எங்கே செல்கிறாய், என் தேசமே…?

என் தேசமே… என் தேசமே!
எங்கே செல்கின்றாய்?
எரியும் கொள்ளியால்
ஏனோ உந்தன்
தலையைச் சொரிகின்றாய்?

யானை வழித்தடம்
மறித்தவன் இங்கு
ஞானி யாகிப்
போகின்றான்.

காமக் கடலினில்
நீந்திக்‌ களித்தவன்
தீவின் அதிபதி
ஆகின்றான்.

மேடையில் கோடிப்
பொய்களை விற்பவன்
தலைவன் என்று
மாறுகிறான்.

ஆடையில் பலப்பல
ஜோடனை செய்பவன்
அரியணை தன்னில்
ஏறுகிறான்.

கனவுகள் மட்டும்
உணவாய்த் தருபவன்
கடவுளாக
ஜொலிக்கின்றான்

காரை ஏற்றிக்
கொன்றவன் தானே
ஆளும் பதவியில் நிலைக்கின்றான்.

எரியும் மதத்தீ
பற்றி எரிய
சுற்றி நின்று
கை தட்டுகிறார்.

மேலும் மேலும்
பற்றிக் கொள்ள
பொய்யை நெய்யாய்
கொட்டுகிறார்.

வாக்கு வங்கியாய்
மதத்தை மாற்றும்
போக்கு தானே
நிலைக்கிறது

பாரதமே இந்தப்
பாவம் தன்னை
எந்தக் கங்கையில்
தொலைக்கிறது?

என் தேசமே! என் தேசமே!
எங்கே செல்கின்றாய்?
எரியும் கொள்ளியால்
ஏனோ உந்தன்
தலையைச் சொரிகின்றாய்?

– ஆதிரன்

You might also like