‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ (1960) என்று அந்தக் காலத்தில் ஒரு திரைப்படம். அதில், பாவலர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல் ஒன்று.
ஒரு பாடல் எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கு இன்றைக்கு வரை எடுத்துக் காட்டாய் இருக்கும் அந்தப்பாடல்.
அந்தப் பாடல் இப்படித் தொடங்கும்,
“என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே!
நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே?…”
நிலவுடன் நேர்படப் பேசும் அந்தக் காதலன், முதல் வரியிலேயே தனக்கு ஒரு காதலி இருப்பதைக் கூறிவிடுவான்.
‘என் காதலிக்கு நீ இளையவளா அல்லது மூத்தவளா?’ என்று கேட்பதன்மூலம் நிலவே நீயும் ஒரு பெண்தான் என்பதையும் காதலன் நினைவுபடுத்துவான்.
அதற்கடுத்த வரிகளில்,
“கண்விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே
உனைக் காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே?
கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே?
உன் காதலன்தான் கிள்ளியதோ வெண்ணிலாவே?” என்பான்.
ஆக, அந்த காதலனுக்கு மட்டுமல்ல, வெண்ணிலாவுக்கும் ஒரு காதலன் இருக்கிறான் என்பது இங்கே சுட்டிக்காட்டி விடுவான்.
சரி! நிலவிடம் பேசி, சில அறிமுக வார்த்தைகளை அள்ளி வீசி, ஐஸ் வைத்தாகி விட்டது. இனி, நிலவால் அந்தக் காதலனுக்கு ஆகவேண்டிய ஒரு வேலை இருக்கிறது. அதற்காகத்தான் இந்த ஆரம்பகட்ட குழைவு.
அதன்பின் காதலன்,
“கள்ளமில்லா என் இதயம் வெண்ணிலாவே,
ஒரு கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே,
அந்த வஞ்சிதனை நீ அறிவாய் வெண்ணிலாவே,
அதை வாங்கிவந்து தந்துவிடு வெண்ணிலாவே…”
காதலியிடம் அந்தக் காதலனின் இதயம் இருக்கிறதாம். அந்தக் கள்ளி யார் என்பது நிலவுக்குத் தெரியுமாம். அந்த இதயத்தை வாங்கி வந்து தன்னிடம் தந்துவிட வேண்டுமாம்.
அடுத்தது தான் இலக்கியச் சுவையின் உச்சம்.
“கெஞ்சினாள் தரமாட்டாள் வெண்ணிலாவே,
நீ கேட்காமல் பறித்துவிடு வெண்ணிலாவே…”
(அவகிட்ட போய் நீ என் இதயத்தைத் திருப்பிக்குடுன்னு கெஞ்சிக்கிட்டு எல்லாம் நிக்காத. அவ திருப்பித்தர மாட்டா. நீ கேட்காமலே அவகிட்ட இருந்து என் இதயத்தை லபக்குன்னு பறிச்சுக்கிட்டு வந்துரு)
“அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே.
இது அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே”
(அப்படி என் இதயத்தை அவகிட்ட இருந்து பறிச்சிக்கிட்டு வந்தா எதுனா பிரச்சினை வந்துருமோன்னு பயப்படாத. அவளே என்கிட்ட இருந்து கேட்காமத்தான் பறிச்சிட்டுப் போனா. அதனால அவகிட்ட இருந்து நீயும் கேட்காம பறிச்சிக்கிட்டு வர்றதிலே எந்தத் தப்பும் இல்ல)
என்ன அழகான பாடலை எழுதியுள்ளார் பாவலர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
நன்றி: முகநூல் பதிவு
22.03.2022 12 : 30 P.M