தந்தையை வணங்குவதில்லை, காரணம்?

1968, ‘சமநீதி’ இதழில் ரசிகர்களின் கேள்விகளுக்கு மக்கள் திலகத்தின் பதில்கள்.

***

கேள்வி : தாயை வணங்கும் நீங்கள் தந்தையை வணங்குவதில்லையா?

பதில் : தாயை வணங்கும் போதே எனக்கு தாயாகிய தந்தையையும் வணங்கி வருகிறேன் என்பதுதானே பொருள்.

நாட்டில் பலர் தந்தையை வணங்காவிட்டாலும், பல காரணங்களை முன்னிட்டு மரியாதை காண்பிப்பது உண்டு. அதே சமயம், தாயை மிரட்டி கூட தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்கிறவர்களும் உண்டு.

எனவேதான் என்னைப் பின்பற்றுகிற என் மீது அன்பு செலுத்துகின்ற அன்பர்கள் அனைவரும் தாய்க்கு முதலிடம் கொடுத்து வணங்குவதோடு, அன்பு செலுத்திப் பழகிக் கொள்வார்களானால் பெண் என்ற அலட்சியம் மாறி, பொதுவாக எல்லா பெண்களிடத்துமே தனி மரியாதை செலுத்தும் வழக்கம் தவிர்க்க முடியாமல் ஏற்பட்டுவிடும் என்று கருதுகிறேன்.

எனது பூஜை அறையில் தாய், தந்தை இருவரையுமே படங்களாக வைத்து வணங்கி வருகிறேன்.

கேள்வி : தாய்க்கு அடுத்த படியாக யாரை வணங்குகிறீர்கள்?

பதில் : தந்தையையும் என்னை வாழவைக்கும் தமிழ் நாட்டையும்.

கேள்வி : நீங்கள் இவ்வளவு புகழுடன் இருப்பதற்கு காரணம் யார்?

பதில்: நீங்கள் குறிப்பிடும் அளவுக்கு புகழோடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் இன்று இருப்பதற்கு காரணம் தமிழ்நாடு!

கேள்வி : தங்கள் மேல் நான் கொண்டுள்ள பாசத்தை உயர்வான ஒன்றுக்கு ஒப்பிட வேண்டும். அது என்ன?

பதில் : எனக்குத் தெரிந்தவரையில் அறிஞர் அண்ணா அவர்கள், தமிழின் மேல் கொண்டிருக்கும் பற்றை விட இறுக்கமான பற்று வேறொன்று இருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே உங்கள் அன்பு உள்ளபடியே உறுதியானதாக இருந்தால், அண்ணா தமிழ் மேல் கொண்டிருக்கும் அன்புக்கு ஒப்பிட முயலுங்கள்.

கேள்வி : அறிஞர் அண்ணாவை தெய்வமாக மதிக்கலாமா?

பதில் : எழுத்தறிவித்தவன் இறைவனாகும். இந்த நாட்டின் தலையெழுத்தை நிர்ணயித்து வழிவகுத்து தருகின்ற தமிழக முதலமைச்சரை (அறிஞர் அண்ணா) தெய்வம் என்றால் தகும்.

கேள்வி : நான் என்ற அகந்தை உள்ளவனின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

பதில் : சமூகத்தில் நாம் மட்டும் தனித்து விடப்பட்டோமே என்று ஏங்கும் அளவில் இருக்கும்.

கேள்வி : அறிஞர் அண்ணா சிலையின் மதிப்பு என்ன?

பதில் : மதிப்பிட முடியாத ஒருவரின் சிலையை வைக்க பெரும்பேறு அல்லவா நான் பெற்றிருக்கிறேன்.

கேள்வி : சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்கு ஓடி வருபவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் : நீங்கள் ஒரே வார்த்தையில் கேட்டு விட்டீர்கள். ஓடி வருபவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அதை எண்ணிப் பார்க்கும் போதே அப்படி ஓடி வருபவர்கள் இளம் பெண்களாக இருந்துவிட்டால் அவர்கள் சென்னையிலே படும் நரக வேதனை மிக கொடுமையானது… அப்பப்பா அதை எழுத்தால் எழுத முடியாது.

கேள்வி : உண்மை அழிந்த பின் நிலைத்திருப்பது என்ன?

பதில் : உண்மைதான். ஏனென்றால், அது அழிவது கிடையாது.

கேள்வி : மதுவை விட கொடியது எது?

பதில் : அதை அருந்தும் மனம்

கேள்வி : நான் உங்கள் ரசிகன். ஆனால் சிவாஜிகணேசனை யாராவது திட்டினால் கோபம் வருகிறது . நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

பதில் : உண்மையிலேயே நீங்கள் தான் என் ரசிகர் யார் எதைச் சொன்னாலும் கவலைப்படாதீர்கள்.

கேள்வி : நீங்கள் எதை நம்பமாட்டீர்கள்?

பதில் : நடிகர்களுக்கு கிடைக்கும் புகழ் நிரந்தரமானது என்பதை!

கேள்வி : நன்றி இல்லாத ஒருவனை நன்றியுள்ளவனாக்குவது எப்படி?

பதில் : நாம் நன்றி உள்ளவராக நடந்து கொள்வதன் மூலம்தான்.

கேள்வி : பத்மஸ்ரீ பட்டத்தை உதறித் தள்ளும் துணிவு உங்களுக்கு எப்படி வந்தது?

பதில் : நீதிக்கட்சியினர் தாங்கள் பெற்ற பட்டங்களை உதறித்தள்ள வேண்டுமென்று அன்றொரு நாள் தீர்மானம் கொண்டுவந்த அறிஞர் அண்ணாவின் தலைமையில் இயங்கும் தி.மு.கழக உறுப்பினன் நான்.

இந்த அண்ணன் காட்டும் வழியில் செல்லும் இலட்சக்கணக்கான தொண்டர்களில் ஒருவன் நான் உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டதல்லவா?

கேள்வி : நாட்டு மக்களுக்கு நீங்கள் உதவுவது போல் ஏனைய கலைஞர்கள் ஏன் உதவுவதில்லை?

பதில் : உதவுவதில்லை என்று எப்படி சொல்ல முடியும்? விரலுக்குத் தக்க வீக்கம் என்பதுபோல் அவர்களால் முடிந்ததை அவர்கள் செய்து கொண்டுதானிருப்பார்கள். வெளியே தெரிவதில்லை தெரிவிக்கப்படவில்லை என்பது குற்றமா?

கேள்வி : உங்களால் பாதிக்கப்பட்டவர் யாராவது உண்டா?

பதில் : நானே இருக்கிறேனே போதாதா

கேள்வி : மனிதன் பிறப்பது எதற்காக?

பதில் : இறப்பதற்காக! இப்படித்தான் பாட்டாளிகளை பார்த்து முதலாளி வர்க்கத்தில் சிலர் சொல்கிறார்கள்.

கேள்வி : எவ்வித எதிர்ப்புகளையும் தாங்கக் கூடிய மனப்பக்குவத்தை உங்களால் எப்படி அடைய முடிந்தது?

பதில் : எனது வளர்ச்சியினாலோ எனக்குத் தருகிற ஆதரவினாலோ இன்று எதிர்ப்புகள் எனக்கு இருக்கலாம்.

ஆனால், கடந்த காலத்தில் இப்படிப்பட்ட காரணங்கள் எதுவும் இல்லாமலே பல துன்பங்களையும் துயரங்களையும் தாங்கிக் கொண்டு பரிதாப நிலையில் வாழ்ந்தவன் நான்.

அதை எண்ணிப் பார்க்கும்போது இந்தத் தாக்குதல்களும் எதிர்ப்புகளும் எனக்கு மிக சாதாரணமாக தோன்றுகிறது.

– 1968,  ‘சமநீதி’ இதழில் ரசிகர்களின் கேள்விகளுக்கு மக்கள் திலகத்தின் பதில்கள்.

18.03.2022  10 : 50 A.M

You might also like