கண்ணதாசனுக்கு மாற்றுக் கவிஞன் வாலி!

இயக்குநர் முக்தா சீனிவாசன், இதயத்தில் நீ (1963) படத்தை இயக்கிய பொழுது, வாலியை அழைத்துக் கொண்டு எம்.எஸ்.வியிடம், “இவர்.. வாலி நல்லா பாட்டு எழுதுவார்” என அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

எம்.எஸ்.வி, வாலியிடம் எதாவது பல்லவி சொல்லுங்கள் எனக் கேட்டிருக்கிறார்.
உடனே வாலி..

“பூவரையும் பூவைக்கு பூமாலை போடவா
பொன்மகளே வாழ்கவென்று பாமாலை பாடவா” என்று பாடியிருக்கிறார்.

அதைக் கேட்டதும் எம்.எஸ்.வி. மனதுக்குள் பாடிப் பார்த்துவிட்டு பூவைக்கு என்ற வார்த்தை மெட்டுக்குள் ஒட்டவில்லை, வேற வார்த்தை போட முடியுமா என வாலியிடம் கேட்டிருக்கிறார்.

உடனே வாலி, பூவைக்கு என்ற வார்த்தைக்குப் பதிலாக பூங்கொடியே என்று சேர்த்துப் பாடியிருக்கிறார்..

“பூவரையும் பூங்கொடியே பூமாலை போடவா
பொன்மகளே வாழ்கவென்று பாமாலை பாடவா”

அருமை, ஆனால் சரணத்துக்கு நான் போடுற மெட்டுக்குத் தான் எழுதணும்” என்று எம்.எஸ்.வி கூறியதும் சில நிமிடங்களில் சரணங்களை எழுதிக் கொடுத்தாராம் வாலி.

“கன்னமெனும் கிண்ணத்திலே
வண்ணங்களை குழைத்தாயே
கொஞ்சி வரும் புன்சிரிப்பில்
கொஞ்சம் கொஞ்சம் இறைத்தாயே”

– சரணங்களைப் படித்துவிட்டு “இவ்வளவு நாளா எங்கிருந்தீங்க?” என்று வாலியை வெகுவாகப் பாராட்டி விட்டு, இதே படத்தில் மேலும் சில பாடல்களை எழுதவும் வாய்ப்பளித்தார் எம்.எஸ்.வி (ஒடிவது போல் இடை இருக்கும், உறவு என்றொரு, யார் சிரித்தால்).

‘இதயத்தில் நீ’ படத்தில் எழுதிய பாடல் மூலம், எம்.எஸ்.வியின் இதயத்திலும் இடம் பெற்று விட்டார் வாலி..

கண்ணதாசனும் (தோட்டத்து மாப்பிள்ளை), மாயவநாதனும் (சித்திரப் பூவிழி) இதயத்தில் நீ படத்திற்கு பாடல் எழுதினர்.

குட்டைக் கவி கே.எஸ்.கோபால கிருஷ்ணன் ஒரு தீவிரமான கண்ணதாசன் ரசிகர், தான் இயக்கும் கற்பகம் படத்திற்கு கண்ணதாசன் தான் பாடல் எழுத வேண்டும் என முடிவு செய்திருந்தார்.

கோபால கிருஷ்ணனிடம் கற்பகம் படத்திற்கு இந்த புதுக்கவிஞர் வாலி பாடல் எழுதட்டும் எனப் பரிந்துரைத்தார் எம்.எஸ்.வி.

கோபால கிருஷ்ணன் இசையவில்லை.. சரி ஒரு பாட்டாவது வாலி எழுதட்டுமே என்றதும்.. சம்மதித்தார்.

“அத்தைமடி மெத்தையடி” என எழுதினார் வாலி!

கோபால கிருஷ்ணனுக்குப் பாடல் வரிகள் பிடித்திருந்தன.

பிடிச்சிருக்குல.. இன்னொரு பாட்டும் வாலி எழுதட்டும் என்று எம்.எஸ்.வி கூறியதும்
“மன்னவனே அழலாமா” என்ற பாடலை எழுதினார் வாலி.

கண்ணதாசனுக்கு மாற்றுக் கவிஞன் இல்லை என்ற கற்பிதத்தை உடைத்தார் வாலி. அதன் பிறகு எம்.எஸ்.வி, தான் இசையமைக்கும் படங்களில் வாலியையும் பாடல் எழுத பயன்படுத்திக் கொண்டார்.

ஆனால் ஆரம்பத்தில் கண்ணதாசனுக்கு இது பிடிக்கவில்லை, அதை எம்.எஸ்.வியே தெரிவித்திருக்கிறார்.

“கண்ணதாசனுக்கு என் மீது ஒரு வித அதீத பொஸஸிவ்னஸ் இருந்தது, வினோதமான மனிதர் அவர். அவர் மட்டும் எல்லா படக் கம்பெனிகளுக்கும் பாடல் எழுதுவார். மற்ற இசையமைப்பாளர்களுக்கும் வேலை செய்வார்.

ஆனால் நான் மட்டும் அவரை விட்டுவிட்டு இன்னொரு கவிஞரிடம் பாட்டு கேட்டால் பிடிக்காது. எனக்கு அவர் மட்டும் தான் எழுத வேண்டுமாம், அப்படியொரு உரிமையான பிடிவாதம் அவருக்கு இருந்தது”

You might also like