பிரித்த குடையில் நீரின் தடம்!

நூல் வாசிப்பு:

பெங்களூரில் வசிக்கும் கவிஞர் ரத்னா வெங்கட் எழுதிய கவிதை நூல் மீச்சிறு வரமென. சமகால தமிழ் கவிதை உலகில் நம்பிக்கையளிக்கும் கவிஞராக உருவாகியுள்ள அவர் நூலுக்கான முன்னுரையைக் கூட கவிதையாக எழுதியுள்ளார்.

நினைக்காத நேரத்தில் சேர்ந்து

நினைவாக மாறுகிற

காலகச்சத்துக்குள் அலை

நிகழ்த்திவிடுகிற அற்புதங்களும்

தந்து செல்லுகிற துயரின்

வடிவங்களும் அனுபவங்களெனில்

அவை நிலைத்திருக்க

உளங்கொள்ளட்டும்

அழிக்க இயலாத

புன்னகையென

அரூப நிழலென

மீச்சிறு வரமென… 

– என்று கவித்துவமாக முன்னுரையில் குறிப்பிடுகிறார் கவிஞர் ரத்னா வெங்கட்.

இந்த கவிதை நூலுக்கு எழுத்தாளர் அமிர்தம் சூர்யா எழுதியுள்ள வாழ்த்துரையை தாய் இணைதள வாசகர்களுக்காக தருகிறோம்…

நீந்தலின் இனிமையை மீன்கள் கற்றுக்கொடுக்க

மிதத்தலின் இலகுதன்மையை

மீன்களுக்கு சொல்லாமல் சொல்லிச் செல்கிறது சருகு

இதுதான், இந்த கவிதை காட்டும் உணர்வு தான் ரத்னா வெங்கட் எழுதிய இந்த பிரதியின் அடிநாதம். இது உணர்த்தும் எண்ணச் சரடுகளின் வெவ்வேறு ரூபங்களின் தொகுப்பு இது என்று தீர்ப்பு எழுதிவிட்டு அதன் சாரங்களை ஆராயலாம் நண்பர்களே.

இந்தக் கவிதையில், சருகின் முடிவை துக்கமாக சொல்லவில்லை. அல்லது சருகின் போதாமையை புலம்பவில்லை. அடித்துச் செல்லும் நீர் வாழ்வானால், இன்றைய நிலையில் உன் நிலை சருகானால் நீ இலகு தன்மையை உணர்.

அதை உணர்ந்தால் மட்டுமே மூழ்காமல் மிதக்கமுடியும் என்பதை மீனாக நீந்திக் கொண்டிருக்கும் இன்னபிற நபர்களுக்கு சொல்கிறது இந்தக் கவிதை.

மதகின் கதவுகள் திறக்கப்படுகையில் / பெருங்கனதியை / வடிக்கப்பார்க்கிறேன் – என்று கவிதை வரி வரும்.

இலங்கைக் கவிஞர் எம்.ஏ.நுப்ஃமான் எழுதிய ‘அழியாத நிழல்கள்’ என்ற தொகுப்பில் நீ இல்லாதிருக்கும் இழப்பின் கனதி என்ற ஒரு வரி வரும். மிக நீண்ட காலத்துக்கு பின் இபோது கனதி என்ற சொல்லை வாசிக்கிறேன்.

ரத்னா வெங்கட் கவிதையில் மதகின் கதவு திறப்பது – புறம். யாருக்கும் தெரியாமல் பெருங்கனதியை எப்படியாவது வடிக்கப் பார்க்கிறேன் என்பது அகம். கனதி என்றால் பாரம், மண், பளு என்று பொருள்கொண்டால் அகமும் புறமும் நடத்தும் விளையாட்டு பிடிபடும்.

பெருங்கனதியாக இருந்தாலும் அதில் குற்றப் பத்திரிக்கை இல்லை. ராஜாஜியின் குறை ஒன்றுமில்லை கோவிந்தா தான் மேலோங்கி இருக்கிறது.

இலக்கியச் சூழலில் ஒளவையாரிடம் ஆண்டாளின் அடர்த்தியையும் ஆண்டாளிடம் ஒளவையின் சமூக அக்கறையையும் எதிர்பார்த்து விமர்சிப்பது போன்ற அபத்தப்போக்கு  நிலவுகிறது.

நான் அந்த செயல்பாட்டுக்குள் அப்பாற்பட்டவன் ஆயினும் ஒரு பிரதிக்குள் நமது முன்னோர்களின் சாயை, சாரம் எவ்விதம் மாற்றம் பெற்று ஊடாடுகிறது என்பதை அவதானிப்பதில் சுகம் பெறுபவன்.. அந்த வகையில் இந்த அபிப்ராய உரை..

ரத்னா வெங்கட் மரபான இலக்கியத்திலும் பரிச்சயம் உள்ளவர். அதனாலேயே இந்த தொகுப்பில் அந்த ருசி உணர்வின் ஆதிக்கம் இழையோடுகிறது. இவர் ஆண்டாளின் அகத்தை “கைப்பற்றி உள்வாங்கும் பெருவெளியாய்” தம் வரிகளில் வைத்து விடுகிறார்.

அதேநேரம் சங்கப்பாடல்களின் புறத்தை சுவீகரித்துக்கொண்டு “முடிவிலியற்ற சுழற்சியில் அமைந்த“ தமக்கு அளிக்கப்பட்ட வாழ்வில் தமது எண்ணத்தை உணர்வை “உளச்சலனம்” இன்றி ஒப்புக்கொடுக்கிறார்.

புழுதி அடங்கி புலனடையா / குருதி காய்ந்த தடங்களில் / அங்கஹீனமாகி திரிவது /புறம் வாங்காத ஆன்மா – என்று அடர்த்தியான கவிதை வரிகளில் ரத்னா வெங்கட் சொல்வது,

அகம் எவ்வளவு உன்னதமானதாக இருந்தாலும் புறத்தை புறக்கணித்தால் அது அங்கஹீனமாகித்தான் திரியும். ஆகவே அகமும் புறமும் சரி சமமான விகிதத்தில் இருப்பதை இயங்க வேண்டியதை சொல்வதாக நான் கோனார் உரை எழுதிக் கொள்கிறேன் எனக்குள்.

காட்சிப்படுத்தலுக்கான சாத்தியம் மிகுந்த கவிதையில் கூட திட்டமிட்டு அதை புறந்தள்ளி அக்காட்சியின் உணர்வெழுச்சியை மட்டும் வாசகனுக்கு கடத்த முடியுமாவென முயற்சித்து பார்க்கிறார்.

அட்சயப் பாத்திரம், வாமனன், போதி மரம் என்று நமக்கு தெரிந்த படிமங்கள் வந்தாலும் அது இந்த தொகுப்பில் வேறு அடவு கட்டி ஆடுகிறது.

குறிப்பாக சொல்லவேண்டுமாயின் சக்கர வியூகம், காண்டீபம்…  பாரத யுத்தத்தில் நாம் அறிந்ததே.

அது இந்த பிரதியில் – விடுவித்த காண்டீபங்கள் / எடுப்பதற்கான / சக்கர வியூகத்தின் கண்ணி / ஆழ்மன நிர்பந்தங்கள் – என்று அறிவிக்கிறார்.

குடும்பமோ, சமூகமோ, இனமோ… யுத்தம் எந்த வகையில் இருந்தாலும் யார் சக்கர வியூகம் அமைத்தாலும் காண்டீபம் யார் கையில் இருந்தாலும் அதை அதன் செயல்பாட்டை வரையறுப்பது ஆழ்மன நிர்ப்பந்தம் தான், வேறு ஏதும் இல்லை என்பதுதான் இந்த கவிதையில் வரும் தொன்மத்தின் புது அடவு என்பதாக நான் விளங்கிக் கொள்கிறேன்.

கவிதாயினி ரத்னா வெங்கட் கவிதைகளின் இயங்கு உலகம் பற்றிச் சொல்வதென்றால்  புள்ளியிலிருந்து தான் கோடு தொடங்குகிறது. ஆனால் அந்தக் கோடு புள்ளிகளால் ஆனது என்பதை தான் வெவ்வேறு வகையில் எழுதிப் பார்க்கிறார்.

இரண்டு நிலைப்பாட்டையும் வரைந்து பார்க்கிறார் கவிதைகளால்.

உதாரணத்துக்கு சில…

கைக்கட்டி குற்றேவல் புரியும் / சேவகமும் புரிகிறது செயலழிந்து அடிமையாக்கும் /பூதமாயும் இருக்கிறது – என்கிறார். இதில் இரு செயல்பாடு.

அடுத்து… காதலுக்காகத்தான் அதிகபட்ச வார்த்தைகளை பயன்படுத்துகிறோம், கொட்டித் தீர்க்கிறோம்.

ரத்னா சொல்கிறார்… ”கொட்டிக் கவித்த வார்த்தைகளினூடே / இரைச்சலற்றுக் கிடக்கிறது / அதீத அன்பு” – என்று எழுதுகிறார். இங்கும் முரண்பாடான இரு செயல்பாடு.

இருப்பு பற்றி எழுதும் போது கூட ரத்னா வெங்கட்

“இருப்பதும் / இல்லாது போவதும் / எனது உரிமையாகட்டுமே – என்கிறார். இதிலும் இரு செயல்பாடு.

கண்ணனைப் பார்த்தாலும் ஆண்களைப் பார்த்தாலும் இவருக்கு  போர் வியூகம் வகுப்பதும் / புல்லாங்குழல் இசைப்பதுமான இரட்டை செயல்பாடாகவே பார்க்கிறார்..

ஆக, எப்படி அகம் புறம் கவிதைகளில் மாறி மாறி செயல்படுகிறது என்று சொன்னேனோ அதேபோல் அவரின் கவிதை இயக்கம் என்பதும் காந்தத்தின் வடக்கு, தெற்கு போல் வாழ்வின் இரு பகுதிகளால் ஆனதுதான்.

நேர்மறை, எதிர்மறை என்பதை ஒதுக்கவோ புறக்கணிக்கவோ குற்றப்பத்திரிக்கை வாசிக்கவோ அவசியம் இல்லை. அது நிக்கிரானுக்கிரகம் போல் நம் வாழ்வில் சுழல்வது என்கிறார்.

நிக்கிரானுக்கிரகம் என்றால் என்ன பொருள் தெரியுமா? ஒறுத்தலும் அருளுதலும் என்று பொருள். அதாவது தண்டணையும் கருணையும் என்று பொருள்.

இந்த இரு தன்மையில் தான் அந்த கிரகம் சுழல்கிறது ரத்னா வெங்கட்டின் கவிதையுலகமும் சுழல்கிறது.

அப்படியாயின் அந்த வாழ்வில் வலியும் இருக்குமே என்ன செய்வது?

ரத்னா வெங்கட் பார்வையில்.. வலி என்பது / பிரித்த குடையிலிருந்து / வழிந்து காய்ந்த / நீரின் தடம் – அவ்வளவே.

இந்த புரிதலை வாசகன் பெற்று விட்டால் காய்ந்த நீரின் தடம் போல் வலி என்பது வடு அல்ல என்று புரிந்து விடும்.

ஆன்மிகச் சாரமும் தத்துவ விசாரமும் கொண்ட முற்றிலும் ஒரு புதிய மொழி கவிதையை வாசித்த அனுபவம் பெற்றேன்.

இதனால் இன்னும் சில ஜன்னல்களை நானே திறந்துகொண்டேன்.

மீச்சிறு வரமென (கவிதைத் தொகுப்பு)
-ரத்னா வெங்கட்

வெளியீடு: பரிதி பதிப்பகம்,
ஜோலார்பேட்டை,
தொடர்புக்கு: 72006 93200
விலை ரூ.150

பா. மகிழ்மதி

14.03.2022 10 : 50 A.M

You might also like