாங்க.
அவங்கலாம் யாருனே எனக்கு அப்ப தெரியாது.
சுசீலாம்மா தான், “அவங்கலாம் சாரோட ப்ரொட்யூசர்ஸ், டைரக்டர்ஸ். பத்திரிகைகாரங்க வந்திருக்காங்க. இதை பெரிசா பண்ணனும்னு சார் நினைக்கிறார்” என்று சொன்னார்.
ரிக்கார்டிங் முடிஞ்சதும் ப்ரஸ் மீட் வச்சு, என்னை அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆர்., “எல்லா ப்ரொட்யூசர்களும் இந்தப் பையனுக்கு வாய்ப்பு தரணும்னு நான் சொல்லல. ஆனா உங்க படத்துல ஒரு பாட்டாவது கொடுங்க. நல்லா பாடுறான்” என்று அவர் சொன்னார். இந்த அறிமுகம் போதாதா?
எல்லாரும் போன பிறகு என் தோள் மேல் கைபோட்டு, “நீ நல்லா பாடுற தம்பி… ஆனா எக்ஸ்பிரஷன் அதிகமா கொடுக்க முயற்சி பண்ற. அவ்வளவு வேண்டாம். அடக்கிவாசி அது போதும்” என்று சொன்னார். அவர் என் தோளில் கைபோட்டதும் எனக்கு தைரியம் வந்துடுச்சு.
“சார், எனக்காக ஏன் சார் ஒரு மாசம் காத்திருந்தீங்க?” என்று அவரிடமே கேட்டு விட்டேன்.
என் கழுத்தில் அவர் இரு கைகளையும் மாலையாக போட்டபடி என் கண்களைப் பார்த்து அவர் சொன்ன பதில் என்றைக்கும் என்னால் மறக்க முடியாது.
“பாலு… நீ என் படத்துல பாடப்போறன்னு நிறைய பேர்கிட்ட சொல்லி இருப்ப. ஒரு புதுப் பையன் எம்.ஜி.ஆர். படத்துல பாடப்போறான்னு இன்டஸ்ட்ரியிலயும் நியூஸ் பரவிடுச்சு.
அந்த நேரத்துல நான் வேற யாரையாவது வச்சு அந்தப் பாட்டை ரிக்கார்ட் செஞ்சிருந்தா, இந்தப் பையன் பாடினது எம்.ஜி.ஆருக்கு பிடிக்கலைனு எல்லாரும் சொல்லிருப்பாங்க. அது உன் எதிர்காலத்துக்கு நல்லது இல்ல. அதான் காத்திருந்தேன்” என்றார்.
இந்த மனசு தான் அவரை இன்னும் எல்லார் மனதிலும் வாழ வச்சுகிட்டு இருக்கு” என்று நெகிழ்சியுடன் கூறினார் எஸ்.பி.பி.
எம்.ஜி.ஆரை கடைசியாக சந்தித்தபோது கூட தன் மேல் அவ்வளவு பரிவுடன் அவர் பேசியதை நினைவுபடுத்திச் சொன்னார்.
“சின்னவரை நான் கடைசியா சந்திச்சது பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தான். அவர் இறந்து போவதற்கு சில மாதங்கள் முன் என்று நினைக்கிறேன்.
நானும் கங்கை அமரனும் அவர் அருகே சென்று வணக்கம் சொன்னதும், என்னை காட்டி “யார் இது?” என்று கேட்டார்.
உடனே அமர், “ஐய்யா, எஸ்.பி.பாலசுப்ரமணியன். மறந்துட்டீங்களா?” என்றதும்,
“பாலுவா! என்ன இப்படி தடிச்சுட்ட. உடம்பைப் பார்த்துக்க” என்று முதுகில் தட்டிக் கொடுத்தார். அது தான் அந்த மாபெரும் மனிதரை நான் கடைசியாக சந்தித்தது.”
– அருண் சுவாமிநாதன்