எம்.ஜி.ஆர். உயிரைக் குடிக்கத் துடித்த துப்பாக்கி!

எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் துரைராஜின் நேர்காணல்

“எம்.ஜி.ஆரின் உயிரைக் குடிக்கத் துடித்துக் கொண்டு இருந்த துப்பாக்கி குண்டை, நான் தான் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து வெளியேற்றினேன். அதன்பின், அதுவே என் அடையாளமாகிப் போனது” என்கிறார், சென்னை அடையாரில் வசிக்கும் 92 வயது மருத்துவர் ஆர்.துரைராஜ்.

தேனி மாவட்டம், சுக்காங்கல்பட்டி கிராமத்தின் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் துரைராஜ். மிகவும் சிரமப்பட்டு எம்.பி.பி.எஸ். படித்து, பின் எம்.எஸ். முடித்தார். தனியாக கிளினிக் வைக்காமல் ஓய்வுபெறும் வரை அரசு மருத்துவமனைக்கே அர்ப்பணித்தவர் துரைராஜ். பல்வேறு ஊர்களில், பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்.

எளிய, அறம் சார்ந்த தன் வாழ்க்கை குறித்து மக்களுடன் பகிர்ந்துகொள்ள, சுய வாழ்க்கை வரலாறை எழுதும் முயற்சியில் உள்ள டாக்டர் துரைராஜ், எம்.ஜி.ஆர். பற்றிய தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டவை.

“எம்.ஜி.ஆர். தர்ம சிந்தனையுடன், ஒரு சிறிய இலவச மருத்துவமனை நடத்தினார் என்பது பலருக்கு தெரியாது. அந்த மருத்துவமனையில் எம்.ஜி.ஆரின் குடும்ப டாக்டரும், என் நண்பருமான பி.ஆர்.சுப்பிரமணியன், தன் ஓய்வு நேரத்தில் மருத்துவ சேவையை வழங்கினார். என்னையும் அழைத்தார்.

நான் தனியார் கிளினிக்கில் வைத்தியம் பார்ப்பது இல்லை என்ற, என் கொள்கையை சொன்னேன்.

‘இது சேவை. எம்.ஜி.ஆரின் நல்ல உள்ளத்திற்காக, நாமும் சேர்ந்து ஓய்வு நேரத்தில் உழைப்போம்’ என்றார்.

சரி என்று ஒப்புக்கொண்டு, அங்கே கொஞ்ச காலம் பணியாற்றினேன்.

அவ்வப்போது எம்.ஜி.ஆர். அங்கு வந்து செல்வார். அவருக்கான மருத்துவ ஆலோசனையை என்னிடம் கேட்டுப் பெறுவார். அது அவருக்கு நல்ல பலன் தரவே, என்னை அவருக்கு மிகவும் பிடித்துப்போனது.

இந்த நிலையில் தான், 1967 ஜனவரி 12 ம் தேதி, மாலை 5:௦௦ மணிக்கு எம்.ஜி.ஆர். சுடப்பட்டார்.

எம்.ஜி.ஆரைச் சுட்ட நடிகர் எம்.ஆர்.ராதா, தன்னையும் சுட்டுக்கொண்டார். இருவரையும் கொண்டு வந்து, ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.

எம்.ஜி.ஆரின் குடும்ப டாக்டரான சுப்பிரமணியன், அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றிருந்தவர். அவர், என்னை உடனே ராயப்பேட்டை மருத்துவமனைக்கு வரவழைத்தார்.

அங்கே குண்டு பாய்ந்த நிலையில், ரத்தம் கொட்ட கொட்ட எம்.ஜி.ஆர். படுத்துக் கிடந்தார். ஆனாலும் சுயநினைவுடன் இருந்தார்.

என்னைப் பார்த்ததும், பிழைத்து விடுவோம் என்ற நம்பிக்கை அவருக்குள் துளிர்த்தது போலும். அவரது கண்களில் அப்படி ஒரு ஒளி.

சிறிதும் தாமதமின்றி சிகிச்சையை துவங்கினேன். காது வழியாக சென்ற குண்டு, அவரது அடி நாக்கை பாதித்தபடி இருந்தது.

மிகக்கவனமாக செயல்பட்டு, அந்த குண்டை அகற்றி கட்டுப்போட்டேன்.

அவருக்கு உணர்வு வந்ததும் ‘இனி உயிருக்கு பயமில்லை’ என்பதைச் சொல்லிவிட்டு வந்தேன். அதற்கு பின், நாங்கள் இருவரும் சந்திக்கும் சந்தர்ப்பம் கடைசி வரை அமையவே இல்லை.

நன்றி: தினமலர்

You might also like