எம்.ஜி.ஆருக்கு ரசிகனும், விமர்சகனுமாய்…!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ நூலிலிருந்து

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்களும் தலைவர் அவர்களும் எவ்வளவு நெருக்கம் என்பதை நான் சொல்லி யாரும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. இருவரும் நகமும் சதையுமாக இருந்தவர்கள்!

பாட்டி அஞ்சுகம் அவர்களை, ‘அம்மா’ என்று தான் எம்.ஜி.ஆர். அழைப்பார். தன்னுடைய மகனாகத் தான் எம்.ஜி.ஆரை நினைப்பார் பாட்டி. இதைப் பற்றி எல்லாம் எம்.ஜி.ஆரே சொல்லி இருக்கிறார். எனது, ‘முரசே முழங்கு’ நாடக நிறைவு விழாவிலும் எம்.ஜி.ஆர். பேசி இருக்கிறார்.

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் படப்பிடிப்புக்காக எம்.ஜி.ஆர். அவர்கள் செல்லும் போது விமான நிலையத்துக்கே வந்து முதல்வர் கலைஞர் அவர்கள் வழியனுப்பி வைத்தார்கள்.

‘அண்ணாவே வந்து வழியனுப்பியது போல இருந்தது’ என்று எம்.ஜி.ஆர். அவர்கள் குறிப்பிட்டார்கள்.

“நான் சுமார் ஏழு வயதுப் பையனாக இருக்கும்போது தாயிடமிருந்து முதன் முதலாகப் பிரிந்து நாடகக் கம்பெனியில் சேருவதற்காகப் புறப்பட்ட நாளன்று வாயிற்படி வரை நாங்கள் (நானும் என் சகோதரரும்) வந்தோம். உடனே ஓடிச் சென்று கூடத்தில் அழுதபடி உட்கார்ந்திருந்த தாயைக் கட்டி அணைத்து அழுதோம்.

எங்களைப் பெரியவர்கள் ஆறுதல் கூறி அழைத்துச் சென்றார்கள். வாசலைத் தாண்டும்போது மீண்டும் ஓடிக் கட்டிக்கொண்டு ஓவெனக் கதறி அழுவதுமாயிருந்த அந்த வாயிற்படிக் காட்சியினை இது இப்போது நினைவுறுத்தியது.

“கடைசியில் என் அண்ணா நான் இருக்குமிடத்திற்கே கலைஞரின் உருவில் தேடிவந்து ஆசி கூறிவிட்டார் என்பது போன்ற உணர்வு!” என்று எம்.ஜி.ஆர். அவர்கள் எழுதினார்கள். அந்தளவுக்கு கலைஞரோடு பாசமாக இருந்தார் எம்.ஜி.ஆர்.

1971 ஆம் ஆண்டு தனது பரங்கிமலைத் தொகுதியில் “கருணாநிதிபுரம்” என்று ஒரு பகுதிக்கு பெயரினைச் சூட்டி, அதற்கான பெயர்ப் பலகையினை அவரே திறந்து வைத்தார்.

அந்த விழாவில் அவர் பேசியது மறக்கக் கூடிய பேச்சா?

“தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் எனக்கும் இருபதாண்டுகளாகத் தொடர்புண்டு. அப்போது நான் கோவையிலே இருந்தேன்.

ஊருக்குள் பிளேக் என்ற நோய் பரவிக்கொண்டிருந்த காரணத்தால் குடும்பத்தை ஊருக்கு அனுப்பிவிட்டுக் கலைஞர் என் வீட்டில் வந்து தங்கினார். என் வீடு என்றால் அப்போது 12 ரூபாய் வாடகை வீடுதான், அதில் ஒன்றாக இருந்தோம்.

ஆனால், அவர் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவராகவும், நான் காங்கிரஸ்காரனாகவும் இருந்தேன். அப்போதெல்லாம் அவரை என் பக்கம் இழுக்க நான் முயற்சித்தேன்.

ஆனால் நிலைமை எப்படி ஆயிற்று?

நான் அவர் பக்கம் தான் ஈர்க்கப்பட்டேன். இன்று அவர் கழகத் தலைவராகவும், நான் கழகத்தின் பொருளாளராகவும் இருக்கும் நிலைமைக்கு அந்த ஈர்ப்பு நடைபெற்றுள்ளது.

கோவையில் இருந்தபோது பல்லாண்டுகளுக்கு முன்பு ராஜகுமாரி, அபிமன்யு போன்ற படங்களுக்கெல்லாம் கலைஞர் உரையாடல்களை எழுதினார். அந்தப் படங்களில் அவருடைய பெயர் வெளியிடப்படவில்லை.

இப்படிப் பிரபலப்படுத்தப்படவில்லையே என்பதற்காக அவர் தம்முடைய உழைப்பை, திறமையை காட்டாமல் இருந்ததில்லை. சலியாது உழைத்தார். தன் பெயர் வரவில்லை என்றாலும் தன் கருத்து வந்திருக்கிறது என்கிற திருப்தியில் உழைத்தார்.

அதுவும் கொள்கைப் பிடிப்புள்ள தம் கருத்துக்களை படத்தில் அவர் நுழைக்கத் தவறியதே இல்லை. தனக்கென ஒரு கொள்கை. தனக்கென ஒரு தலைவன் என்று வகுத்துக் கொண்டு பற்றோடும் பிடிப்போடும் அயராது உழைத்து வந்தவர் கலைஞர்” என்றெல்லாம் பாராட்டிப் பேசியவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.

எம்.ஜி.ஆர். அவர்கள் ‘பாரத்’ பட்டம் பெற்றமைக்காக தி.மு.க. தலைமைக் கழகத்தின் சார்பில் 1972ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் தேதி பாராட்டு விழா நடந்தது. அப்போது நன்றி தெரிவித்து எம்.ஜி.ஆர் பேசும்போது,

“கலைஞர் அவர்களுக்கும் எனக்கும் உள்ள பிணைப்பினைப் பற்றி இங்கே கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் எடுத்துக் கூறினார்கள்.

முரட்டுக் கதரைப் போட்டுக் கொண்டு கலைஞர் அவர்களை என் பக்கம் இழுக்க முயன்றேன் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் அதில் நான் அடைந்த தோல்வியை மகிழ்வோடு ஒப்புக் கொள்கிறேன்.

நான் முதன் முதலாகப் பெற்ற பட்டம் ‘புரட்சி நடிகர்’ பட்டம். அந்தப் பட்டத்தை எனக்கு முதன் முதலாகத் தந்து பாராட்டியவர் இன்று கழகத் தலைவராகவும் தமிழக முதல்வராகவும் இருக்கும் கலைஞர் அவர்கள்.

அன்றே எனக்குப் பட்டம் தரும் அளவுக்குத் தகுதி படைத்திருந்த அவரிடம் நான் என் தோல்வியை ஒப்புக்கொள்வதில் மகிழ்ச்சியே அடைகிறேன்.

எனக்குப் புரட்சி நடிகர் என்ற பட்டம் அளித்தபோதே கலைஞர் அவர்களைப்பற்றி நான் சொன்னது திருவாரூர் மு.கருணாநிதி என்ற சொற்களை தி.மு.க. என்று விளக்கிக் கூறி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அவருக்கும் பிறக்கும்போதே தொடர்பு உண்டு என்று சொன்னேன்” என்று குறிப்பிட்டார்.

இதை இங்கே நினைவூட்டுவதற்குக் காரணம், தலைவரும் எம்.ஜி.ஆர். அவர்களும் எத்தகைய நட்பு கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதற்காகத்தான்.

கோபாலபுரம் வீட்டுக்கு அவ்வப்போது வருவதை வழக்கமாக வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். அப்போது என்னிடம் அன்பாகவும் பாசமாகவும் இருப்பார் அவர்.

என்னிடம் திரைப்படங்கள் குறித்துத்தான் அதிகமாகப் பேசுவார். கேட்பார். குறிப்பாக, அவர் நடித்த படங்களைப் பற்றித்தான் அதிகமாகக் கேட்பார்.

கதை எப்படி இருக்கிறது, எனது நடிப்பு எப்படி இருந்தது என்பதை துருவித்துருவிக் கேட்பார். நான் மனதில் பட்டதை தயங்காமல் சொல்வேன். அவரது படங்களும் நடிப்பும் எனக்குப் பிடிக்கும் என்பதால் எம்.ஜி.ஆர். ரசிகனாகவே நான் மாறி இருந்தேன்.

அவர் என்னிடம் அது பற்றி கருத்துக் கேட்பதை வழக்கமாக வைத்திருந்ததால் விமர்சகனாகவும் ஆகி இருந்தேன். அவர் கேட்பார் என்பதற்காக முதல் நாள், முதல் காட்சி பார்த்துவிடுவேன். நான் படத்தை பார்த்திருப்பேன் என்பதை அறிந்து அவரும் தொலைபேசியில் அழைத்து கருத்தைக் கேட்பார்.

அப்படிப் பேசும் போது, ஒரு நாள் அவரை ‘சார்’ என்று சொல்லிவிட்டேன். சில நாட்கள் கழித்து கோபாலபுரம் வந்திருந்தார் எம்.ஜி.ஆர்.

தலைவருடன் மாடியில் இருந்து கீழே இறங்கிய எம்.ஜி.ஆர். அவர்கள் என்னைப் பார்த்ததும், தலைவரைப் பார்த்து… “உங்கள் மகன் என்னை சார் போட்டு அழைக்கிறான்” என்று எம்.ஜி.ஆர். சொன்னார்.

சார் என்பது நெருக்கத்தைக் குறைக்கும் சொல்லாகக் கருதி அவர் அப்படிக் கூறியதாகத் தெரிந்தது.

நானும், “இனி அப்படிச் சொல்ல மாட்டேன்” என்று அவரிடம் சொன்னேன். தோளில் தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றார் எம்.ஜி.ஆர்.

முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி மறைந்த போது அவர் குடும்பத்துக்கு நிதி வழங்க தலைவர் நிதி திரட்டினார்.

கோபாலபுரம் இளைஞர் திமுக சார்பிலும் நிதி திரட்டி வழங்கினோம். எம்.ஜி.ஆர். படத்தை திரையிட்டுத்தான் நிதி திரட்டிக் கொடுத்தோம். அப்போது எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் மேலாளராக இருந்த பத்மநாபனிடம் கேட்டோம். அவரும் அனுமதி கொடுத்தார்.

‘நாடோடி மன்னன்’ படத்தை திரையிட்டோம். அது ராம் திரையரங்கத்தில் பகல் காட்சியாக திரையிடப்பட்டது.

தனது படத்தை எப்போதும் இரவுக் காட்சியாகத் திரையிட வேண்டும் என்று தான் எம்.ஜி.ஆர். நினைப்பார். நான் பகல் காட்சியாகத் திரையிடுகிறேன் என்பதை அறிந்து கோபம் அடைந்துவிட்டார்.

ராம் திரையரங்குக்கு போன் செய்தார். தியேட்டர் மேலாளர் ரத்தினத்தை அழைத்து என்னை கூப்பிடச் சொன்னார். நான் போனை எடுத்து பேசிய போதும் கோபப்பட்டார்.

‘யாரைக் கேட்டு என்னுடைய படத்தை பகல் காட்சியாகத் திரையிடுகிறாய்?’ என்று கேட்டார்.

‘மேனேஜர் பத்மநாபனுக்கு சொல்லிவிட்டேன். ஏ.கோவிந்தசாமி அவர்களின் குடும்பத்துக்காகத் தான் நிதி திரட்டுகிறோம்’ என்று நான் அவருக்கு சமாதானம் சொன்னேன். உடனே அவரது கோபம் தணிந்தது. சரி என்று சொல்லிவிட்டார்.

கோபாலபுரம் இளைஞர் திமுகவை நான் தொடங்கி நடத்திய நிகழ்ச்சிகளுக்கு வந்திருந்து, ‘இந்த இளைஞர்களைப் பார்த்து பெருமைப்படுகிறேன். தியாகம் செய்யும் பரம்பரை இருக்கிறது. என்று தெரிகிறது’ என்று பாராட்டியதாக இருந்தாலும்;

‘முரசே முழங்கு’ நாடகத்தின் நிறைவு விழாவில் பேசும் போது, கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு கட்சிப் பணிகளில் ஆர்வம் செலுத்து என்று வழிகாட்டியதாக இருந்தாலும்;

தனது படங்களுக்கான விமர்சனங்களை என்னையும் பெரிய மனிதனாக நினைத்துக் கேட்டதாக இருந்தாலும்;

தனிப்பட்ட முறையில் என்மீது எம்.ஜி.ஆர். அவர்கள் வைத்திருந்த அன்பாகவும், எங்கள் குடும்பத்தின் மீது அவர் வைத்த பாசமாகவும் தான் இருந்தது.

அத்தகைய சூழலில் அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டும் குறிப்பாக தலைவர் கலைஞரைப் பிரிந்தும் போனது அன்று மட்டுமல்ல, இன்று கூட நினைத்தால் அது மர்மமான செய்தியாகவே இருக்கிறது.

அப்போது எனக்கு 19 வயது. பாதி மாணவனாகவும், பாதி அரசியல்வாதியாகவும் இருக்கிறேன்.

1971 சட்டமன்றத் தேர்தலில் கழகமும் கலைஞர் அவர்களும் அடைந்த மாபெரும் வெற்றிக்குப் பின்னால் கழகத்தைப் பிளவுபடுத்த பல்வேறு சதிச்செயல்கள் நடந்து வருவது அப்போது செய்திகளாக உலா வந்தன.

அந்த சதி வலையில் எம்.ஜி.ஆர். அவர்கள் சிக்குவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என் மனதுக்குள் ஒரு தெளிவைக் கொடுத்தது என்றே சொல்ல வேண்டும்.

நட்பு, உறவை விட கழகம் பெரிது. கழகத்தின் கட்டுப்பாடு பெரிது என்பதுதான் அது.

தலைவர் கலைஞர் மீது மிகப் பாசமாக இருந்தவர் தான் எம்.ஜி.ஆர்.

அவரே கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கண்ணியக் குறைவாக பொது மேடைகளில் பேசும் போது நட்பு, பாசம் ஆகியவற்றைக் கூட ஒதுக்கிவைத்துவிட்டு கழகம் தான் முக்கியம் என்று முடிவெடுத்தார் தலைவர்.

இது சிறுவயதில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அரசியல் பாடம் ஆகும்.

****

உங்களில் ஒருவன்
மு.க.ஸ்டாலின்
பூம்புகார் பதிப்பகம்
பக்கங்கள் 336
விலை – ரூ.500/

You might also like