இலங்கை பயணக் குறிப்புகள்-6 / வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
இலங்கையில் இன்று ஒருவருக்கு ஒரு மாதத்துக்கான ‘காஸ்ட் ஆஃப் லிவ்விங்’ தொகை 36489.29 ரூபாய் ஆகும் என்கிறது ‘NUMBEO’ தளம்.
“இது சரியான கணக்கீடுதான்” என்கிறார் இலங்கை திரைப்பட இயக்குநர் ஹசீன்.
மேலும், “பாலை விட பால் மாவு பாவிப்பதுதான் இங்கே வழக்கம். ஒரு மாவு பாக்கெட் 300 ரூபாயாக உள்ளது. இதனால், தேநீர் கடையில் ஒரு டீ 100 முதல் 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
ஆனாலும், லாபம் இல்லை என பல தேநீர் கடைகள் மூடப்பட்டுள்ளன. 90 சதவிகிதம் அளவுக்கு ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன” என்கிறார்.
இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் கஜமுகன், “இதுதான் இலங்கை முழுவதும் உள்ள நிலை. சாதாரண மக்கள் பாலுக்கும் பாணுக்கும் அன்றாட அடிப்படைத் தேவைகளுக்கும் வரிசையில் காத்திருக்கிறார்கள். தமது அன்றாட வாழ்க்கையை தக்க வைக்கவே போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எரிபொருள் நெருக்கடியால் மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்ல முடியாத நிலை, விவசாயிகள் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த முடியாத நிலை, மின்சாரம் இன்மையால் தமது தோட்டங்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமை – இதனால் பயிர்கள் அழிவடையும் நிலை என பல அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் மக்கள்.
பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கள், அதுவும் குறிப்பாக பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
அன்றாடம் பொதுப் போக்குவரத்தை நம்பி தமது வாழ்வாதாரத்தை நகர்த்தும் உழைக்கும் வர்க்க மக்களுக்கு இது மிகப் பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது” என்கிறார்.
விலைவாசி எப்படியிருக்கின்றது.
கேஸ் சிலிண்டர் 1 – 4,390 ரூபாய்
தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர் – 750 ரூபாய்
பெட்ரோல் ஒரு லிட்டர் – 283 ரூபாய்
டீசல் ஒரு லிட்டர் – 213 ரூபாய்
அங்கர் பால்மா ஒரு கிலோ – 1960 ரூபாய்
கோதுமை மாவு ஒரு கிலோ – 180 ரூபாய்
சர்க்கரை ஒரு கிலோ – 185 ரூபாய்
தக்காளி ஒரு கிலோ – 330 ரூபாய்
உருளைக்கிழங்கு ஒரு கிலோ – 220 ரூபாய்
வெங்காயம் ஒரு கிலோ – 220 ரூபாய்
கேரட் ஒரு கிலோ – 290 ரூபாய்
முருங்கைக்காய் ஒரு கிலோ – 720 ரூபாய்
பீன்ஸ் ஒரு கிலோ – 240 ரூபாய்
தேங்காய் 1 – 100 ரூபாய்
பூண்டு ஒரு கிலோ – 450 ரூபாய்
புடலங்காய் ஒரு கிலோ – 180 ரூபாய்
பூசணிக்காயை ஒரு கிலோ – 220 ரூபாய்
மண்ணெண்ணெய் ஒரு லிட்டர் – 89 ரூபாய்
பருப்பு ஒரு கிலோ – 350 ரூபாய்
கோழி இறைச்சி ஒரு கிலோ – 900 ரூபாய்.
பொருளாதார ரீதியிலான பின்னடைவிற்கு எந்த தீர்வும் இல்லாமல் ஒரே தீர்வு இதுதான் என ஓடி ஓடி உலக நாடுகளிடம் கையேந்தி கடன் வாங்கி ஒவ்வொரு தனி இலங்கையரையும் கடனாளியாக்குகிறது அரசு.
மக்கள் அரசின்மீது வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறார்கள். பஞ்சம் பசி பட்டினி
பெரும்பான்மை சிங்கள மக்களிடமிருந்து தான் அரசின் மீதான எதிர்ப்பு உணர்வு அதிகளவில் வெளிப்பட்டிருக்கிறது.
எழுபது வயதான இரண்டு பெரியவர்கள் எண்ணெய்காக நீண்ட வரிசையில் பல மணி போது நின்ற போது இறந்து போயிருக்கிறார்கள்.
இப்படிப் பல துயர நிகழ்வுகள்.
நாமல் மாலதீவில் நீர்மட்டத்துக்கு மேல இருபதடி உயரத்துக்கு ‘எழுப்பி’ விளையாடுறார்
இந்த நிலையில், இலங்கையில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண சர்வ கட்சிக் கூட்டம் நேற்று (23.03.2022) அதிபர் கோத்பய தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் நடந்தது.
அந்த கூட்டத்தில், குறுகியகால மற்றும் நீண்டகால உத்திகளை முன்னெடுப்பதன் மூலம் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை பற்றி விவாதம் நடந்தாக தகவல்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மக்கள் ஐக்கிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஐக்கிய மக்கள் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீலங்கா மகஜன கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய முஸ்லிம் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை அமைப்பு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
லங்கா சமசமாஜ கட்சியின் பேராசிரியர் திஸ்ஸ விதாரண மற்றும் வண. அத்துரலியே ரத்தின தேரர் ஆகியோர் 11 தோழமை கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கான முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளை எதிர்பார்த்து இந்த மாநாடு கூட்டப்பட்டது.
கட்சித் தலைவர்களும் பிரதிநிதிகளும் எழுத்து மூலமாகவும், வாய்மொழியாகவும் தங்கள் முன்மொழிவுகளை சமர்ப்பித்தனர்.
நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் சர்வகட்சி மாநாட்டிற்கு எதிர்காலத்தில் வழங்குவார்கள் என்பதனைக் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், தற்போதைய பொருளாதார நிலைமையை மாநாட்டில் முன்வைத்தார்.
சமர்ப்பிக்கப்பட்ட அனைத்துக் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளையும் மீளாய்வு செய்வதற்குப் பொறிமுறை ஒன்றை உருவாக்கிப் பயனுள்ள முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்காக குழு ஒன்றை அமைக்க முடியும் என்பதனையும் அதிபர் தெரிவித்தார்.
பிரதமர் ராஜபக்சே, அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.