‘அழகர் கோயில்’ எனும் அருந்தமிழ் நூல்!

மண்ணின் வரலாறும், பண்பாட்டின் வரலாறும் இணைந்ததே கோயில் வரலாறு. ஆனால் பல பெருங்கோயில்களின் வரலாறுகள் புராணங்கள் புனைந்ததாக மாறி தெய்வீகத் தன்மை அடைந்துவிட்டன.

குடவாயில் பாலசுப்பிரமணியம் போன்ற சிலர், ஆதாரங்களைத் திரட்டி வரலாற்றுத் தன்மையோடு சில கோயில்களை பகுத்தாய்ந்து நூல்களை வெளியிட்டிருக்கிறாகள்.

அப்படி ஒரு நூல் தான் தொ.பரமசிவம் எழுதியுள்ள ‘அழகர் கோயில்’ நூல். இது ஓர் அருந்தமிழ் நூல்தான்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் அடிக்கடி சில நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்வார் கமல். அவ்வாறு அறிமுகம் செய்த புத்தகங்களில் ‘அழகர் கோயில்’ நூலும் ஒன்று.

“கடவுள் இல்லைன்னு யார் சொன்னா… இருந்தா நல்லாயிருக்கும்” என்று தசாவாரத்தில் நான் பேசிய வசனத்தை ஒரு விவாதத்தில் போகிறபோக்கில் உதிர்த்தவர், இப்படிப் பல முத்துக்களை உதிர்த்த ஐயா தொ.பரமசிவன் கோர்த்த முத்து மாலைதான் ‘அழகர் கோயில்’ என்றார் கமல்ஹாசன்.

“ஒரு பகுத்தறிவாளர் எழுதிய புத்தகத்தில் பக்தர்களின் உணர்வுக்கு எவ்வளவு இடம் கொடுத்திருக்கிறார் என்பதற்கான சான்று” என்று பெருந்தமிழஞறிஞர் தொ.பரமசிவனின் ‘அழகர் கோயில்’ புத்தத்துக்கு அறிமுகம் கொடுத்தார் உலகநாயகன் கமல்ஹாசன்.

நாட்டுப்புற வரலாற்றின்பால் மிகுந்த பற்றுகொண்டதால் இந்த நூல் வட்டார வரலாற்றுத் தன்மையோடும் பண்பாட்டுப் பதிவாகவும் அமைந்துள்ளது.

அழகர் கோயில் எளிய மக்களுக்கு நெருக்கமான கோயில். மதுரையின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த கோயில். நாட்டார் தெய்வத் தன்மை மிக்க சடங்குகளும் வழிபாடுகளும் நம்பிக்கைகளும் அந்தக் கோயிலில் நிரம்பியிருக்கின்றன.

புராணம், வரலாறு, இலக்கியம், செவிவழிக் கதைகளென எல்லா வடிவங்களிலும் அழகர் கோயில் நிலைத்திருக்கிறது.

தொ. பரமசிவன் அவர்கள் தன் முனைவர் பட்டத்துக்கான ஆய்வுத் தலைப்பாக எடுத்ததுதான் ‘அழகர் கோயில்’. அந்த ஆய்வை காமராஜர் பல்கலைக்கழகம் நூலாக வெளியிட்டுள்ளது. அழகர் கோயில் குறித்து குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் ஆய்வு செய்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற திருத்தலங்களில் அழகர் கோயிலும் ஒன்று. கோயிலின் நிலக்காட்சிகளை வார்த்தைகளில் சித்திரமாக்கும் ஆசிரியர் கோயிலின் கட்டுமானங்கள், சிற்பங்கள், மண்டபங்கள், திருச்சுற்றுகள், திருவீதிகள், கோபுரங்கள், கோயிலை ஒட்டியிருக்கும் நீர்நிலைகள் அனைத்தையும் அதனதன் தன்மைகளோடு ஆவணப்படுத்துகிறார்.

பூதத்தாழ்வார், இளம்பெருவழுதியாரின் பாடல்களையும் சிலப்பதிகாரத்தின் சித்திரங்களையும் சுட்டிக்காட்டும் ஆசிரியர், சீனி. வேங்கடசாமியின் கூற்றுப்படி இது பௌத்தக் கோயிலாக இருக்கலாம் என்ற கருத்தை ஆமோதிக்கிறார்.

நாயக்கராட்சியின் போதும், அதற்குப் பின்னரும் மதுரையின் அரசியல் தலைமையை எதிர்த்துப் போராடிய மேல்நாட்டுக் கள்ளர் குறித்த தரவுகள் வியக்க வைக்கின்றன.

யாதவ சமூகத்தினருக்கும் கள்ளழகர் கோயிலுக்குமான பந்தம் ஓர் அத்தியாயமாக விரிகிறது.

சித்திரைத் திருவிழாவில் கள ஆய்வு செய்து, வேடமிட்டு வழிபடும் அடியவர்களில் 33 பேர் சதவிகிதம் பேர் யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கண்டறிந்து பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கும் கோயிலுக்குமான தொடர்புகள் குறித்தும் விரிவான பதிவுகள் நூலில் உள்ளன.

திருவிழாக்களில் உள்ள சமூகத் தொடர்புகள் குறித்தும் திருவிழாக்களின் நோக்கங்கள் குறித்தும், அக்காலத்தில் இயல்பாக நடந்து இப்போது அதுவே வழக்கமான நடைமுறைகளானது குறித்தும் சுவாரஸ்யம் குறையாது பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு கோயில் குறித்த ஆய்வு எப்படியிருக்க வேண்டும் என்பதற்கும், ஒரு முனைவர் பட்ட ஆய்வேடு எப்படியிருக்க வேண்டும் என்பதற்கும் இந்த நூல் ஒரு சான்று.

பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் இயற்றிய ‘அழகர் அந்தாதி’, வேம்பத்தூர் கவி குஞ்சரமய்யர் எழுதிய ‘அழகர் கலம்பகம்’, சென்னை கீழ்திசைச் சுவடி நூலகத்திலுள்ள ஆசிரியர் பெயர் அறியப்படாத சிற்றிலக்கியங்கள், அடையாறு உ.வே.சா ஏட்டுச்சுவடி நூலகத்திலுள்ள ‘அழகம் பெருமாள் வண்ணம்’ என ஏராளமான நூல்களை, சுவடிகளை ஆய்வு செய்திருக்கிறார்.

சித்திரைத் திருவிழா குறித்து பழைய மரபுக் கதைகளும் நம்பிக்கைகளும் மிக விரிவாக இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அழகர் கோயிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பசாமி பற்றிய செய்திகளும் முழுமையாக ஆராயப்பட்டுள்ளன.

கதைப்பாடல்கள், நம்பிக்கைகள், கருப்பசாமியின் வைணவத் தொன்மையுடைய தோற்றம் குறித்தும் தொ.பரமசிவன் அவர்கள் ஆய்வு செய்துள்ளார்.

’மானுட வாசிப்பு’ புத்தகத்தில் தயாளன் மற்றும் ஏ. சண்முகானந்தம் அவர்களின் கேள்விகளுக்கு ஆசிரியரின் பதில் இந்த அழகர் கோயில் குறித்த சில தகவல்கள் கீழ்கண்டவாறு பதிவு செய்கிறேன்.

1)அழகர் கோயில் ஆய்வைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம்?

அழகர் கோயில் ஆய்வை நான் தேர்ந்தெடுக்கல. புதுமைப்பித்தன் பத்தி ஆய்வு பண்றேன்னுதான் சொன்னேன். என்னோட நெறியாளர் டாக்டர் சண்முகம் பிள்ளை தான் வேற எதாவது பண்ணு அப்படின்னாரு. அழகர் கோயில் பத்தி பண்ணுன்னாரு. சரி பண்றேன்னேன். அவ்வளவுதான்.”

2)அழகர் கோயில் பழமுதிர்ச்சோலை முருகன் கோயில் குறித்து?

நான் அதை மறுத்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். அழகர்கோயில் பழமுதிர்ச் சோலை அல்ல. 100 படை வீடுகள் உண்டு. ஆனால், பழமுதிர்சோலை அதிலே சேராது என்று கட்டுரை எழுதியிருக்கிறேன். அது நீதிமன்றத்திலே ஆவணமாக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

அது மிகவும் பிற்காலத்திலே மிஞ்சிப்போனால் 60 – 70 ஆண்டுகளுக்கு முன்னாலே பி.டி.ராஜன்னால் உருவாக்கப்பட்டது. சாம்பல்புத்தூர் மண்டபம் என்றுதான் அதற்கு பெயர்.

அந்த இடத்தை புளிக்குமிச்சான்மேடு என்பார்கள். ஒரு முருகன் சிலையை நிறுவி அவர் அதை பிரபலமாக்கிவிட்டார். பழனிவேல்ராஜனுடைய தந்தை பி.டி.ராஜன். அதற்கு பின்புதான் அதற்கு பழமுதிர்சோலை என்ற பெயரே தவிர எந்த ஆவணங்களிலும், அதற்கு பழமுதிர்சோலை பெயர் கிடையாது.

இந்த பெயரால் அதை வழங்கக்கூடாது என்று நீதிமன்றத் தீர்ப்பே உள்ளது.

3)கள்ளர் சாதி என்பது வைணவ சாதியா?

பிராமணர், வேளாளர் இரண்டு சாதியைத் தவிர மற்ற சாதிக் காரர்களுக்கு மதம் கிடையாது.

சிவன் கோயிலுக்கு போனால் அவன் சைவன், பெருமாள் கோயிலுக்குப் போனால் அவன் வைணவன். அவ்வளவுதான். இந்த வேதங்களெல்லாம் நாட்டார் மரபிலே பாதிப்பதில்லை.

4)அழகர் கோயில் முதல் மரியாதை தேர் வடம்:

எல்லா கோயில்களுமே தேர்வடம் இழுக்கும்போது அந்த மக்கள் சக்தி தேவைப்படுவதினாலே அந்த மக்கள் சக்திக்கு மரியாதை தரும் வகையிலே முதல் மரியாதை தரும் பழக்கம் வட்டார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் கொஞ்சம் வேறுபாடுகளோடு இருக்கும். இங்கே கள்ளர் சமூகத்திற்கு அந்த மரியாதை தரப்படுகிறது.

5)அழகர் வரும்போது கள்ளர் வழிமறிச்சாங்கன்னு சொல்றது?

அதான் உண்மை. அழகர் மதுரைக்கு வருகிறபோது இதே கள்ளர் சாதியினர் மறித்து தாக்குதல் நடத்தியது உண்மை. அது ஒரு போலச் செய்தலாக புனைவாக ஒரு எனாக்மென்டா (Enactment) மதுரையிலே இன்னும் நடத்திக் காட்டப்படுகிறது. ஆனாலும்கூட கோயில் என்ற பெரிய சமூக நிறுவனம் பண்பாட்டுச் சமரசம் செய்து கொள்கிறது.

6)மதுரை நாயக்கர் துலுக்க நாச்சியார் கட்டுரைக்கு ஒருவர் இந்து பத்திரிகையில்
மறுப்பு எழுதியுள்ளாரே?

பண்பாட்டுச் சமரசம் என்பதே கோயில் என்ற பெரிய நிறுவனம் ஏழை எளிய மக்களிடத்திலே சாதி நிலையிலே கீழ் தாழ்த்தப்பட்டவர்களோடு செய்து கொண்டது, பல ஊர்களிலே செய்து கொண்டது. திருவரங்கம் கோயிலிலும் இந்த பண்பாட்டு சமரசம் உண்டு.

அங்கே துலுக்க நாச்சியார் சன்னதி இன்றைக்கும் இருக்கிறது. ஆனால், சிலையாக இல்லை சித்திர ரூபமாக இருக்கிறது.

தென்னாற்காடு மாவட்டத்திலே திருமுட்டம் என்று வைணவக்கோயில். பூவராகவப் பெருமாள் கோயில். மூலஸ்தானத்திலேயே பன்றி வடிவத்திலே இருக்கிறார்.

உயிரினங்களிலேயே இஸ்லாமிய மக்களால் மிகவும் வெறுக்கப்படுகிற மிருகம் பன்றி.

அந்தப் பெயரையே ஒரு வசவாக அவர்கள் கருதுவார்கள். கள ஆய்விலே இஸ்லாமிய மக்கள் வந்து வழிபட்டு மற்றவர்களைப்போல தேங்காய் உடைத்து வழிபடுகிறார்கள்.

பன்றி வடிவப் பெருமாள் இருக்கிற கோயிலிலே இஸ்லாமிய மக்கள் வந்து வணங்குகிறார்கள். அந்தக் கோயிலிலே இஸ்லாமிய படையெடுப்பு
நடந்துள்ளது.

அப்படி இருந்தும் இஸ்லாமியர்கள் வருகிறார்கள். கோயில் நிர்வாகமும் அவர்களை ஏற்றுக் கொள்கிறது என்றால் அது பண்பாட்டுச் சமரசம்.

7)அழகர் சித்திரைத் திருவிழாவை நாயக்கர் சைவ வைணவ இணைப்புன்னு ஒரு விமர்சனம் இருப்பது குறித்து…

சைவ, வைணவ முரண்பாடுகள் கூர்மையாக இருந்த காலத்திலே மதுரை நாயக்க மன்னராக இருந்த திருமலைநாயக்கர் இதை செய்திருக்கலாம். ஆனால், மதுரைக்கு வருவதற்கு முன்னாலே அழகர் சோழவந்தான் போற வழியிலே உள்ள தேனூர் ஆற்றிலேதான் இறங்கினார்.

திருமலைநாயக்கர் காலத்திலே மாற்றினார் என்பதை எல்லா வாய்மொழி மரபுகளும் ஏற்றுக் கொள்கின்றன. சைவ, வைணவம் என்பது நாட்டார் மக்களைப் பொறுத்த அளவு பிரச்சனையே இல்லை.

கருப்பசாமி கோயிலுக்கு போகும்போது திருமண் வைத்திருப்பான். மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகிறபோது திருநீறு வைத்திருப்பான். அவர்களை இது பாதிப்பதே இல்லை.

சைவ வைணவ முரண்பாடுகள் கூர்மையடைகிற போது நாட்டார் மக்கள் எண்ணிக்கையிலே பெருந்தொகையாக இருப்பவர்கள், ஆயுதமேந்தி பழக்கப்பட்டவர்கள்.

இவர்களோடு சமரசமாக இருக்கணும்கிறதுக்காக இந்த திருவிழாவை அவர் உருவாக்கியிருக்கலாம்.

8)அழகர் வண்டியூருக்கு துலுக்க நாச்சியார் வீட்டிற்குப் போவதாக கதை சொல்கிறார்களே?

துலுக்க நாச்சியாருக்கு ஸ்ரீரங்கத்துலதான் சன்னதி இருக்கு. அதுவும் சித்திர ரூபத்துல. வண்டியூர் பெருமாள் கோயில்லதான் அழகர் தங்குறாரு. கேட்டா அந்த துலுக்க நாச்சியார் வீட்டுக்கு தங்கப் போறாரும்பாங்க.

9)துலுக்க நாச்சியார் போல, அழகர் கோயில் பதினெட்டாம் படிக்கருப்பு எப்படி சாத்தியமாச்சு?

வைணவம் நாட்டார் பண்பாட்டோடு பல இடங்களிலே சமரசம் செய்து கொள்கிறது. நானே நேர்ல பார்த்து எழுதியிருக்கேன். திருமலை ராயர்பட்டினத்துல பெருமாளை மாப்பிள்ளைன்னாங்க.

அதனாலே அந்த நம்பிக்கையின் அடிப்படையில் மீனவ சாதிப் பெண்கள் பெருமாள் நீராட வரும் போது பட்டினஞ்சேரி கடற்கரைக்குத் திருக்கண்ணபுரம் சவுரி ராஜபெருமாள் வருகிறபோது மருமகன் என்பதனாலே நேரிலே நின்று சாமி கும்பிட மாட்டார்கள். அந்த மரபை நேர்லயே பார்த்திருக்கேன். ஏன்னா மருமகனாம்.

10)மயிலை சீனி வேங்கடசாமி குறித்து…!
மயிலை சீனி வேங்கடசாமியை நேர்ல பார்த்திருக்கிறேன். ரொம்ப சந்தோஷப்பட்டாரு. ஏன்னா அவர் எழுதுறபோது அழகர் கோவில் பவுத்தக் கோவிலோன்னு சந்தேகப்பட்டாரு.

அவர் எழுதி 43 வருசம் கழிச்சு நான் ஒரு கட்டுரை எழுதிட்டுபோய் நீங்க எழுதுனது சரின்னு சொன்னபோது அவருக்கு சந்தோஷம் தாங்கல.

அவருக்கு அப்ப பேச முடியல. ஆனாலும், நல்லா கேட்டார். அவரைப் பார்த்தது பெரிய விசயம். மெட்ராஸ் யுனிவர்சிட்டில் ‘வைவா’வின் போது,

எப்படி சார் எழுதுனீங்கன்னுதான் முதல்ல கேட்டாங்க. தலைப் பிள்ளை மாதிரி அது பேர் சொல்லும் நூல்.

11) தமிழ்ச் சமூகத்துக்கு திணைக்கோட்பாடு
திணைக் கோட்பாடு தமிழர்களின் ஆழ்ந்த அனுபவத்தையும் இலக்கிய மேன்மையையும் காட்டக் கூடியது. காலத்தோடும், வெளியோடும் தொடர்பு கொண்டதுதான் எல்லாம் என்று சொல்லக் கூடியது திணைக் கோட்பாடு.

எத்னோகிராஃபிக் நாவல்னு இன்றைக்கு சொல்றாங்கல்ல. இனவரைவியல் நாவல்னா என்னது திணை இலக்கியம்தானே.

சாதி சார்ந்து வட்டாரம் சார்ந்து நிறைய நாவல்கள் வருது. இதெல்லாம் என்ன? திணைக் கோட்பாட்டினுடைய பின்தொடர்ச்சிதானே.

நிலம் சாராமல் எதுவும் இருக்க முடியாது. மொழிழையே… இவன் கன்னியாகுமரிக்காரன், இவன் கோயம்புத்தூர்காரன், இது மெட்ராஸ்காரன் பாஷை அப்படிச் சொல்றோம்ல. அது நிலம் சார்ந்ததுதான் என்கிறார் பரமசிவன்.

பரமசிவன் அவர்கள் கருத்துக்கடல். சமுத்திரம் போல.
கம்பர் சொல்லியது போல அவரைப் மிசை போல முற்றிலும் முழுவதும் சுவைக்க முடியாது.

****

அழகர் கோயில்

தொ.பரமசிவன் 

பனுவல் பதிப்பகம்

முதல்பதிப்பு 2021

விலை ரூ. 450.

நன்றி: முகநூல் பதிவு

You might also like